Home செய்திகள் மட்டக்களப்பில் காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பில் காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள்  நாளை முன்னிட்டு வடகிழக்கு மாகாணத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

IMG 7363 மட்டக்களப்பில் காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

மனித உரிமைகள் மதிக்கப்படாத நாட்டிலிருந்து ஆயிரம் நாட்களுக்கு மேலாக நீதிகோரி போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற தொனிப்பொருளில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை மட்டக்களப்பில் போராட்டம் நடாத்துவதற்கு மட்டக்களப்பு பிரதானபேருந்து நிலையத்திற்கு வருகைதந்த தாய்மாரை அங்கிருந்து செல்லுமாறு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்த நிலையிலும் அதனையும் கடந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தந்தை செல்வா நினைவுப்பூங்கா முன்பாக ஒன்றுகூடிய காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

காணாமல்போன தங்களின் உறவுகளின் புகைப்படங்களையும் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் உறவினர்கள்  கலந்துகொண்டிருந்தனர்.

‘எமது உறவுகளை மலினப்படுத்தாதே,எம் கண்முன்னே இழுத்துச்செல்லப்பட்ட எமது உறவுகள் எங்கே,சர்வதேசமே மனித உரிமைகள் பேச்சளவில்தானா,நீதி கேட்கும் நாங்கள் அப்பாவிகள் எங்களை ஏன் தீவிரவாதிகளாக பார்க்கின்றீர்கள்,எமது உறவுகளை தேடுவது தேசவிரோதமா,மனித உரிமைகள் எமக்கு இல்லையா போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் நிலவும் காலம் என்ற காரணத்தினால் மட்டுப்படுத்தப்பட்டவர்கள் கலந்துகொண்டு சுகாதார நெறிமுறைகளை பின்பற்றியவாறு இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,பா.அரியநேத்திரன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்,மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள்,காணாமல்போனவர்களின் உறவினர்கள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சர்வதேச மனித உரிமைகள் நாளைில் காணாமல்போன தமது உறவுகளை கண்டறிவதற்கான நிலையினை இழந்து நிற்பதாக, என்னும் தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்பிவைப்பதற்கான மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டு  மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் அடிகளாரிடம்   கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நீண்டகாலமாக தாங்கள் தமது உறவுகளை தேடி பல போராட்டங்களை நடாத்திவருகின்றபோதிலும் தமது குரல்வளைகளை நசுக்கும் செயற்பாடுகளே இந்த நாட்டில் முன்னெடுக்கப்படுவதாகவும் தமக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும்  கவலை தெரிவித்துள்னர்.

நாங்கள் இந்த அரசாங்கத்திடம் சொத்து சுகம் கோரவில்லை,உங்களினால் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்ட எங்கள் உறவுகளையே கேட்கின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

எங்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்கும் என்று நம்பவில்லை.இந்த நாட்டில் எங்களது உறவுகளை தேடி எங்களுக்கான நியாயத்தினைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் தலையிடவேண்டும்,ஐநா மனித உரிமைகள் ஆணையம் எமக்கான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந் நிலையில், காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடிய நிலையில் அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைக்கமுற்பட்டபோது அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

அங்கு வந்த பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் அங்கிருந்த காணாமல்போனவர்களின் உறவினர்களை, அங்கிருந்துசெல்லுமாறு கோரிய நிலையில் அதற்கு அங்கிருந்தவர்கள் தம்மால் செல்லமுடியாது எனத் தெரிவித்ததையடுத்து இரு பகுதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கடந்த காலத்தில் மட்டக்களப்பில் அரசியல்வாதிகள் பல்வேறு நிகழ்வுகளையும் ஒன்றுகூடல்களையும் செய்யும்போது அங்கு சென்று எந்த நடவடிக்கையும் எடுக்காத நீங்கள் எங்களிடம் வந்து இவ்வாறு நடந்துகொள்வது மிகவும் கவலைக்குரியது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஏற்பாட்டாளர் இதன்போது வாதாடினார்.

கடந்த காலத்தில் செங்கலடி பகுதியில்  சுகாதார துறையிடம் அனுமதிபெற்று கவன ஈர்ப்பு போராட்டம் செய்தபோது தாங்கள் துரத்தப்பட்டதாகவும் அதன் காரணமாக மீண்டும் ஒரு தடவை அந்த தவறை தாங்கள் செய்ய விரும்பாத காரணத்தினாலேயே சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அனுமதிபெறவில்லையெனவும் அவர்  தெரிவித்தார்.

இதையடுத்து அங்குவந்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன்,மக்கள் தங்களது போராட்டத்தினை முன்னெடுக்கமுடியும் எனவும் செல்வா சிலையருகே போராட்டத்தினை நடாத்துமாறு கூறிச்சென்றார்.

இந்நிலையில்,தமது உத்தரவினை மீறி  ஒன்றுகூடினால் உங்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவேன் என சுகாதார வைத்திய அதிகாரி மிரட்டியபோதிலும் “நீங்கள் முடிந்ததை செய்யுங்கள் நாங்கள் இந்த போராட்டத்தினை நடாத்தியே தீருவோம்“ என்று கூறி அங்கிருந்து சென்று தந்தை செல்வா நினைவு பூங்கா அருகே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version