பொருளாதாரத்தில் எதிர்மறை அபாயங்கள் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதார கண்ணோட்டத்தில் எதிர்மறையான அபாயங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

நிதியத்தின்; நிறைவேற்று சபையின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமோரா () இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் கீழ் 4ஆம் கட்ட மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அண்மையில் அங்கீகரித்திருந்தது.
இந்தநிலையில், நிதியத்தின்; நிறைவேற்று சபையின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமோரா, இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான எதிர்வுக்கூறல்களை வெளியிட்டுள்ளார்.

நிதி திட்டங்களின் கீழ் இலங்கையின் செயற்திறன் வலுவாக உள்ளதுடன் சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றன.
பொருளாதார வளர்ச்சி வலுவடைந்துள்ளதுடன் பணவீக்கம் குறைவாகவே உள்ளது. இருப்புக்கள் அதிகரிக்கின்ற அதே சந்தர்ப்பத்தில் நிதி வருவாய் மேம்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், பொருளாதார கண்ணோட்டம் நேர்மறையாக இருக்கின்ற போதிலும் சில எதிர்மறையான அபாயங்கள் உள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமோரா தெரிவித்துள்ளார்.

நிதி நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு நிலையான வருவாய் திரட்டல் மிக முக்கியமானதாகும்.
வரி விலக்கு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், வரி இணக்கத்தை அதிகரித்தல் மற்றும் பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துதல் என்பன முக்கியமாகும்.

பாதிக்கப்படக் கூடியவர்களுக்கான பாதுகாப்புடன் இலக்குகளை மேலும் அதிகரித்தல் அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.அத்துடன் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள அவர், எஞ்சியுள்ள வணிக கடன் வழங்குநர்களுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை சரியான நேரத்தில் இறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.