அபிவிருத்தி மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைத் தேடுகின்றது சிறீலங்கா அரசு. அதிகளவிலான அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சனைக்கான தீர்வு, பொருளாதார அபிவிருத்தி அதனை ஈடுசெய்யமாட்டாது. பொருளாதார அபிவிருத்தி தற்போதைய சிக்கல்களை மேலும் அதிகரிக்கும், ஏனெனில் பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ள ஒரு இனம் அடுத்து தனக்கான அதிகாரத்தை தேடும். பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்டதால் தமிழ் மக்கள் போராடவில்லை, ஏனெனில் 1980 களில் போர் தீவிரமடைவதற்கு முன்னர் சிறீலங்காவின் இரண்டாவது செல்வச் செழிப்புள்ள நகராக யாழ்ப்பாணமே திகழ்ந்தது என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தனது அரசியல் ஆய்வில் தெரிவித்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பொருளாதார அபிவிருத்தி மூலம் மாற்றீடு செய்ய முற்பட்டுள்ளார் புதிய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாய ராஜபக்ச. அதிகாரப் பரவலாக்கம் என்பது பொய் அதனை பெரும்பாலானவர்கள் எதிர்க்கின்றனர். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கப்பாடு என்பது அபிவிருத்தி மூலம் ஏற்படுத்தப்படலாம் என அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கோத்தபாயா தெரிவித்திருந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், இந்து பத்திரிகை ஊடகவியலாளருக்கும் கோத்தபாயா அதனையே தெரிவித்திருந்தார்.
கடந்த 70 வருடங்களாக எல்லா அரசியல் தலைவர்களும் ஒரே வார்த்தையை தான் கூறி வந்தார்கள் அது அதிகாரப்பகிர்வு என்ற வார்த்தை ஆனால் யாரும் அதனை நிறைவேற்றவில்லை. 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய உடன்பாட்டைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டமும் முழுமையான அதிகாரப் பகிர்வை கொண்டிருந்தது. ஆனால் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக அதனை நிறைவேற்ற முடியாது.
தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியையோ அல்லது வேலை வாய்ப்புக்களையோ வழங்குவதை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை ஆனால் அரசியல் அதிகாரம் வழங்கப்படுவதை அவர்கள் எதிhக்கின்றனர் என கோத்தபாயா தெரிவித்துள்ளார்.
அதாவது சிறீலங்கா அரசு அபிவிருத்தி மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைத் தேடுகின்றது. அதிகளவிலான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சனைக்கான தீர்வு, பொருளாதார அபிவிருத்தி அதனை ஈடுசெய்யமாட்டாது என போராசிரியர் அமீர் அலி தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி தற்போதைய சிக்கல்களை மேலும் அதிகரிக்கும், ஏனெனில் பொருளாதாரத்தில் மேம்படும் ஒரு இனம் அடுத்து தனக்கான அதிகாரத்தை தேடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்டதால் தமிழ் மக்கள் போராடவில்லை, ஏனெனில் 1980 களில் போர் தீவிரமடைவதற்கு முன்னர் சிறீலங்காவின் இரண்டாவது செல்வச் செழிப்புள்ள நகராக யாழ்ப்பாணமே திகழ்ந்தது.
கல்வியில் அல்லது பதவிகளில் பின்தங்கியதால் அவர்கள் போராடவில்லை ஏனெனில் 1980 களின் முற்பகுதியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை மா அதிபர், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், நிர்வாக சேவையாளர்கள் ஆகிய பதவிகளில் தமிழர்களே அதிகம் இருந்தனர்.
அதாவது அவர்கள் தம்மை ஆள்வதற்கான அதிகாரத்தைக் கேட்கின்றனர். இது அவர்களின் அரசியல் அபிலாசை மற்றும் தமிழ்த் தேசியவாதம். வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை அவர்கள் கோரி நிற்கின்றனர். தமிழ் மக்களின் தன்னாட்சிக்கான இந்த கோரிக்கை என்பது சிறீலங்கா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே ஆட்சியில் இருந்த ஆங்கிலேயர்களை நோக்கி முன்வைக்கப்பட்டதொன்று.
