மக்கள் இருப்பிடங்களுக்கு திரும்பிய நிலையில் மீண்டும் மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் நேற்று மாலை முதல் பெய்ய ஆரம்பித்துள்ளதனால் மீண்டும் நெருக்கடி நிலையேற்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தன.

பல இடங்களுக்குமான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் படகுகள் மூலம் போக்குவரத்துகள் இடம்பெற்றுவந்தன.

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக மழை ஓய்ந்து சீரான காலநிலை நிலவியதன் காரணமாக மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பியதுடன் இடம்பெயர்ந்த மக்களும் தமது இருப்பிடம் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்துள்ளதனால் மீண்டும் மக்கள் இடம்பெயரும் நிலையுருவாகியுள்ளது.

நேற்று மாலை முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இருப்பிடங்களும் நீரில் மூழ்கியுள்ளன.