பேச்சுச் சுதந்திரம் அவசியம் என்பதற்கு நாம் முன்வைக்கின்ற மூன்றாவது வாதம் என்னவென்றால், நாம் விரும்பும் கலை மற்றும் திரைப்பட இலக்கியங்களை நாம் வாசிக்க, பார்க்க, கேட்க எமக்கிருக்கும் சுதந்திரமாகும். 1970 இன் நடுப்பகுதியில் உயர்தரப் பாடசாலையில் நான் கல்விகற்றுக்கொண்டிருந்த பொழுது, ஒரு நாள் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த பொழுது, டி.எச்.லோறன்ஸ் (D.H. Lawrence) என்ற எழுத்தாளரின் ‘Sons and Lovers’ என்ற புத்தகத்தைக் கையில் வைத்திருந்தேன். எனது தந்தை என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, நான் இளைஞனாக இருந்த பொழுது உந்தப் புத்தகத்தை வாசிக்க எங்களுக்கு அனுமதி இருக்கவில்லை என்றார்.
அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? அந்தக் காலத்தில் அப்புத்தகம் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அக்காலத்தில் இரகசியமாக அந்தப் புத்தகத்தின் சில பகுதிகளைப் பெறக்கூடியதாக விருந்தது. புத்தகத்தின் முக்கிய பகுதிகள் அகற்றப் பட்டிருந்தன. பின்னர் நீதிமன்றம் அவ்வாறான புத்தகங்களை வாசிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் 50 களுக்கும் 60 களுக்கும் முன்னர், கூட்டாட்சி அரசின் ஆயப்பகுதியினர் தங்களது துறைமுகங்களுக்கு யாராவது டி.எச்.லோறன்சின் நாவலைக் கொண்டு வந்தால் அதனைப் பறிமுதல் செய்தார்கள். உயர்ந்த வகையைச் சேர்ந்த புத்தகம் எது என்று ஒரு ஆயப்பகுதி அதிகாரியைக் கேட்ட பொழுது அவர் “ ஒருவர் எனக்குத் தெரியாமல் கடத்த முயலும் ஒரு கூடாத புத்தகம்” என்று பதிலளித்திருந்தார். உயர்ந்த எழுத்தாளர்கள் என்று யாரெல்லாம் கணிக்கப்பட்டார்களோ அவர்களது புத்தகங்கள் அனைத்துமே தடைசெய்யப்பட்டிருந்தன. ஹெமிங்வே (Hemingway), ஜொய்ஸ் (Joyce), வோக்னர் (Faulkner) , லோறன்ஸ் போன்ற உன்னத எழுத் தாளர்களின் ஆக்கங்கள் அனைத்துமே தடை செய்யப்பட்டிருந்தன.
திரைப்படத்துறையைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்! இலத்திரனியல் வகையைச் சார்ந்தபொழுதுபோக்குகள் வரத் தொடங்கியதன் பின்னர் nickelodeons போன்ற படங்கள் வந்தன. ஆரம்பத்தில் மௌனப் படங்களும் பின்னர் பேசும் படங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. திரையில் எதனைக் காட்டமுடியும் என்பது தொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் சட்டங்களை அறிமுகப்படுத்தின. உண்மையில் இந்தச் சட்டங்களை வாசித்தால் முசுப்பாத்தியாகத் தான் இருக்கும். இந்தச் சட்டம் மேரிலாண்ட் மாநிலத்தால் இயற்றப்பட்டது: சிலேடை நகைச்சுவை விடயங்கள், இரகசியக் காதல் அல்லது காதல் உணர்வுகளை வெளிப் படுத்தும் காட்சிகள் போன்றவற்றைத் திரையில் காட்ட முடியாது என்றது அந்தச் சட்டம். விபச் சாரத்தில் வாழும் ஆண்கள், பெண்கள். மதுவைக் குடிக்கும் மற்றும் சூதாட்டக் காட்சிகள், அல்லது தாய்மை தொடர்பான காட்சிகள் இவ்வாறான காட்சிகளைத் திரையில் காட்ட அந்தச் சட்டம் அனுமதிக்கவில்லை.