1932 ஆம் ஆண்டு சிறீலங்காவில் இடம்பெற்ற தேசிய சபைக்கான தேர்தலை வடபகுதியில் புறக்கணித்த தமிழ் இளைஞர்கள் தமக்கு முழுமையான சுதந்திரமான தேசம் தேவை என்ற கோரிக்கைகளை ஜனநாயக வழியில் முன்வைத்திருந்தனர்.
இந்த கோரிக்கையானது சிறீலங்கா அரசு கொண்டுவந்த தனிச் சிங்களச் சட்டத்தின் பின்னர் மேலும் வலுப்பெற்றது. கடந்த 70 வருடங்களாக தமிழர் தரப்பு சிறீலங்காவின் தேசிய அரசில் பங்கெடுக்கவில்லை, விலகியே நின்று வருகின்றது. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போது ஒரு மாற்றத்தை தேட முற்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு முஸ்லீம் மற்றும் மலையக அரசியக் கட்சிகளின் செயற்பாடுகளை ஒத்ததாக இருக்கலாம். அவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிப்பதுண்டு.போர் நிறைவடைந்த பின்னரும் தமிழ் அரசியல் கட்சிகளோ மக்களோ அபிவிருத்தி தொடர்பில் அதிக நாட்டம் காண்பிக்கவில்லை. அவர்கள் தமிழ் தேசியம் தொடர்பிலே அதிக நாட்டம் கொண்டுள்ளனர்.
கற்றலொனியா மாகாணம் ஸ்பெயின் நாட்டில் உள்ள செல்வச் செழிப்பு மிக்க மாகாணம், ஆனால் அவர்கள் தமது சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். பிரித்தானியாவில் உள்ள ஸ்கொட்லாந்தும் அவ்வாறே, பொருளாதாரத்தில் மேன்மையடைந்து நின்றாலும், அவர்கள் தமது அரசியல் அதிகாரத்தை தேடுகின்றனர்.
பொருளாதார அபிவிருத்தி ஊடாக வடக்கும் தமிழகமும் ஒரு பொருளதார நெருக்கத்தை பேணினால் கூட அது நீண்டகாலத்தில் சிறீலங்கா அரசுக்கு மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தும். எனவே அதிகாரப் பகிர்வே தீர்வாகலம். ஆனால் எந்தவகையான அதிகாரங்கள் என்பதே தற்போதைய கேள்வி?
முழுமையான அதிகாரம் என்பது காணி மற்றும் காவல்த்துறை அதிகாரங்களைக் கொண்டது. ஆனால் அது அதிகார மோதல்களை எற்படுத்தலாம். எனவே தான் பிரச்சனையை தீர்க்காது அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் அரசு சிந்திக்கின்றது.
ரஸ்யா, சிங்கப்பூர் துருக்கி போன்ற நாடுகள் அதனையே மேற்கொள்கின்றன. அதாவது பிரச்சனைக்கு தீர்வுகாணாது அதனை கையாள்வது என்பது அவர்களின் கொள்கை.
எனவே தான் சிறீலங்கா அரசு அபிவிருத்தியை கையில் எடுத்துள்ளது. அரசிடம்; பல வியூகங்கள் உள்ளன. அபிவிருத்தி, மொழிக்கான உரிமை, நிர்வாக அதிகாரம் என்பவற்றை கலந்து வழங்குவதன் மூலம் பிரச்சனைக்கு தீர்வுகாணாது அதனை கையாள முற்பட்டுள்ளது.
அதேசமயம், அபிவிருத்தி மற்றும் அதிகாரங்களை பெறும் தமிழ் இனம் தனது அரசியல் சுதந்திரத்திற்காக போராடாது தடுப்பதற்காக தனது படையினரையும், புலனாய்வுக் கட்டமைப்பையும் பலப்படுத்தி வருகின்றது சிறீலங்கா அரசு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.