பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-03) விதுரன் 

சென்றவாரத் தொடர்ச்சிசீனாவைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி 2022இல் தோல்வி கண்டதன் பின்னர் இலங்கையில் தன்னுடைய ‘ஒரேமண்டலம் மற்றும் பாதை’ (பி.ஆர்.ஐ) முன்முயற்சியை எவ் வாறு முன்னகர்த்துவது என்பதில் திரிசங்கான நிலைமையே காணப்பட்டது.
குறிப்பாக ராஜபக்ஷக்களின் பிற்பாதி காலத்தினை ஆட்சி செய்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டுக்கலவை அரசாங்கம் சீன ஆய்வுக்கப்பல்கள் இரண்டுக்கு அனுமதி வழங்கிய தன் பின்னர் எடுத்திருந்த கடுமையான முடிவுகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசேடமாக, தெற்கு அதிவேக நெடுஞ் சாலைக்கு வழங்கிய 1545மில்லியன் டொலர்கள், நெடுஞ்சாலை வெளிச்சுற்றுக்காக வழங்கிய 494மில்லியன் டொலர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான நெடுஞ்சாலைக்காக வழங்கிய 248மில்லியன் டொலர்கள், அம்பாந்தோட்டை விமான நிலையத்துக்காக வழங்கிய 243மில்லியன் டொலர்கள், கொழும்பு கிழக்கு முனைத்தில் முதலீடு செய்த 500மில்லியன் டொலர்கள், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திற்காக வழங்கிய 1346மில்லியன் டொலர்கள், கொழும்பு துறைமுக நகரத்துக்காக வழங்கிய 1300மில்லியன் டொலர்கள், தாமரைக் கோபுரத்துக்காக வழங்கிய 88.6மில்லியன் டொலர்கள் உள்ளிட்ட ‘வெள்ளை யானை திட்டங்களுக்கான’ கடன்களை எவ்வாறு மீளப்பெறுவது என்பதில் நெருக்கடிகள் ஏற்பட் டன.
எனினும், 1300மில்லியன் டொலர்கள் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந் தோட்டை துறைமுகத்தினை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகளும், சவால்களாலும் சீனா அதனை 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் மீளப்பெற்றுக்கொண்டது. அவ்வாறு ஏனைய திட்டங்க
ளையும் மீளப் பெற்றுக்கொள்வதற்கு சீனாவுக்கு வாய்ப்புக்கள் காணப்பட்டன. ஆனால் அவற்றி னால் இலாபமீட்டுவதற்கான ஏதுநிலைகள் சீனா வுக்கு காணப்படவில்லை.
ஆகவே, சீனாவைப் பொறுத்தவரையில் 2சதவீதம் முதல் 7சதவீதம் வரையிலான வட்டிக்கு வழங்கிய கடன்களை மீளப் பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பதில் கடுமையான பிரயத்தனங்கள் காணப்பட்டன. இத்தகைய நிலைமையில் தான் ‘ஆட்சியாளர் எங்களுடையவர்’ என்று தோழமை பாராட்டக்கூடிய அளவில் காணப்பட்ட அநுர தலைமையிலான ஜே.வி.பி ஆட்சிக்கு வந்தது.
அநுர ஆட்சியில் அமர்ந்து முதல் விஜயத் தினை இந்தியாவுக்கு மேற்கொண்டுவிட்டு இரண்டாவது விஜயத்தினை சீனாவுக்கு மேற் கொண்டிருந்தார். இதன்போது சீனா பிரத்தியேக விமானத்தை அனுப்பி அவரை அழைத்து மீள அனுப்பியிருந்தது விசேடமானதொரு செயற்பாடா கும்.
இந்த விஜயத்தின்போது இலங்கை, மற்றும் சீனாவுக்கு இடையில் கல்வி, சுகாதாரம், கலாசாரம், ஊடகம் என்று 15துறைகளை மையப்படுத்திய இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. தொடர்ந்து 16ஆவது ஒப்பந்தமாக ஜே.வி.பிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும்; இடையிலான பரஸ் பர உடன்பாடொன்றும் எட்டப்பட்டது.
