பெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் -யாழ். ஊடக மன்றம் கண்டனம்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஊடகவியலாளர் சுமித்தி தங்கராசாவிற்கு தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் ஒருவரால் இன்று விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு யாழ் ஊடக மன்றம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது.

தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றினைச் சேர்ந்த உறுப்பினர் அருண் சித்தார்த் என்பவரால் ஒருங்கமைக்கப்பட்ட பேரணி ஒன்று இன்று 2020.03.05 யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

அப்போது அப் பேரணி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சுமித்தி தங்கராசா தனது கடமையை செய்துள்ளார். அவரது கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக குறித்த அருண் சித்தார்த் என்பவர் நடுவீதியில் வைத்து அவரை அச்சுறுத்தியுள்ளார்.

15 வருடங்களுக்கு மேலாக ஊடக துறையில் பணியாற்றிவரும் குறித்த ஊடகவியலாளாரை தனக்கு தெரியாது என்றும் யாழ்பாணத்தை சேர்ந்த ஏனைய ஊடகவியலாளர்கள் மற்றும் யாழ்ப்பாண ஊடகங்களை மிகவும் தரக்குறைவாக பேசியும் உள்ளார். இது ஊடகவியலாளர்களையும் ஊடகங்களையும் இழிவு படுத்தும் செயற்பாடாகவே அமைந்துள்ளது.இந்நிலையில் எமது கடுமையான கண்டனத்தை பதிவு செய்கின்றோம்.

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தி ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயற்பாடாகவே இதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். குறிப்பாக பெண்கள் ஊடகத்துறையில் பலத்த சவால்களுக்கு மத்தியில் பயணிக்கும் இந்த காலகட்டத்தில் குறித்த சம்பவம் பெண் ஊடகவியலார்களை அச்சமூட்டும் சம்பவமாகவே அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் அரச படைகள் மற்றும் அவர்களின் அடியாட்களால் ஊடகத்தாருக்கு எதிராக பல அச்சுறுத்தல்கள், கொலைகள் நடந்தேறியுள்ளன. அதன் வரிசையில் தற்போது அரசியல் கட்சிகளின் அடியாட்களால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் இடம்பெறுவது ஏற்புடையதல்ல என்பதனையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

அச்சுறுத்தல்கள் அதிகமுள்ள சூழலில் மக்களுக்கு உண்மைத் தகவல்களை ஊடகவியலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கொண்டு செல்கிறார்கள். இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்வதனால் அவர்கள் ஊடகத்துறையை விட்டு விலகுவதற்கும் காரணமாக அமைகிறது.

சில வங்குரோத்து அரசியல்வாதிகளும் அவர்களது அடியாட்களும் தமது செல்வாக்குகளை பயன்படுத்தி ஊடகத்துறையினரை அச்சுறுத்த முடியும் என்ற நிலைப்பாட்டை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகள் ஊடாக ஜனநாயகத்தின் 4 ஆவது தூணாகிய ஊடகத்தினர் தமது கடமைகளை செய்வதற்கு இடையூறு விளைவிப்பதை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

யாழ் ஊடக மன்றம்

நன்றி – அருவி