Home ஆய்வுகள் மகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி

மகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி

771 Views

மேஜர் சோதியாவுடன் இறுதி நேரத்தில் பயணித்த முன்னாள் போராளி ஒருவர் அவரின் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்.  11.01.2021 அன்று மேஜர் சோதியா அவர்களின் 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18ஆம் நாளில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட  முதலாவது மகளிர் பயிற்சி முகாமில் பயிற்சியினை முடித்து, சோதியா என்ற பெயருடன் வெளியேறுகிறார் மைக்கேல் வசந்தி.

அந்தக் காலகட்டங்களில் போராட்டத்தில் இணைந்த பெண்கள், ‘சுதந்திரப் பறவைகள்’ என்னும் பெயரில் பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டிருந்தனர். தமிழீழத்தில் அதற்குப் பொறுப்பாக தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் இருந்தா். அதே காலகட்டத்தில் தான் இரண்டாவது பயிற்சிப் பாசறைக்குப் பெண்கள் சேர்க்கப்பட்டார்கள்.

1987ஆம் ஆண்டு திருநெல்வேலியிலுள்ள எமது முகாமில் தான் நான் சோதியா அக்காவை முதன்முதலில் பார்த்தேன். முதல் பார்வையிலேயே அவரை எனக்குப் பிடித்து விட்டது. சைக்கிளில் வருவார், போவார். அவர் எமது முகாமில் ஒரு அறையில் தொலைத் தொடர்பு வேலைகளை செய்து வந்தார். யாழ். கோட்டை முற்றுகை சண்டையின் பின்னர் நான் அவரைப் பார்க்கவில்லை.

 

பின்னர் ஒரு வருடம் கழித்து புனிதபூமி முகாமில் தான் நாம் ஒன்றாகச் சந்தித்தோம். அப்போது தேசியத் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில்  இருந்த காலம். அங்கே மகளிர் மருத்துவப் போராளியாக நான் சோதியா அக்காவைப் பார்த்தேன்.

அவரை ஓர் அன்பான தாயாகப் பார்த்தேன். அவரின் அன்பு, கவனிப்பு, அரவணைப்பு மிகவும் புனிதமாக இருந்தது. கம்பீரமான அந்தத் தோற்றம், எல்லோரையும் கவரும் அந்த துல்லியமான பார்வை, அன்பான அரவணைப்பு எல்லாம் போராளிகளையும் கவர்ந்து விட்டது. பிரிக்க முடியாத ஒரு உறவை உருவாக்கி விட்டது.

இன்பங்கள், துன்பங்கள், பாசங்கள் எல்லாம் கடந்து எமது வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. அதேவேளையில் மகளிர் அணியில் அங்கத்தவர்  சேர்க்கை அதிகமாகியது. இந்தவேளையில் எமது தலைவர் அவர்கள், சோதியாவை மகளிர் படையணியின் தளபதியாக நியமித்தார்.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலம். காட்டு வாழ்க்கை. மகளிர் வளர்ச்சி அசுர வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அதேவேளை நான் அங்கே மருத்துவப் போராளியாக  சோதியா அக்காவுடன் கடமையாற்றிக் கொண்டிருந்தேன்.

1989ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். அதாவது கிறிஸ்து பிறந்த கிறிஸ்மஸ் நேரம். போராட்டங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக நாங்கள் இருந்த தருணம் மறக்க முடியாது. இறுதியாக அவரின் சந்தோசம் 1990 ஆங்கிலப் புதுவருடம் ஆகும்.

பச்சைப்பசேல் என இருந்த அந்த இயற்கை அடங்கிய மணலாறுக் காடு. சோதியா அக்காவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இந்தச் செய்தி தலைவருக்கு  அறிவிக்கப்பட்டது. அப்போது மரு த்துவப் பிரிவிற்குத் தலைமை தாங்கியவர் ஓர் ஆண் வைத்தியர் ஆவார். அவரை அழைத்த தலைவர் அவர்கள், என்னையும் அழைத்தார். நேரடியாக சோதியாவைப் பார்வையிட்டு மருத்துவம் பார்க்கும்படி கட்டளை இட்டார். அதனை நாம் செயற்படுத்தினோம். எமது இடத்தில் இருந்து சோதியா அக்காவின் விடியல் முகாம் 15 நிமிட நடை தூரம். அங்கு போய் மருத்துவம் பார்த்து வந்தோம். ஆனால் அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேயிருந்தது. அதன் காரணத்தினால் நான் தலைவர் அவர்களிடம் நிலைமையை எடுத்துரைத்தேன். உடனடியாக சோதியாவை இங்கே அழைத்து வாருங்கள் என சொன்னார். நாமும் போய் அவர் சொன்னதைச் சொன்னோம். ஆனால் சோதியா அக்கா வருவதற்கு மறுத்து விட்டார். புதிய போராளிகள் மனம் கலங்கி நிற்கிறார்கள். அது ஒரு பயிற்சி முகாம். என்னுடைய பிள்ளைகளை விட்டு நான் வரமாட்டேன். என பெரும் போராட்டம் நடந்தது. எல்லோரும் முயற்சி செய்தோம். ஒருவாறு அழுகையுடன் விடியல் முகாமில் இருந்து விடைபெற்று புனிதபூமி முகாமிற்கு வந்தார்.

