மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

210 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதன் காரணமாக பிரதேச செயலக பிரிவுகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீர்மானங்களை எடுப்பதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்  தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன் தினம் 232தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது மாவட்டத்தில் ஒரு நாளில் இனங்காணப்பட்டுள்ள அதிகூடிய தொற்றாளர்களாகும்.

தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி பயணத்தடை நீக்கப்படும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வகையான நடைமுறைகளை பின்பற்றுவது என்பது குறித்து   ஆராயப்பட்டது.

இதற்கினங்க சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பிரதேச செயலக மட்டத்தில் இரண்டு தினங்களுக்கு ஒரு முறை பிரதேச செயலாளர்கள்,சுகாதார வைத்திய அதிகாரி,பாதுகாப்பு தரப்பினர்,ஏனைய தரப்பினர்கள் 15பேர் அடங்கிய குழுவொன்று கூடி அந்ததந்த பகுதிகளில் உள்ள நிலைமைகளை ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்து எங்களுக்கு அறியத்தருவதன் மூலம் அவற்றினை நாங்கள் தேசிய கோவிட் செயலணிக்கு அனுப்பி அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு சில தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியமாக எல்லோராலும் உணரப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரணம் ஒன்று ஏற்பட்டால் அதன் பின்னர் எட்டு தினங்கள் வீடுகளில் ஓன்றுகூடுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இதன்காரணமாக பரவல் தீவிரமடைவதாக சுகாதாரப் பிரிவினரால் தெரிவிக்கப்பட்டது.

எனவே ஒரு வீட்டில் மரணம் ஏற்பட்டால் மரண வீட்டில் பத்து தினங்கள் ஒன்றுகூடுவது, தேவையற்ற கூட்டங்களை கூட்டவேண்டாம் என்ற அறிவித்தல் பொதுச்சுகாதார பரிசோதகர் ஊடாக வழங்கப்படும். அதனை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெரியகல்லாறு 02ஆம் 03ஆம் கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 21ஆம் திகதி நாடு திறக்கப்பட்டாலும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதன் காரணமாக பொது இடங்களிலும் சந்தைபோன்ற இடங்களிலும் ஏனைய பகுதிகளிலும் நாளாந்தம் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பில்  காவல்துறையினரும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

சுகாதார நடைமுறைகளை மீறுதல்,ஒன்றுகூடுதல்போன்றவை மேற்கொள்வோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4519குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளனர்.ஆறு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்

Leave a Reply