இந்திய விஜயத்தைமேற்கொண்டுள்ள சிறீலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பரிவாரப் பட்டாளத்தில் தமது அரசுத் தரப்பு எம்.பியான பிரசன்ன ரணவீரவையும் அழைத்துச் சென்றிருந்தார். புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்புக்களின் பின்னர் தனது முகநூல் பக்கத்தில் அவர் போட்ட சில பதிவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில் அஇவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“மஹிந்தவின் 52 நாள் ஆட்சி அமளியின் போது நாடாளுமன்றத்தில் அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்த சமயத்தில் நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டதல்லவா? அப்போது ஐ.தே. முன்னணி எம்.பிக்கள் மீது சபைக்குள் மிளகாய்த்தூள் கலந்த தண்ணீரை வீசி “நாடாளுமன்றச் சம்பிரதாயத்தை” மேன்மையுறவைத்தவர் இவர்தான்.
அவருக்கு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி,சஞ்சய் காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எல்லாம் யார் என்று தெரியவில்லை. அவ்வளவு தூரம் இந்தியாவைப் பற்றிய அறிவு அந்த இலங்கை எம்.பிக்கு.

புதுடில்லியில் மகாத்மா காந்தியின் நினைவு நிகழ்வின் போது ராகுல் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கின்றது. பார்த்தார், மகாத்மா காந்தி வயதானவராக இருக்கின்றார். இவர் ராகுல் காந்தி இளைஞர். அவரும் காந்தி, இவரும் காந்தி.
பிறகென்ன? தமது முகப்புத்தகத்தில் “மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவரின் பேரனான ராகுல் காந்தியை சந்தித்தேன்” என்று பதிவிட்டாராம். நல்ல அறிவுஜீவியைத்தான் மஹிந்தர் தன்னுடன் புதுடில்லிக்குக் கூட்டிக் போய் இருக்கின்றார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பலரும் சுட்டிக்காட்டியதையடுத்து அவர் தனது பதிவை திருத்திக்கொண்டுள்ளார்.