போரின் முக்கியத்துவம் பற்றிய கவனம் ஈர்க்கக் கூடிய  திரைப்படங்கள் எடுத்து வெளியிடுவது கட்டாயம் – இயக்குநர் சேரன்

அமேசானில் வெளியாகியிருக்கும் தி ஃபேமிலி மேன் – தொடர் 2இல் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

இதையடுத்து “ஈழத் தமிழர்களை தவறாகவும், மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய Family man 2 என்ற கண்டனத்துக்குரிய இந்தித் தொடர் குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் ஈழத்தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், இழிவு படுத்துவதாகவும் அமைந்துள்ளது. எனவே அதை தடை செய்ய வேண்டும்” என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியருந்தார்.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் சிலர், சினிமாத் துறையைச் சேர்ந்த சிலர் இத் தொடர் குறித்து தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். திரைப்பட இயக்குநர் சேரன் அவர்கள் இலக்கு ஊடகத்தினரின் கேள்விக்குப் பதிலளிக்கையில்,

கேள்வி – வெறும் அறிக்கைகளையும், செவ்விகளையும் தாண்டி அறிவுபூர்வமான, தாக்கம் தரவல்ல செயற்பாடுகளாக நீங்கள் எதனைக் கருதுகின்றீர்கள்?

  1. இயக்கம் பற்றிய அல்லது புலம்பெயர்ந்து வாழும் மக்களின் உணர்வுகள் பற்றிய அல்லது போரின் முக்கியத்துவம் பற்றிய கவனம் ஈர்க்கக் கூடிய  திரைப்படங்கள் எடுத்து வெளியிடுவது கட்டாயம்.
  2. இயக்கத்தின் வரலாறு, தற்போதைய நிலை மற்றும் தேவை குறித்தும் நிலைப்பாடு குறித்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாக வேண்டும். குறும் படங்கள் தயாராக வேண்டும்.
  3. அனைத்து நாடுகளிலும் வாழும் இயக்கம் பற்றிய, விடுதலை பற்றிய தகவல்கள் முழுக்க அறிந்தவர்கள் மாதம் ஒருமுறை இணைய காணொளி மூலம் இந்த முன்னெடுப்புகள் அல்லது அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்து, அனைவரையும் ஒரு கருத்தின் கீழ் இயங்க வழி வகுக்கலாம்.
  4. வருடம் ஒரு திரைப்படம் உலகத் தரத்தில் சிறந்த கலைஞர்களை கொண்டு உருவாக்கி அதை மிக முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்க வைக்கலாம்.