போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கு: ஹாங்காங் ஜனநாயக செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு

333 Views

கடந்த 2019ம் ஆண்டு ஹாங்காங்கில்  நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹாங்காங் ஜனநாயக செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1997ஆம் ஆண்டு பிரிட்டன், ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைக்கும் போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி `ஒரு நாடு, இரு ஆட்சிமுறை` என்ற கொள்கையின் கீழ் அடிப்படை சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சீனாவின் முக்கிய நிலபரப்பில் இல்லாத ஹாங்காக்கின் சில உரிமைகளை (மக்கள் ஒன்று கூடும் உரிமை, மக்களின் பேச்சுரிமை, சுதந்திரமான நீதித் துறை போன்ற சில ஜனநாயக உரிமைகள்) இச்சட்டங்கள் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் இந்த அமைப்பே சிதைக்கப்பட்டு வந்தது. அது ஜனநாயகத்துக்கு ஆதரவான, 2019-ம் ஆண்டில் நடந்த மிகப் பெரிய போராட்டத்துக்கு வழி வகுத்ததாக கூறப்பட்டது.

சில போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன. 2020ஆம் ஆண்டு ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்ட மசோதாவை சீன மத்திய அரசு பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றியது. அந்த சட்டத்தின் கீழ் பிரிவினைவாதம், அரசை எதிர்ப்பது, வெளிநாட்டு சக்திகளோடு கூட்டு சேர்வது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. இக்குற்றங்களுக்கு அதிகபட்சமாக வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த சட்டம் தேச விரோதிகளை மட்டுமே குறி வைக்கும். ஹாங்காங்கில் ஸ்திரத்தன்மையை அது ஏற்படுத்தும் என கூறியது சீனா. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, ஜிம்மி லாய் உட்பட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடி வரும் முக்கியமான ஏழு பேர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்ததாகவும், அதனால் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்ததாகவும் கூறி, அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் ஹாங்காங்கின் ஊடக ஜாம்பவானான ஜிம்மி லாய் மற்றும் அரசியல் தலைவரான மார்டின் லீ ஆகியோர் அனுமதி அளிக்கப்படாத பேரணியை நடத்தியதற்காக, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply