போராட்டத்திற்கு அனைவரது ஆதரவும் முக்கியம் – மனுவல் உதயச்சந்திரா கோரிக்கை

அரசியல் பிரதிநிதியாக இருந்தாலும் சரி, பொது அமைப்புகளாக இருந்தாலும் சரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் எமது போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவை வழங்குங்கள் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச் சந்திரா தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி மன்னார் நகர பேருந்து தரப்பிடத்திற்கு முன் அமைதி வழியில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,“காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை கண்டு பிடித்துத் தரக்கோரியும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்நிலையில், இலங்கையின் சுதந்திர தினத்தை, பாதிக்கப்பட்ட தமிழர்களாகிய நாங்கள் கரி நாளாக அனுஷ்டிக்கின்றோம்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக எதிர் வரும் 2ம் திகதி முதல் 6ம் திகதி வரை உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளோம்.

அதே வேளை, மட்டக்களப்பில் 3ம் திகதி முதல் 4ம் திகதி வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போகின்றோம். எனவே எமது போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்குங்கள்.

அத்தோடு சர்வதேசம் எங்கள் மீது தமது பார்வையை செலுத்தியுள்ள நிலையில், மேலும் வலு சேர்க்கும் வகையில் அனைவரது ஒத்துழைப்பையும் கேட்டு நிக்கிறோம்.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கும்  உறவுகளுக்கும் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்றார்.