பேச்சாளர் பதவியில் தொடரும் மோதல்-செல்வத்துக்கான வாய்ப்பு எப்படியுள்ளது?

105
123 Views

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு வரப்போவது சிவஞானம் சிறீதரனா? அல்லது செல்வம் அடைக்கலநாதனா?

தமிழ் அரசியல் பரப்பில் கடந்தவார ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கேள்விக்கு இதுவரையில் பதில் காணப்படவில்லை. பொதுத் தேர்தல் நடைபெற்று இரண்டு மாதங்கள் சென்றுள்ள நிலையிலும், கூட்டமைப்பின் இரண்டு முக்கியமான பதவிகள் இதுவரையில் வெற்றிடமாகத்தான் இருக்கின்றது.

ஒன்று – கூட்டமைப்பின் கொரடா யார் என்பது.

இரண்டு – கூட்டமைப்பின் பேச்சாளர் யார் என்பது.

கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இரா.சம்பந்தன் தெரிவாகியிருக்கின்றார். பேச்சாளர் தெரிவில் கடும் பலப்பரீட்சை உருவாகியிருப்பதால், கொரடா பதவிக்குரியவரையும் தெரிவு செய்யப்பட முடியாத நிலை தொடர்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்கொண்ட படுதோல்விக்கு அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்தான் பிரதான காரணம் என்ற குற்றச்சாட்டு பங்காளிக் கட்சிகளால் மட்டுமன்றி, அவர் சார்ந்த தமிழரசுக் கட்சியாலும் முன்வைக்கப்பட்டது.

காணாமல்போனோர் விவகாரத்தில் ஜனாதிபதியின் கருத்தை ஏற்க முடியாது – சிறீதரன் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

2015 ஆம் ஆண்டிலிருந்தே பேச்சாளர் பதவி என்பது கூட்டமைப்புக்குள் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. அதற்கு முன்னர் பேச்சாளராக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் 2015 தேர்தலில் தோல்வியடைந்தார். அந்த நிலையில்தான் எம்.ஏ.சுமந்திரன் பேச்சாளராகத் தெரிவாகியிருந்தார். ஆனால், ஒரு பேச்சாளர் என்பதற்கு மேலாக அவரே பெரும்பாலான முடிவுகளை எடுப்பவராக மாற்றடைந்ததுதான் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கும் காரணமாக இருந்தது. கூட்டமைப்பின் தோல்விக்கும் அதுதான் காரணம் என்ற கருத்து பல்வேறு மட்டங்களில் முன்வைக்கப்பட்ட நிலையில், பேச்சாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து கூட்டமைப்புக்குள் வலுவடைந்திருந்தது.

பூகம்பமாகிய நாடாளுமன்றக்குழு

கடந்த புதன்கிழமை நண்பகல் நடைபெற்ற கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்புக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று – பொதுத் தேர்தல் இடம்பெற்று இரண்டு மாதங்கள் கடந்து விட்டதால், இந்தத் தெரிவுகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது முதலாவது காரணம்.

இதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் தலைவர், கொரடா, பேச்சாளர் ஆகிய பதவிகளுக்கு யார் யாரைத் தெரிவு செய்வது என்பதில் இணக்கம் ஏற்பட்டிருந்தது. அதன்படி தலைவராக சம்பந்தன், கொரடாவாக சித்தார்த்தன், பேச்சாளராக செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஒருங்கிணைப்புக்குழு எடுத்த அந்த முடிவுக்கு பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை மட்டுமே இருந்தது. புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் தலைவர் பதவிக்கான அங்கீகாரத்தை சம்பந்தனுக்கு பாராளுமன்றக் குழு ஏகமனதாக வழங்கியது. பேச்சாளர் விவகாரம் எடுக்கப்பட்ட போது, தான் அந்தப் பதவியிலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்த சுமந்திரன், அந்தப் பதவிக்கு சிறிதரனின் பெயரைப் பிரேரித்த போதுததான் பிரச்சினை உருவாகியது.

கடுமையாக எதிர்த்த ரெலோ

இதற்குப் போட்டியாக செல்வம் அடைக்கலநாதனின் பெயர் பரேரிக்கப்பட்டது. “ஒருங்கிணைப்புக் குழுதான் கூட்டமைப்பின் அதி உயர் பீடம், முக்கியமான முடிவுகள் அதில்தான் எடுக்கப்பட வேண்டும். செல்வத்தை பேச்சாளராக நியமிப்பதற்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்கனவே முடிவெடுத்து விட்டது. அந்த முடிவை மாற்ற முடியாது” என்பதில் ரெலோ எம்.பி.க்கள் உறுதியாக நின்றார்கள். சம்பந்தனும் அந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டார்.

