”போர் தொடர்ந்தால், பணயக் கைதிகளை சவப்பெட்டியில் அனுப்புவோம்”: இஸ்ரேலுக்கு ஹமாஸ் கடும் எச்சரிக்கை

“பணயக் கைதிகளை மேற்பார்வையிடும் முஜாகிதீன் போராளிகள் இருக்கும் இடத்தை நோக்கி இஸ்ரேல் இராணுவம் முன்னேறினால், அல்லது  இராணுவத்தின் மூலம் எமக்கு அழுத்தம் கொடுத்தால் பணயக் கைதிகள் அனைவரும் சவப்பெட்டிக்குள் தான் இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்” என ஹமாஸ் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்திய போது சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். சுமார், 250 பேரை பணக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இச் செயலுக்கு பதிலடியாக கடந்த 10 மாதங்களாக பலஸ்தீனத்தின் காசா, ரஃபா நகரங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 40,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

பலஸ்தீனியர்கள் பணக்கைதிகளாகவும் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உலக நாடுகளின் முயற்சியால் கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டது. அப்போது ஹமாஸ் வசமிருந்த 100 பணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அதற்குப் பின்னர் பணயக் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் எதுவித உடன்பாடும் எட்டப்படாமல் இருக்கிறது. அண்மையில் காசாவிலுள்ள ஒரு சுரங்கத்தில் 52 வயதான பணைக் கைதி உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெற்கு காசாவிலுள்ள ஒரு சுரங்கத்தில் பிணைக் கைதிகள் 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் இராணுவத்தினர் சுரங்கத்தை அடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்னர் ஹமாஸ் அமைப்பினர், மேற்குறித்த அறுவரையும் கொடூரமாக கொலை செய்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இச் செயலுக்காக ஹமாஸ் அமைப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். ஆனால், இவ்விடயத்தில் நெதன்யாகுவுக்கு எதிராக அந் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பணைக் கைதிகள் இருக்கின்ற நிலையில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஹமாஸ் ஆயுதக் குழு செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா தெரிவித்துள்ளதாவது,

“பணயக் கைதிகளை மேற்பார்வையிடும் முஜாகிதீன் போராளிகள் இருக்கும் இடத்தை நோக்கி இஸ்ரேல் இராணுவம் முன்னேறினால், அல்லது நெதன்யாகு இராணுவத்தின் மூலம் எமக்கு அழுத்தம் கொடுத்தால் பனயக் கைதிகள் அனைவரும் சவப்பெட்டிக்குள் தான் இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்” என ஹமாஸ் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.