இலங்கையில் 1,3421 வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்களித்தன் பின்னர் வீடுகளுக்கு செல்லுங்கள், பொது இடங்களில் ஒன்று சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவதை இயலுமான வகையில் தவிர்த்துக் கொள்ளுங்கள். அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் குறித்து காவல்துறை ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிடுகையில்,
வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சட்டவிரோதமானது. விசேட தேவையுடையவர்கள். வயதுமுதிர்ந்தோர் ஆகியோருக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குதாயின் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திடம் முன்கூட்டியதாகவே அனுமதி பெற வேண்டும்.
தேர்தல் பணிகளின் நிமித்தம் 63,145 காவல்துறை உத்தியோகஸ்த்தர்கள் நேரடியாக கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் 3200 விசேட அதிரடி படையினரும், 6000 இணை சேவை உத்தியோகஸ்த்தர்களும், 11 ஆயிரம் முப்படையினரும் 12227 சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
3109 நடமாடும் சேவைகளும், வாகன சோதனைகளுக்காக 269 வீதி தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 1591 தற்காலிக தொழிலாளர்கள் கடமைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கடமைகளுக்காக 4525 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
பொதுத்தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு நிமித்தம் காவல்துறையினர் உட்பட முப்படையினர் உள்ளடங்களாக சுமார் 90 ஆயிரம் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் மற்றும் பொதுச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாக்களிப்பு முடிவடைந்த பின்னரும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செயற்படுத்தப்படும் என்றார்.