போராட்டம் நடத்துபவர்களையெல்லாம் குற்றவாளியாகப் பார்க்கின்றது இந்த அரசு-அமலநாயகி

257 Views

போராட்டம் நடத்துபவர்களையெல்லாம் குற்றவாளியாகப் பார்க்கின்றது இந்த அரசு. எங்களால் இந்த நாட்டில் போராடக் கூட முடியாத ஒரு சூழ்நிலையில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். சர்வதேசமே எங்களைக் கண்திறந்து பார்க்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி தெரிவத்துள்ளார்.

இன்றைய தினம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் கவனயீர்ப்புப் பேரணியில் நீதிமன்ற உத்தரவினால் பங்கெடுக்க முடியாமல் தடுக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் மௌனிக்கப்பட்டதும் கடந்த 11 வருடங்களாக நாங்கள் எமது உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றோம். பல்வேறு விதங்களில் எமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த 03 வருடங்களாக வடகிழக்கில் உள்ள மாவட்டங்களில் உள்ள உறவுகள் அனைத்தும் இணைந்து எமது உறவுகளுக்கான நீதியைக் கோரி தொடர் பேராட்டத்தினை நடாத்தி வருகின்றோம். அந்தவகையில் உயிர் அச்சுறுத்தல்கள், தொலைபேசியில் அச்சுறுத்தல்கள், விபத்துக்கள் மூலமான அச்சுறுத்தல்கள், பின்தொடர்தல்கள் எனப் பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாங்கள் எங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். கடந்த அரசு காலங்களில் ஒவ்வொரு வருடமும் நாங்கள் இதனை மேற்கொண்டு வருகின்றோம். இன்றைய தின பேரணி தொடர்பில் தற்போதைய கொரோணா சூழ்நிலையில் அதனைக் கருத்திற் கொண்டு நாங்கள் சுகாதாரப் பிரிவிடம் அனுமதி பெற்று பொலிசாரிடமும் அனுமதிக்காகக் கொடுத்து அதனயும் பெற்றோம். இந்த அனுமதிகள் எல்லாம் ஒரு வாரத்திற்கு முன்னமே பெறப்பட்டு விட்டன.

ஆனால் இன்று இந்தப் போராட்டத்தை நடத்தக் கூடாது என்று என்மீது தடையுத்தரவு பெற்று பொலிஸார் அதனைத் தடுக்க முற்பட்டனர். ஆனால் என்மீதே தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமையால் எமது அம்பாறை மாவட்டத் தலைவியின் தலைமையில் பலரின் ஆதரவுடனும் நாங்கள் இந்தப் போராட்டத்தினை நடத்தியிருந்தோம்.
எனது கணவரைத் தொலைத்து 11 வருடங்களாக அவருக்கு என்ன நடந்ததோ? ஏது நடந்ததோ என்று நாங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று என்னை இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள தடையுத்தரவு பெறப்பட்டு அனுமதிக்கப்படவில்ல.

இது இன்று மட்டுமல்ல இனிவரும் காலங்களில் இது தொடரும் விடயமாகும். இனி வடக்கு கிழக்கில் நாங்கள் எந்தவொரு போராட்டத்தையும் செய்யமுடியாத ஒரு நிலையையே இது வெளிப்படுத்துகின்றது. அத்துடன் இந்த அரசினூடாக எமது உறவுகள் பற்றிய விடயங்களை நாங்கள் அறிவோமா? அவர்கள் எமக்கு மீளக் கிடைப்பார்களா? என்கின்ற சந்தேகங்களும் எமக்குள் எழுகின்றது.

நாங்கள் அழிக்கப்படப் போகின்றோம். எம்மைக் கொல்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களால் இந்த நாட்டில் போராடக் கூட முடியாத ஒரு சூழ்நிலையில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். சர்வதேசமே எங்களைக் கண்திறந்து பார்க்க வேண்டும். எங்களுக்கான தீர்வைப் பெற்றுத் தருவதற்கும், எங்கள் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கும் சர்வதேசம் முன்வர வரவேண்டும்.

சர்வதேசத்திலுள்ள புலம் பெயர் உறவுகள் இவ்விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டும். இங்கு போராடிக் கொண்டிருப்பவர்களும் உங்கள் உறவுகளே. எங்கள் விடயங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தும் அளவிற்குக் கொண்டு செல்லுங்கள்.

எதிர்காலத்தில் நாங்கள் இருப்போமா? இனியொரு போராட்டத்தினை செய்வோமா? என்று கூட எமக்குத் தெரியவில்லை. போராட்டம் நடத்துபவர்களையெல்லாம் குற்றவாளியாகப் பார்க்கின்றது இந்த அரசு. எங்களது நாட்டில் எங்களுக்கு உயிர்வாழ்வதற்கு, பேசுவதற்கு, நடப்பதற்குக் கூட உரிமையில்லாமல் இருக்கின்றோம். ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கின்றது இந்த அரசு. அனைத்தையும் சிங்களப் பௌத்தமயமாக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றது.

எமது உறவுகள், எமது சந்ததிகளின் எதிர்காலம் மிகவும் பாரியதொரு அடக்குமுறைக்குள் தள்ளப்படப் போகின்றது. எனவே அனைவரும் இதனைக் கருத்திற் கொண்டு இவற்றை வெளிக்கொணர வேண்டும். சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தற்கு எமது விடயங்களைக் கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply