Tamil News
Home செய்திகள் பொருளாதார நெருக்கடி-சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க இந்தியாவில் நிகழ்ச்சிகளை நடத்த திட்டம்-ஹரின் பெர்னாண்டோ

பொருளாதார நெருக்கடி-சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க இந்தியாவில் நிகழ்ச்சிகளை நடத்த திட்டம்-ஹரின் பெர்னாண்டோ

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டி எழுப்பவும், வெளிநாட்டு அந்நிய செலாவணிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் இந்தியாவிலுள்ள முக்கிய ஐந்து நகரங்களில்  நிகழ்ச்சிகளை  இலங்கை நடத்த உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அழகிய கடற்கரைகள், குன்றுகள், அழகான கடலோர நகரங்களுக்கு பெயர் பெற்ற இலங்கை, கடந்த ஏழு தசாப்தங்களிலும் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது எனவும், பொருளாதார சிக்கல்கள், கோவிட்-19 தொற்று நோய் என்பன காரணமாக சுற்றுலாத்துறை மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

22 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய தேவையான வெளிநாட்டு கையிருப்பு இல்லாமல் மருந்து உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

இருப்பினும் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு 61 ஆயிரத்து 951 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும், மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவேற்பதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர வேண்டுமானால் இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாக வருமானம் அதிகரிக்க வேண்டும் எனவும் அது மிகவும் இன்றியமையாத ஒரு வருமானமாக காணப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும்  கடந்த ஆண்டு 2 இலட்சத்துக்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்ததாகவும் இந்த ஆண்டில் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு தனது கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஓகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) சமர்ப்பிக்க உள்ளதாகவும், இது பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் திட்டத்தில் ஒரு முக்கியமான படியாக காணப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Exit mobile version