மேலும் இனவெறுப்பைத் தூண்டக்கூடிய தலைப்புகள், தொழிலாளர் மற்றும் முதலாளிகள் இடையே எதிர்ப்புணர்வுள்ள உறவுகள் போன்றவை அந்தச் சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டிருந்தன. உண்மையில் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய எல்லாமே தடைசெய்யப்பட்டது. பாலியல், வன்முறை, அரசியல் எல்லாமே தடைசெய்யப்பட்டிருந்தது. ஒரு முறை ஒரு திரைப்படத்தில் குழந்தைக்கு பாலூட்டும் காட்சி தணிக்கைசெய்யப்பட்டது. ஒரு முறை மெம்பிஸ் (Memphis) நகரத்தில், வெள்ளை, கறுப்பு ஆகிய இரு இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்கும் ஒரு வகுப்பை ஒரு திரைப்படம் காட்டிய பொழுது, அங்குள்ள தணிக்கைக் குழு அந்தக்காட்சிக்குத் தடைவிதித்தது, அதாவது தெற்கிலுள்ள மக்களின் உணர்வுகளை அது பாதிக்கும் என்ற காரணம் சொல்லப்பட்டது. உண்மையில் அது தெற்கிலுள்ள வெள்ளை இனத்தைச் சேர்ந்த மக்களையே குறித்தது. அது உண்மையா? ஆம் அது உண்மை தான்! அர்த்தமுள்ள எந்த விடயமும் மற்றவர்களைப் பாதிக்கும். ஒரு விடயம் பார்ப்பவர்களைப் பாதிக்காது விட்டால் அது அர்த்தமற்றது என்பது தான் பொருள்.
பேச்சு சுதந்திரம் தொடர்பாக நாங்கள் இறுதியாக முன்வைக்கும் வாதம் என்னவென்றால், பாடசாலையில் நாங்கள் கதைக்க விரும்பும் விடயங்களைச் சுதந்திரமாகக் கதைக்கக்கூடியதாக இருப்பதற்குப் பேச்சுச் சுதந்திரம் தான் அடித்தளம். அமெரிக்காவின் வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கும் போது, நீண்டகாலமாக அந்தச் சுதந்திரம் பாடசாலைகளில் இருக்கவில்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் சுதந்திரமாகப் பேசும் உரிமை முன்னர் இருக்கவில்லை. இனத்துவ நீதிப் போராட்டங்கள் தொடங்கியதன் பின்னர் தான் அவ்வாறான உரிமைகள் வழங்கப்பட்டன. 1960 களின் தொடக்கத்தில், “ஒருவர், ஒரு வாக்கு” (One man one vote) என்ற சுலோகம் பொறித்த பட்டனை அணிந்து மாணவர்கள் பாடசாலை சென்றனர். அது உண்மையில் குடியுரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு அமைப்பினால் முன்வைக்கப்பட்டது. அந்தச் சுலோகத்தை அணிந்து பாடசாலை சென்ற மாணவர்கள் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். ‘இவ்வாறான செயற்பாடுகள் கற்றல் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்காத பட்சத்தில் அவை அனுமதிக் கப்படலாம்’ என்று பின்னர் நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கியது. மேரி பெத் ரிங்கரின் (Mary Beth Tinker) வழக்குக்கு அது தான் அடித்தளமாக அமைந்தது. மேரி பெத் குடும்பம் கூட குடியுரிமை இயக்கத்திலிருந்து வந்த ஒரு குடும்பம் தான். அவளது தந்தை ஒரு குடியுரிமைப் போராளியாக இருந்தார். இரு இனங்களையும் சேர்ந்தவர்களை அனுமதிக்கக்கூடிய நீச்சல் தடாகத்துக்காகப் போராடியதற்காக, ஒரு போதகரான அவர் தனது ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். கடைசியாக மேரி பெத் ரிங்கர் தான் சொல்ல விரும்பிய விடயத்தைச் சொல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அந்த முடிவு வர ஓரிரு ஆண்டுகள் தேவைப்பட்டன. பாடசாலையில் ஆசிரியர்களும் மாணவர்களும் தாம் பேச விரும்பிய விடயங்களைப் பேச முடியாத ஒரு காலத்திலேயே அவர்கள் வாழ்ந்தார்கள்.