இந்த உடன்பாடுகள் எட்டப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் உடன்பாடுகள் எட்டப் பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்து வதற்கான உள்ளகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அநுர அரசாங்கம் இழுத்தடிப்புக் களைச் செய்ய ஆரம்பித்தது. குறிப்பாக திட்டங்களுக்கான அமைச்சரவை அனுமதிகளைப் பெறுதல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடகளிலும் இயலுமான வரையில் இழுத்தடிப்புக்களைச் செய்துகொண்டே இருந்தது அரசாங்கம். இதனால் சினமடைந்த இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்பு செய்ததால், சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு, 7 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டதாக தெரி வித்திருந்தார்.
அவருடைய கூற்று ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.  சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு கடன் மறுசீரமைப்பினால் வழங்கிய கடனைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக இழப்பு, ஏற்பட்டிருக்கிறது.  2024 மார்ச் மாத நிலவரப்படி சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு கடன் மற்றும் வட்டியாக இலங்கை செலுத்த வேண்டிய மொத்த தொகை 4896.8 (3,993 மற்றும் 903.8) மில்லியன் டொலர்களாகும்.
கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகு, 2024 ஜூன் மாதம் செலுத்த வேண்டிய மொத்த கடன் 4,187 மில்லியன் டொலர்கள் என்று மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்டது. அதனடிப் படையில் செலுத்தவேண்டிய தொகைக்கும் மறுசீரமைப்புச் செய்த தொகைக்கும் (4896.8-4187) இடைப்பட்ட வித்தியாசம் தான் கடன் மறுசீரமைப்பினால் சீனா இழந்த தொகையாகும். அது 709.8 மில்லியன் டொலர்களாகும்.
கடன் மறுசீரமைப்புக்கு பின்னரும் சீனா வின் எக்ஸிம் வங்கி இந்த கடனை மீளப்பெற்று முடிக்கும் வரை இழப்புக்களை எதிர்கொள்ளும் என்பது உண்மை. அந்தக்கடன் கையில் வந்து சேரும் வரை அதனை மூலதனமாக கருத முடியாது. 2028ஆம் ஆண்டு தொடக்கம் தான் கடன்களை மீளச் செலுத்த ஆரம்பிக்கப் போகிறது இலங்கை. அவ்வாறான நிலையில் 7பில்லியன் இழப்பு எவ்வாறு ஏற்பட்டது என்ற கேள்வி இருக்கின்றது.
அப்படிப்பார்க்கையில் சீனா கந்துவட்டிக்காரர்கள் போன்று தான் கடன்களை வழங்கியிருக்கின்றது. அதுமட்டுமல்ல இந்தியா வழங்கிய 4பில்லியன் டொலர்களை விடவும் தமது இழப்பு மட்டுமே அதிகமானது என்பதையும் சொல்லாமல் சொல்லி யிருந்தார் சீனத்தூதுவர்.
கடன்மறுசீரமைப்பு மற்றும் இழப்பீட்டுத் தொகை விவகாரம் இப்படியிருக்கையில் கூடவே உடன்பட்ட விடயங்களை தாமதப்படுத்தும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் சீனா தற் போதைக்கு எவ்விதமான முதலீட்டுத்திட்டங் களையும் முன்னெடுப்பதில்லை என்று தீர்மானித் திருக்கின்றது.
அதேபோன்று ஏலவே ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களையும் வேகமாக முன்னகர்த்துவதை தவிர்ப்பது என்றும் தீர்மானித்திருக்கின்றது. மாறாக, உடன்பாடுகள் தாமதப்படுத்தப்படுவதற்கான காரணங்களை கண்டறியும் அதற்குரிய நடவடிக் கைளை முன்னெடுக்கவுமே வர்த்தக அமைச்சர் வங் வென்டாவோ தலைமையிலான குழுவினர் நேரடியாகவே இலங்கைக்கு வருகை தந்தனர்.