இருந்த போதிலும், சுமந்திரனும், சிறிதரனும் தமது நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்கத் தயாரகவில்லை. இதனால் உருவாகிய வாக்குவாத் கடுமையாகியது. இரு தரப்பினரும் தமது நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவரத் தயாராகவிருக்கவில்லை. வாக்கெடுப்புக்கு விடலாமா? என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. வாக்கெடுப்புக்கு விட்டால், தமது ஆதரவு செல்வத்துக்கு என சம்பந்தனும் சொல்லிவிட்டார். அதேவேளையில், தேசியப்பட்டியல் மூலம் தெரிவான கலையரசன் வாக்களிக்க முடியாது என்பதையும் ரெலோ தரப்பு கூறிவிட்டது.

இந்த நிலையில் சிறிதரனுக்கு ஆதரவாக 4 வாக்குளும், செல்வத்துக்கு 5 வாக்குகளும் கிடைத்திருக்கும். சம்பந்தனும், கலையரசனும் தமக்கு வாக்களிப்பார்கள் என சுமந்திரன் – சிறிதரன் எதிர்பார்த்தார்கள். ஆனால், இதனை வாக்கெடுப்புக்கு விட சம்பந்தன் தயாராகவிருக்கவில்லை. அது கூட்டமைப்பின் மரபல்ல என அவர் கூறியிருக்கின்றார். அதேவேளையில், தொடர்ந்தும் இடம்பெற்ற குழப்பத்தினால் பேச்சாளர் தெரிவை காலவரையறையின்றி ஒத்திவைத்திருக்கின்றார் சம்பந்தன்.

செல்வம் மீது ஏன் பாய்ச்சல்?

பொதுத் தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் சுமந்திரன் மீது செல்வம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுதான் தற்போதைய முரண்பாடுகளுக்குக் காரணம் எனக் கூறப்படுவதை ரெலோ மறுக்கின்றது. கடந்த காலங்களில் ரெலோவைப் பலவீனப்படுத்தும் பல நடவடிக்கைகளை தமிழரசுக் கட்சி முன்னெடுத்த போது ரெலோ பொறுமையாக இருந்தது.

குறிப்பாக அம்பாறை  மாவட்ட எம்.பி.யாக இருந்த கோடீஸ்வரன் ரெலோவைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், அவர் கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டார். இதற்கு எதிராக ரெலோ கடுமையான நிலைப்பாட்டை அறிவித்த போதிலும், பின்னர் மௌனமாகி விட்டது.

இவ்வாறு பல சந்தப்பங்களில் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கத்தை ரெலோ ஏற்றுக்கொண்டது. இது ரெலோவுக்குள் கூட முரண்பாடுகளை ஏற்படுத்தியது. முக்கியமாக ஶ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் ரெலோவிலிருந்து பிரிந்துபோக இந்த நிலைமைதான் காரணமாக இருந்தது. இதுபோல ரெலோவுக்குள் எழுக்கூடிய உள்ளக முரண்பாடுகளைத் தவிர்க்க வேண்டுமானால், பேச்சாளர் பதவியைத் தக்கவைக்க வேண்டும் என்ற நிலை ரெலோவுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

ரெலோவின் முடிவு என்ன?

பேச்சாளர் பதவியைத் தரப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சி விடாப்பிடியாக இருந்தால், ரெலோவின் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்ற கேள்வி முக்கியமாக இருக்கின்றது.

“பேச்சாளர் பதவியை விட்டுக்கொடுப்பதில்லை என்பதில் சுமந்திரன் – சிறிதரன் தரப்பு விடாப்பிடியாக நின்றால், புளொட் அமைப்புடன் இணைந்து இது தொடர்பில் முடிவு ஒன்றை எடுத்து, கூட்டமைப்பின் பேச்சாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம்”  என ரெலோவின் முக்கியஸ்த்தர் ஒருவர் குறிப்பிடுகின்றார். “இது தொடர்பில் ரெலோவின் தலைமைத்துவக் குழு கூடி இறுதி முடிவை எடுக்கும். புளொட் அமைப்புடனும் இது குறித்துப் பேசுவோம். அதனையடுத்து கூட்டமைப்பின் பேச்சாளர் என செல்வம் அடைக்கலநாதனை நாம் அறிவிப்போம்” என ரெலோவின் முக்கியஸ்தர் குறிப்பிடுகின்றார்.

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் கனதியான ஒன்றாக மாற்றமடைந்திருக்கும் நிலையில், அனைவரது கவனமும் இதில் குவிந்திருக்கின்றது. குறிப்பாக, ராஜபக்‌ஷக்களின் அரசாங்கம் பலமான ஒன்றாக – இனவாத அடிப்படையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. ஜெனீவாவில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வரப்போகின்றது. இந்தப் பின்னணியில்தான் கூட்டமைப்பின் பேச்சாளருக்குரிய கனதி அதிகமானதாகவே இருக்கின்றது. அதற்கான போட்டி கடுமையாக இருப்பதற்கும் இதுதான் காரணம்!

– அகிலன் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here