உடல் நிலை முடியாத சோதியா அக்காவைப் பார்க்க தலைவர் வந்தார். அப்போது தலைவரை சுகம் விசாரிக்க விடாமல், அண்ணை நான் என்னுடைய பிள்ளைகளிடம் போக வேண்டும் என்று கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். தலைவர் ஆறுதல் கூறினார். இவ்வாறு இருக்கும் போது மேலும் உடல் நிலை மோசமாகி விட்டது. வைத்தி யரின் ஆலோசனைப்படி, வெளியில் அனுப்பி வைத்தியம் பார்ப்பது நல்லது என்று முடிவு எடுக்கப்பட்டது.

அப்போது தலைவர் என்னை அழைத்து, வெளியில் நீங்கள் சோதியாவை பொறுப்பெடுத்துக் கொண்டு போய் இந்தியா செல்லுங்கள் என்று கூறினார். நானும் விடியல் முகாம் சென்று பொறுப்பாளரிடம் தகவலைத் தெரிவித்தேன். தலைவர் என்னுடன் இருவரை உதவிக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். பொறுப்பாளரின் அனுமதியுடன் நான் பைரவி மற்றும் கடற்புலிகளின் துணைத் தளபதியான மாவீரர் சுகன்யாவையும் தெரிவு செய்தேன். அது மட்டும் அல்ல, ஆயுதம் தாங்கிய பெண் போராளிகளையும் எம்முடன் அனுப்பி வைத்தார் தலைவர். எம்மை ஜெயந்தி அக்கா தலைமை தாங்கி வல்வெட்டித்துறைக்கு கூட்டிச் சென்றார். எமது வைத்தியரும் எம்முடன் வந்திருந்தார். சோதியா அக்காவின் பாதுகாப்பிற்கு தலைவரால் அனுப்பப்பட்டவர்களில் மேஜர் தாரணி, மேஜர் அஞ்சனா, கப்டன் உஷா ஆகியோர் சோதியா அக்காவுடன் முதலாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சோதியா அக்காவின் வீட் டின் அருகில் தான் நாம் தங்கியிருந்தோம். அப்போது பொறுப்பாளரும் அவருடன் சென்ற எல்லோரும் சோதியா அக்காவின் அம்மா, அப்பாவைக் கூப்பிட்டு சோதியா அக்காவைப் பார்ப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொண்டு, சோதியா அக்காவிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். நமது கொள்கை, கட்டுப்பாடு, கட்டளைகளை மீறாத ஒரு பெரும் தளபதியாக அங்கு நான் அவரைப் பார்த்தேன். எமக்கு மேலும் எடுத்துக் காட்டாக அவர் விளங்கினார்.

எமது வைத்தியரினால் இந்தியாவில் உள்ள வைத்தியருக்கு சோதியா அக்காவின் நிலை குறித்து ஒரு கடிதம் எழுதப்பட்டது. அக்கடிதத்தினை என்னிடம் கொடுத்து எவ்வாறு பேச வேண்டும் என்ற விளக்கம் தரப்பட்டது. நாமும் ஆயத்தமாகி உடை மாற்றி விட்டோம். அப்போது வடமராட்சிப் பொறுப்பாளர் ஜேமஸ் அண்ணா ஒரு பெண் வைத்தியரை அழைத்து வந்து சோதனை செய்தார். அந்த வைத்தியர் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் நாம் இந்தியா செல்ல இருந்த பயணம் நிறுத்தப்பட்டது.

