Tamil News
Home செய்திகள் பேரறிவாளன் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளன் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் விடுதலைக்காக எடுத்த நடவடிக்கைகள் பற்றி 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென தமிழக அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றார். இவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

வெடிகுண்டுக்காக தான் பற்றரி வாங்கித் தரவில்லை என விசாரணை அதிகாரி கூறியதன் அடிப்படையில், அந்த பெல்ட் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது குறித்து விசாரணை கோரி தனது மனுவை பேரறிவாளன் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை(21) நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி நாகேஸ்வர ராவ், சிபிஐ தரப்பை நோக்கி ஏற்கனவே உத்தரவிட்டபடி புதிதாக வழக்கு விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் செய்துவிட்டீர்களா என்று கேட்டார். அதற்கு சிபிஐ தரப்பு வழக்கறிஞர், இலங்கை உள்ளிட்ட பல வெளிநாடுகளில் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், இதற்காக அந்நாட்டு அரசுகள் இன்னும் அனுமதியளிக்கவில்லை என்றும் கூறினார்.

அப்போது பேசிய பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரைத்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

அப்போது குறுக்கிட்ட சிபிஐ வழக்கறிஞர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை என்றார். அதற்கு பதிலளித்த நீதிபதி நாகேஸ்வர ராவ், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்பது தங்களுக்கு தெரியும் என்றார். அத்துடன் பேரறிவாளன் விடுதலைக்காக எடுத்த நடவடிக்கைகள் பற்றி 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் உத்தரவிட்டார்.

Exit mobile version