பொது தூபி :தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தினை கேவலப்படுத்துவது போன்றது-சுரேஷ் பிரேமசந்திரன்

விடுதலை போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களை, கொன்றவர்களையும் ஒன்றாக இணைத்து நினைவு தூபி அமைப்பது என்பது தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தினை கேவலப்படுத்துவது போன்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

பொது தூபி அமைப்பது தொடர்பில் இன்றைய தினம்  சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

அண்மையில் ஜனாதிபதி யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறும் முகமாக ஒரு தூபியினை கட்டுவதாகவும், அதற்காக முடிவெடுத்துள்ளார் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.

அதையடுத்து தமிழ், சிங்கள சமூகங்களிற்கிடையே இது பற்றிய பேச்சுக்கள் எழுந்தன.

தமிழர்களை பொறுத்த வரை விடுதலைக்காக போராடிய இனமே எம் இனம். அவ்வாறான போராட்டத்திற்கு அடக்கு முறையும், ஆட்சியாளர்களும் மூலகாரணம்.

அதிகளவான பொதுமக்கள் , போராளிகள் என்று பலர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் விடுதலைக்காக போராடிய  ஒரே ஒரு காரணத்தாலே இடம்பெற்றது.

இவ்வாறாக கொல்லப்பட்டவர்களை, சுட்டு கொன்றவர்களையும் ஒன்றாக இணைத்து பொது தூபி என்ற பெயரினையும் வைத்து அதனை நாம் கொண்டாடுவோம் என்று கருதுவது எமது விடுதலை போராட்டத்தினை கேவலப்படுத்த கூடிய ஒரு செயற்பாடே.  அதனால், இவ்வாறான பொது ஏற்பாடு என்பது தேவையற்றது.

ஆனாலும் யுத்தத்தில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களிற்காக பொது விழாக்கள் மேற்கொள்ளப்படுகின்றது. அதனை அவர்கள் தொடர்ந்தும் செய்யலாம்.

அதே போன்று யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகள் ,போராளிகள் மற்றும் தமிழ் மக்களிற்காக அஞ்சலி செலுத்த வேண்டியது தமிழர்களின் கடமையும் தேவையுமாக   காணப்படுகின்றது. அதனால் அதற்கான ஏற்பாடுகளை தமிழ் மக்கள் முன்னெடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

சிங்களவர்களை பொறுத்த மட்டில் இது பயங்கரவாதிகளின் போராட்டமாக இருக்கலாம் ஆனால் எம்மை பொறுத்த மட்டில் இது விடுதலை போராட்டம்.

இவ்வாறாக எமது மக்களையும் போராளிகளையும் நாம் கௌரவப்படுத்துவதை தடை செய்ய கூடாது. அதற்கான உரிமை  சர்வதேச ரீதியில் அவர்களிற்கு கிடையாது.

அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதுடன், லட்ச கணக்கான எமது மக்களை கொன்று குவித்து விட்டு அதற்காக ஆதங்கப்பட்டு ஒன்றாக இணைத்து தூபி கட்டுவது என்பது தேவையில்லாத வேலை. மாறாக யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளிற்காகவும், போராளிகளிற்காகவும் தூபி கட்டுவதற்கு தமிழ் மக்களிற்கு வழி விடுங்கள்.

அதை விடுத்து இணைத்து தூபி கட்ட நடவடிக்கை எடுத்தால் அதனை தமிழ் மக்கள் ஏற்றக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.