பெரும்பான்மை சிங்கள மக்களினால் இத்தகைய வெற்றியை பெறமுடியும் என்பதை நான் உறுதியாக நம்பினேன் – கோட்டாபாய

சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபாய ராஜபக்ஷ இன்று (18) இன்று அநுராதபுர புனித ருவான்வெலிசாய மண்டபத்தில் ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

சத்திய பிரமாணம் செய்துகொண்ட பின்னர் பொதுமக்களுக்கு புதிய ஜனாதிபதி உரையாற்றினார். இந்த வெற்றி பெரும்பான்மை சிங்கள மக்களினால் பெறமுடியும் என்பதை தான் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்ததாகவும் கூறினார். இருப்பினும் இந்த வெற்றிக்காக தாம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்

தெற்கில் சிங்கள பௌத்த குடும்பத்தில் இருந்து வந்த நான், கல்வி கற்றதும் இலங்கையின் பிரதான பௌத்த பாடசாலையிலாகும். அதன் காரணமாக பௌத்த தர்மம் எப்போதும் எனது எண்ணத்தில் இருக்கின்றது.

எனது பதவிக் காலத்தில் இந்நாட்டின் பௌத்த தர்மத்தினை பாதுகாத்து, மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன்.

சுமார் ஆயிரம் வருடங்கள் வரலாற்றை கொண்ட சிங்கள கலாசாரம் மற்றும் உரிமைகளை நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

தேசிய ரீதியில் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான காலம் ஏற்பட்டுள்ளது என்பதினால் அதற்காக செயற்படுவதற்கு ஒன்றிணையுமாறும் நாட்டுக்காக தீர்மானங்களை மேற்கொள்ளும் போது தமக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு எந்த வகையிலும் பின்னிற்க போவதிலை என்றும் புதிய ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டினார்.