இலங்கையின் வருமானத்தில் பிரதான பங்காளிகளாக மலையக தோட்ட தொழிலாளர்கள் 1820ஆம் ஆண்டின் முன்பிருந்தே தமது பங்களிப்பபை வழங்கி வருகின்றனர். ஆனால் இந்த சமூகம் எதிர்நோக்கும் பிரச்சி னைகள் அளவிட முடியாதவை.
குறிப்பாக வீட்டுரிமை, காணியுரிமை, கல்வியுரிமை, பாதுகாப்புரிமை தொடர்பாக பல்வேறு பிரச்சினை களுக்கு மத்தியில் வாழும் இவர்களின் நலன் களை மேம்படுத்தும் செயற்பாடுகளை மலை யக வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொண்டிருக்கவில்லை. மலையக பெருந் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தும் போது அந்த மக்களை தனியாருக்கு தாரைவார்த்த ஒப்பந்தம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
1972ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிடமிருந்து தேயிலை தோட்டங்களை பொறுப்பேற்ற போது சகல தோட்டங்களும் பெருந்தோட்டங்களாக காணப்பட்டன. எனினும் 1992ஆம் ஆண்டு அதனை அரசாங்கம், தனியார் மயப்படுத்த ஆரம்பித்த போதே தேயிலை தொழிற்றுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. 1995ஆம் ஆண்டு அரசாங்கமானது (பெருந்தோட்ட அமைச்சு) பெருந்தோட்டங்களை பராமரிக்கவும் முகாமைத்துவம் செய்யவும் 23 பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுடன் 54 வருட ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டது.
தோட்டங்களை தனியார் மயப்படுத்துவது என அரசாங்கம் முடிவெடுத்தமைக்கு உலக வங்கியின் ஆலோசனையும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அச்சந்தர்ப்பத்தில் பிரதான தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானும் இதற்கு ஆதரவாகவே இருந்தார். அக்காலகட்டத்தில் அதற்குப் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக தோட்டங்களை அரசாங்கமே வைத்திருந்தால் தமிழ் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
எனினும் அரசாங்கம் தமது பொறுப்புகளில் இருந்து விலகி செயற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பெருந்தோட்ட காணிகளை தனியார் கம்பனிகளுக்கு வழங்குவதற்காக கைச்சாத்திடப் பட்ட ஒப்பந்தம் குத்தகை ஒப்பந்தமா? என்ற கேள்வி எழுகிறது. குத்தகை ஒப்பந்தம் என்பது நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு இடையே உள்ள உரிமைகள் மற்றும் பொறுப்பு களை வரையறுக்கிறது.
இது ஒரு சட்டப்பூர்வ ஆவணமாகும். மேலும் இது சொத்தை குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகைக்கு விடுவதை உள்ளடக்கியது. எவ்வாறாயினும், 1995ஆம் ஆண்டு வரை தோட்டங்களை நிர்வாகம் செய்து வந்த இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத் தாபனம் (SLSPC) மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) ஆகிய இரண்டு பிரதான நிறுவனங்களும் தோட்டங்களை நிர்வகிப்பதில் முகங்கொடுத்த சிக்கல்கள் காரணமாகவும் நிதி நிர்வாகத்தில் அவை வீழ்ச்சியை சந்தித்திருந்ததன் காரணமாகவும் பெருந்தோட்டங்களை தனி யாருக்கும் வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதில் குறிப்பிடத்தக்கதொரு விடயம் உள்ளது. இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் (SLSPC) மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) ஆகியவற்றிடம் இருந்து நேரடியாக பெருந்தோட்டங்கள், கம்பனிகளிடம் ஒப்படைக் கப்பட்டன.
இது சில பிரச்சினைகளின் போது நிலத்தின் உரிமையாளர் யார்? என்ற கேள்வியை உருவாக்குகிறது. அதாவது அரசாங்கம் குறித்த காணிகளை பொறுப்பேற்று அதன் பின்னர் தனியார் கம்பனிகளிடம் ஒப்படைப் பதற்கு பதிலாக மேற்குறிப்பிட்ட இரண்டு அரச நிறுவனங்களினதும் வர்த்தகம் வீழ்ச்சி யடைந்துள்ளமையால் அதன் செயற் பாடுகளை தனியாருக்கு வழங்குவதாக ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்டுள்ளது. இதனையே நட்டத்தில் இருந்த தோட்டங்களை பொறுப்பேற்று முன்கொண்டு செல்வதாக தனியார் கம்பனிகள் கூறி வருகின்றன. அதேநேரம், ‘இந்த நிலம் அரசுடையது. அதில் கம்பனிகள் தொழில் செய்யலாம்’ என்ற அடிப்படையிலேயே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இவ்வாறான காரணங்களால் அந்த ஒப்பந்தத்தை முழுமையான குத்தகை ஒப்பந்தமாக கருத முடியாது. எனினும் அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தில் பிரதான பங்கு தாரராக (Golden Share Holder) உள்ளது.