எங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க இருந்த சமயம் தலைவர் அவர்கள் என்னிடம் கூறிய வார்த்தைகளை இன்றும் என்னால் மறக்க முடியாதுள்ளது. “நீங்கள் குப்பியைக் கொண்டு செல்லுங்கள். சோதியாவின் குப்பியையும் வைத் துக் கொள்ளுங்கள். கடலிலோ அல்லது இராணுவத்திலோ நீங்கள் பிடிபட்டால், உங்கள் இலட்சியத்தை நிறைவேற்றுங்கள்.” என தலைவர் அவர்கள் கூறும் போது, அவரின் கண்களில் கோபக்கனல் தெரிந்தது.  நம்பிக்கை மேலும் பிறந்தது. என் இருதயம் வெடிப்பது போல் இருந்தது. எதற்காக என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை.

சோதியா அக்கா மதிய உணவு சாப்பிட்டு சந்தோசமாக இருந்தார். மாலை 6 மணியளவில் எமது போராளிகள் வெளியில் சென்று கொத்துரொட்டி வாங்கி வந்தார்கள். சோதியா அக்காவிற்கு முட்டைக் கொத்து கொடுக்கப்பட்டது. அவர் கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு மீதியை என்னிடம் கொடுத்து விட்டார். இரவு உணவு வேளை முடிந்தது.

இரவு எட்டு மணி இருக்கும் சோதியா அக்காவைக் காணவில்லை என பைரவி என்ற போராளி என்னிடம் சொன்னார். நானும் தேடினேன். அப் போது அவர் கிணற்றுக் கட்டில் இருந்தார். அக்கா வாங்கோ என்று அழைத்த போது வாசுகியின் சட்டையைக் கொடு என்று கேட்டார். நாம் புரியாது நின்றோம். வாசுகி என்ற பெயரில்தான் வைத்தியருக்கு கடிதம் எழுதப்பட்டு, சோதியா அக்காவிற்கு வாசித்துக் காட்டப்பட்டது. அது அவரின் மனதில் பதிந்து விட்டது என நாம் நினைத்தோம்.

பின்பு எல்லோரும் படுக்கைக்குப் போய் விட்டார்கள். நான் அவருடன் தொடர்ந்து தூக்கம் இல்லாது  அவரை எனது மடியில் இரண்டு மூன்று தலையணை போட்டு படுக்க வைப்பேன். ஆனால் அன்று அவர் என்னைப் படுக்கும்படி கூறினார். சோதியா அக்காவை கட்டிலில் படுக்க வைத்து  நான் கீழே படுத்தேன். 15 நிமிடங்கள் நான் அசந்து தூங்கி விட்டேன். பின்பு எழுந்து பார்த்தால் அவரைக் காணவில்லை. தேடிப் பார்த்தேன். வாசலில் இருந்தார். நான் வாங்கோ என்று கூப்பிடும் போது, அவரின் செயற்பாடுகள் மாறுதலாக இருந்தன. நான் கூறுவதை செய்தார். மூச்சுவிட சிரமப்பட்டார். வயிறு வீக்கமாகி நகங்கள் நிறம் மாறின. உடன் காவல் கடமையில் இருந்த தனுஜா என்ற போராளியை அழைத்து, தகவலை ஜெயந்தி அக்காவிடம் கூறும்படி சொன்னேன். உடனடியாக எமது வைத்தியர் இருக்கும் இடம் போய் தகவலைத் தெரிவித்து, அவரைக் கூட்டி வந்தார்கள்.  எமது வைத்தியரின் உதவியுடன் வல்வை ஊறணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். போகும் வழியில் அதிகாலை 2.58 மணியளவில் சோதியா அக்கா எனது மடியில் ஒரு பெருமூச்சு விட்டார். வைத்திய சாலைக்கு கொண்டு சென்றோம். எமது வைத்தியர் பதட்டமாகவே காணப்பட்டார். அங்கு அவருக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது.

ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரின் உயிர் எமது மண்ணை விட்டுப் பிரிந்து விட்டது. எமது  போராளிகளின் கதறல் சத்தம் இன்னும் எனது காதுகளில் ஒலித்த வண்ணமே உள்ளது. பின்பு சீருடை மாற்றப்பட்டு, மணலாற்றுக் காட்டிலுள்ள புனிதபூமி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் உடலிற்கு அங்கு எமது தலைவர் உட்பட எல்லாப் போராளிகளும் அஞ்சலி செலுத்தினர். சோதியா அக்காவின் தந்தையும் அங்கு வந்திருந்தார். பின்னர் அவரின் பெற்றோரின் விருப்பத்தின் பேரில் மீண்டும் உடல் அவரின் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்களின் குடும்ப இடுகாட்டில் பெண் போராளிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் வீர உடல் விதைக்கப்பட்டது. அவரின் நினைவுக்கல் வடமரா ட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

 14.07.1996இல் சோதியா அக்காவின் நினைவாக சோதியா படையணி உருவாக்கம் பெற்றது

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version