விமர்சனம்மிக்க இனத்துவ கோட்பாடு (critical race theory) தொடர்பாக ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். இந்தக் கோட்பாடு சொல்வது என்னவென்றால் இனவேற்றுமை என்பது மேற்குலகின் ஒழுங்கமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது. ‘இந்தக் கோட்பாட்டுக்கு பாடசாலைகளில் தடைவிதிக்க வேண்டும்’ என்ற குரல்கள் அண்மைக்காலமாக எழுந்துகொண்டிருக்கின்றன. ஆட் ஸ்பீகல்மானின் மேஉஸ் (Art Spigelman – Maus) என்ற நூலைப் பாருங்கள். ரோணி மொறிசன் (Toni Morrison) எழுதிய பிலவட் (Beloved) என்ற நூலைப் பாருங்கள். இவ்வாறான விடயங்கள் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்ற காரணத்தையே இவர்கள் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். இந்த எண்ணங்கள், இந்தப் படங்கள் எமக்குத் தீங்கு விளைவிக்கும். இது தான் அவர்கள் சொல்கின்ற காரணம். இவற்றை நாங்கள் பார்க்கக்கூடாது. இளையோர் இவற்றைப் பார்க்க நாங்கள் அனுமதிக்க முடியாது. நான் குறிப்பிட்ட தணிக்கை முயற்சிகளில் அதிகமானவை குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை. ஆனால் இரண்டு கட்சிகளிலும் இவ்வாறான மனப்பாங்கை நிச்சயம் காணலாம்.
மாக் ற்வெய்ன் (Mark Twain) எழுதிய ஹக் வின் (Huck Finn) என்ற புத்தகமும் To Kill a Mockingbird என்ற Harper Lee இன் புத்தகமும் அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் தடைசெய்யப்பட்ட இரண்டு புத்தகங்கள். இந்தத் தடைகள் இடதுசாரிகளிடமிருந்து தான் வந்தன. அவர்கள் சொல்லும் காரணம் ஒன்றே தான். இந்தப் புத்தகங்களில் உள்ள சொற்களும் படங்களும் வார்த்தைப் பிரயோகங்களும் எங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அவை வெறுப்புக்குரியவை. அவற்றை நாங்கள் வாசிக்க முடியாது. அவை எங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த முதல் அவற்றைத் தூக்கி எறியுங்கள். உண்மையில் பேச்சு நோவை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கோம்ஸ் ஏன் அதனைத் தடைசெய்ய விழைந்தார் என்பது எனக்குத் தெரியும். அவர் பேசும் விடயத்துக்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டுமே ஒழிய ஒருவரது பேச்சை நாம் தடைசெய்யக்கூடாது.
இனத்துவேசமான ஒருவரது பேச்சை விமர்சிப்பது கூட ஒருவகை பேச்சுச் சுதந்திரம் தான். ஆனால் ஒருவர் பேசுவதற்கான சுதந்திரத்தைப் பறிப்பதிலிருந்து அது வித்தியாசமானது. அது நல்ல விடயம் அல்ல. உண்மையில் சனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கைக்கு அது கேடு விளைவிக்கிறது. எங்களை நாங்களே ஆளலாம் என்ற விடயத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்குமாயின், எல்லோரும் பேசுவதற்கு நாங்கள் அனுமதிக்க வேண்டும். எல்லோரையும் பேச அனுமதிப்பதன் ஊடாகத் தான், நீதியான ஒரு சமூகத்தை நாங்கள் கட்டியெழுப்ப முடியும். ஒருவர் தனது கருத்தைச் சொல்லும் உரிமை எப்போது பறிக்கப்படுகின்றதோ, அப்போது சுதந்திரம் அர்த்தமற்றதாகி விடுகிறது என்று பிறெடெறிக் டக்ளஸ் (Frederick Douglas) ஒருமுறை கூறினார்.
டக்ளஸ் அடிமைத் தளையினின்று விடுதலை பெற்ற ஒருவர். பல அமெரிக்கர்கள் அறிந்திராத கொடுமைகளை தனது அடிமை வாழ்க்கையில் அனுபவித்தவர். ஆனால் எமது சமூகத்தின் அநீதிகளை நாம் நீக்க வேண்டுமாயின், எமக்குள்ள பேச்சுச் சுதந்திரத்தை நாம் ஒருபோதுமே இழந்துவிட முடியாது. நீதிக்காக உரத்துக் குரல்கொடுத்த தைரியம் மிக்க ஆண்களையும் பெண்களையும் நாம் மறந்துவிட முடியாது. பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக நாங்கள் எல்லோ ருமே குரல் கொடுக்க வேண்டும். எம்மைச் சுற்றி
யிருக்கும் அநீதிகளிலிருந்து எம்மை நாம் விடுவிக்க வேண்டுமாயின் பேச்சுச் சுதந்திரத்தை என்ன விலை கொடுத்தும் நாம் காப்பாற்றியாக வேண்டும். வாழ்க பேச்சுச்சுதந்திரம். மிக்க நன்றி
நன்றி: TED Talks