அதேநேரம், குத்தகை ஒப்பந்தத்துக்கான விதிகளின் அடிப்படையில், குத்தகைதாரர் பெற்ற காணியை மற்றுமொருவருக்கு குத் தகைக்கு வழங்க முடியாது. மாறாக வர்த்தக மாதிரி ஒப்பந்தத்தில் அவ்வாறான காணிகளை உப கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்க முடியும். இன்று பல பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டங்களை உப கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளன. இதனூடாகவும், அரசாங்கம் கைச்சாத்திட்டது, குத்தகை ஒப்பந்தம் இல்லை என்ற விடயம் புலனாகிறது.
அத்துடன் குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் முறையான செயற்பாடுகள் இடம்பெறாதபட்சத்தில் காணிகளை அரசாங்கம் மீளப் பெற முடியும் என்ற ஒரு சரத்தும் அதிலுள்ளது. இருப்பினும் எந்த அரசாங்கமும் அதற்கு தயாராக இல்லை. அதேநேரம், தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு ஒப்படைத்த போது அந்த செயற் பாடுகளை கண்காணிப்பதற்காக இரண்டு பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டன. அந்த பிரிவுகளின் செயற்பாடுகளும் பெருந்தோட்ட கம்பனிகளு டன் தொடர்புப்பட்டதாகவே காணப்பட்டன. இதன்படி, பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம் மற்றும் பெருந்தோட்ட முகாமைத்துவ மேற் பார்வை பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டன. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முக்கிய பணிகள், தோட்டப்புற மக்களின் சமூக நலன், வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியது. இது தவிர, மலையக பெருந்தோட்ட மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கும் பொறுப்பும் அந்த நிதியத்துக்கு உள்ளது.
இதேவேளை, பெருந்தோட்ட முகா மைத்துவ மேற்பார்வை பிரிவு என்பது பெருந் தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு பிரிவாகும். இது பெருந்தோட்ட கம்பனிகளில் அரசாங்கத்தின் உரிமையைப் பாதுகாக்கவும், குத்தகை ஒப்பந்தங்களை மேற் பார்வையிடவும் நிறுவப்பட்டது. இந்த பிரிவு பெருந்தோட்டங்களின் முகாமைத்துவம், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக ஆலோசனைக ளையும் வழங்குகிறது. இந்த பிரிவுக்கு அர சாங்கத்துக்கும் கம்பனிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மேற்பார்வையிடும் அதிகாரம் உள்ளது. அதாவது குறித்த ஒப்பந்தத்தின் விதிகள் மீறப்படும் சந்தர்ப்பத்தில் காணிகளை மீளப் பெறும் பரிந்துரைகளை பெருந்தோட்ட முகாமைத்துவ மேற்பார்வை பிரிவினால் வழங்க முடியும். இருப்பினும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையி லான ஒப்பந்தம் குத்தகை ஒப்பந்தமாக இருப்பின், அதன் விதிகளுக்கு புறம்பாக செயற்படும் கம்பனிகளிடம் இருந்து தோட்டங்களை மீளப் பெறும் பரிந்துரைகளை அந்த பிரிவினால் வழங்க முடியும். எனினும் குறித்த ஒப்பந்தம் ஒரு வர்த்தக ஒப்பந்தம் என்பதால் கம்பனிகள் அதற்குரிய விதிகளையே பின்பற்றுகின்றன.
எனவே, பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தை குத்தகை ஒப்பந்தமாக கருத முடியாது. அப் படியாயின் அந்த ஒப்பந்தத்தை எளிதில் ரத்து செய்து பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க முடியும். இருப்பினும் அரசாங்கம் அதற்கு தயாராக இல்லை என்பது அதன் செயற்பாடுகளில் தெளிவாகிறது. பல சந்தர்ப்பங்களில் கம்பனிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாகவே அரசாங்கம் கூறி வருகின்றது. இந்த நிறுவுதலின் அடிப்படையில் பெருந்தோட்ட மக்களின் விடயத்தில் பொறுப்பு கூற வேண்டியவர் யார்? என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது.