Tamil News
Home செய்திகள் பொது தேர்தல்: தமிழ் வாக்களர்களிடம் மனோ கணேசன் கோரிக்கை

பொது தேர்தல்: தமிழ் வாக்களர்களிடம் மனோ கணேசன் கோரிக்கை

டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, அந்த பட்டியலில், புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாக போட்டியிடும் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமை அளித்து வழங்கும்படி தமிழ் வாக்களர்களை நான் கோருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

மனோ கணேசன் விடுத்துள்ள விசேட வாக்காளர் தெளிவூட்டல் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எமது வேட்பாளராக இருந்து சஜித் பிரேமதாசவுக்கு கொழும்பு, கம்பஹா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களில் வெற்றி வாக்குகளை பெற்று கொடுத்தோம். நுவரெலியா மாவட்டத்தை வென்று கொடுத்தோம். இவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சாதனை வெற்றிகள்.

ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளை சஜித் பிரேமதாசவுக்கு பெற்று பெற முடியாத பல பெரும்பான்மை இன அரசியல்வாதிகள், இன்று டெலிபோன் சின்ன வேட்பாளர்களாக, தமிழ் விருப்பு வாக்குகளை தேடி ஓடி வருகிறார்கள். தமிழ் வாக்களர்கள் முன் தோன்றி, தமிழ் மக்கள் மீது திடீர் பாசம் கொண்டு பேசுகிறார்கள். தமிழ் வாக்காளர்களை கண்டு பேசி கட்டி அணைக்க முயல்கிறார்கள். எப்படியாவது கொஞ்சம் தமிழ் விருப்பு வாக்குகளை வாங்கி கரையேற முயல்கிறார்கள்.

இது என்ன வகையில் நியாயம்?

தமிழ் மக்கள் துன்பப்படும் போது, துயரப்படும் போது, கண்ணீர் விடும் போது, சிக்கல்களில் சிக்கி தவிக்கும் போது, அது எமக்கு வலித்தது. தொடர்ந்தும் வலிக்கும். நாம்தாம் அங்கே இருந்தோம். நான்தான் எப்போதும் அங்கே இருந்தேன்.  இன்று தமிழ் விருப்பு வாக்குகளை தேடி வரும் எவரும் அங்கே இருக்கவில்லை.

நாளை அடுத்த பாராளுமன்றத்தில், அநுர நிர்வாகத்துடன் தமிழ் மக்கள் சார்பாக கலந்து உரையாட போவது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களும், எம்பிக்களும் தான்.  தமிழ் கட்சிகள்தான். வேறு எவரும் கிடையாது. வேறு எவருக்கும் எம்மீது அக்கறை கிடையாது. இதை தமிழ் மக்கள் மிக நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்  வாக்காளர்கள் மீது திடீர் பாசம் காட்டும் இந்த வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்களுக்கு, தமிழ் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளை தவறி போயும் கொடுத்து விட்டால், களத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி அடைய முடியாமல் போய் விடும். எமக்கு பெரிய அளவில் சிங்கள வாக்குகள் கிடைக்க போவதில்லை. ஆனால், எமது விருப்பு வாக்குகளையும் வாங்கி, அதனுடன் கொஞ்சம் சிங்கள விருப்பு வாக்குகளையும் வாங்கி சேர்த்து, இவர்கள் விருப்பு வாக்கு பட்டியல் வரிசையில் மேலே போய் விடுவார்கள். தமிழ் வாக்குகளை மாத்திரம் பெறுகின்ற நாம், கடைசியில் தெரிவு செய்யப்படும் எம்பீகளை தீர்மானிக்கும் விருப்பு வாக்கு பட்டியல் வரிசையில் பின்தங்கி விடுவோம். ஆகவே, இது எமது விரல்களால், எமது கண்களையே குத்தி கொள்வதாகும்.

ஆகவே, இந்த விருப்பு வாக்கு சூட்சுமத்தையும், தந்திரத்தையும் தமிழ் வாக்காளர்கள் மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, அந்த பட்டியலில், புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாக போட்டியிடும் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்குதான் தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும்.

Exit mobile version