பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரவை ஜேர்மனி வலியுறுத்த வேண்டும்!

பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தமது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ஜேர்மனி வலியுறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளைய தினம் (11) உத்தியோகபூர்வ விஜயமாக ஜேர்மனி செல்லவுள்ள நிலையில், ஜேர்மனிக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிலிப் ஃபிரிஷ் அறிக்கையொன்றின் ஊடாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

30 வருட யுத்தத்தின்போது, கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பரவலான துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளன. அத்துடன், யுத்தத்தின் இறுதி கட்டங்களில் அரச படைகள் பொதுமக்களைத் தாக்கியதுடன், சிலரை வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கியுள்ளன.
போருக்கு பின்னர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலின் அவசியத்தை எடுத்துக்காட்டும் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன், சாட்சிய சேகரிப்பு செயல்முறையையும் நிறுவியுள்ளது.

எனினும், அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தினது இதுவரையான செயற்பாடுகளை பொறுத்தவரையில் அதன் முந்தைய அரசாங்கங்களிடமிருந்து வேறுபட்டதாக தெரியவில்லை. இதன்படி, போர்க்குற்றங்களில் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகளைப் பாதுகாத்து, பேரவையின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளது.

இந்த அரசாங்கம் நடந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணவில்லை, கடந்த கால அட்டூழியங்களுக்கு நீதி வழங்குவதில் பின்நிற்கிறது. அதேநேரம், அனுரகுமார திசாநாயக்க 2017ஆம் ஆண்டு முதல், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுதியளித்தார்.
எனினும், தற்போது அவரது அரசாங்கம் அதே சட்டத்தை பயன்படுத்திவருகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மீதான மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் ஜேர்மனி முன்னர் முன்னணி நாடாக இருந்தது, எனினும், 2022ஆம் ஆண்டில் அந்தப் பங்கிலிருந்து விலகியது. பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், ஆதாரங்களைச் சேகரிப்பதை உறுதி செய்யவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் தீர்மானம் புதுப்பிக்கப்படுவது மிக அவசியமாகும்.

எனவே, பெர்லினுக்கு வருகைதரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் சீர்திருத்தங்களுக்கான அவரது உறுதிமொழிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற ஜேர்மனி ஜனாதிபதி, வலியுறுத்த வேண்டும். எனவே, அதற்காக தற்போது கிடைக்கும் இந்த வாய்ப்பினை ஜேர்மனி ஜனாதிபதி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ஜேர்மனிக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிலிப் ஃபிரிஷ் தெரிவித்துள்ளார்.