இந்த விஜயத்தின்போது, கொழும்பு துறைமுகநகரத்தில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்துக்கு நிகரான மண்டபமொன்றை அமைப்பது குறித்து ஆராயப் பட்டுள்ளதோடு  பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான இலங்கை – சீன ஒருங்கிணைப்புக்குழுவின் 8ஆவது கூட்டம் நடத்தப் பட்டு அதில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தல், சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்தல், தொழில்நுட்ப கூட்டிணைவை ஊக்குவித்தல் என்பன தொடர்பில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங் களும். கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இதனைவிடவும், இந்தியா, ரஷ்யா கூட்டில் மத்தள விமான நிலையத்தினை நிருவகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மத்தளவிலிருந்து நேரடியாக சீனாவுக்கு சீன ஏயார் லைன்ஸுக்கு சொந்தமான விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் இணக் கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கு அப்பால், ஏற்படுத்தப்பட்ட உடன் பாடுகளை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர, பிரதமர் ஹரிணி ஆகி யோரிடத்தில் வர்த்தக அமைச்சர் வங் வென் டாவோ நேரடியாகவும் பகிரங்கமாகவும் வலியு றுத்தியுள்ளார். அத்துடன் தாமதங்களுக்கான காரணங்களை அறிக்கையிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேநேரம், வர்த்தக அமைச்சர் வங் வென்டாவோவின் இலங்கை விஜயத்துக்கு சமாந்தரமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேரடியாக ஹொங்ஹொங்குக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவற்காக என்று கூறப் பட்டாலும் அந்த விஜயம் குறித்தோ அங்கு நடை பெற்ற சந்திப்புக்கள் குறித்தே இன்றளவில் மூச்சும் விடவில்லை.
சீனா கடன்மீளச் செலுத்தல் ஆரம்பிப் பதற்கு முன்னதாக, தன்னுடன் உடன்பட்ட விடயங்களை முன்னகர்த்தவும், நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் முதலீட்டு செயற் பாடுகளை நகர்த்துவதிலும் தான் அதீதமான நாட்டத்தினைக் கொண்டிருக்கின்றது. இதில் எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள ‘சீன-இலங்கை சுதந்திரவர்த்தக ஒப்பந்தத்தை’ நடைமுறைப்படுத்தவதையும் சீனா இலக்காக கொண்டிருக்கின்றது. தற்போது ஒருவருடத்துக்கு ஒத்திகை நடவடிக்கையாக சுதந்திர வர்த்தக உடன்பாட்டை நடைமுறைப்படுத்துமாறும் கோரி நிற்கின்றது.
இதற்குள் வெகுவிரைவில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக, அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினையும் ஸ்தாபிப்பதற்கு சீனா பிரயத் தனம் காண்பிக்கிறது. இந்த நகர்வின் மூலமாக தெற்காசிய நாடுகளின் எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்வதோடு அதன் ஊடாக அரசுகளை கட்டுப்படுத்த முடியும் என்று கருதுகிறது சீனா.
அதுமட்டுமன்றி, குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக இரண்டு இலட்சம் பீப்பாய்க்களை நாளொன்றுக்கு உற்பத்தி செய்யும் திறனை கொண்டிருக்கும் சீனா அதனூடாக சர்வதேச வர்த்தகத்தையும் விரிவுபடுத்தவே முனை கிறது.
ஆக, சீனா தனது ‘மண்டலம் மற்றும் பாதை’ முன்முயற்சியின் பங்காளரான இலங்கையை மையப்படுத்திய சர்வதேச வர்த்தக திட்டத்தினை திடமாக தீட்டியிருப்பதால் எந்தவொரு சந்தர்ப் பத்திலும் ஆட்சியில் இருக்கும் எவருக்கும் விட்டுக் கொடுப்புக்களை செய்தாலும் தனது ‘பிடியில்’ உறுதியாக இருக்கும்.
இறுதியாக ஐரோப்பிய நாடுகளின் நகர்வு களையும், ஏனைய ‘பதிலாள்’ பங்குதாரர்களின் கோலோச்சல்களையும் அடுத்த இறுதி அங்கத்தில் பார்க்கலாம்.
தொடரும்