இந்தியா, இலங்கைக்கு அயலில் உள்ள நாடாக இருந்தாலும், தென்னிலங்கை சிங்களத் தலைவர்கள் இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக ஒருபோதும் பாராட்டியதில்லை. பாராட்டப் போவதுமில்லை.
ஜே.ஆர் முதல் அநுர வரையில் இந்திய எதிர்ப்பு வாதத்தைக் கொண்டிருப்பவர்கள் தான். ஆனால் தங்களின் ஆட்சி அதிகாரங்கள் கைவிட்டுப் போகக்கூடாது என்பதற்காக ‘இந்தியாவுக்கு இசை பவர்களாக’ காட்டிக் கொள்வார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் விடு தலை இயக்கங்களை உருவாக்கி ஆயுதங்கள் வழங்கியமை, படைகளை அனுப்பியமை, ஒப்பந்தங்கள் செய்தமை பல இராஜதந்திர வழிக ளைக் கையாண்டு இலங்கையில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களை தமது கட்டுக்குள் வைத்திருப்பதற்கே தொடர்ச்சியாக தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.
அதில் அண்மைக்காலமாக இந்தியா கடைப்பிடித்துவரும் ‘அயல் நாடுகளுக்கு முன் னுரிமை’ என்ற கொள்கையின் கீழ் வரவு செலவுத் திட்டத்திலேயே நிதி ஒதுக்கீடுகளைச் செய்து வருகின்றமை முக்கியமானதொரு விடயம்.
பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தெற்காசிய நாடுகளை மேற்படி கொள்கை மூலமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் இந்தியாவின் இப்புதிய கொள்கையின் பிரதான நோக்கமாக உள்ளது.
அந்தவகையில், இலங்கை பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் இந்தியாவுக்கு மேற்படி கொள்கை மூலமாக தற்போதைய அநுர அரசாங்கத்துடன் ஊடாட் டங்களைச் செய்வதற்கு வாய்ப்பளித்திருக்கின்றது.
அத்துடன் கொரோனா நெருக்கடி மற்றும் மக்கள் எழுச்சி போராட்ட காலத்தில் 4பில்லியன் டொலர்கள் வரையில் நீடித்த கடன்வசதியை வழங்கியமை, சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்கு நீடித்த கடன்வசதி கிடைப்பதற்கு சாட்சியாளராக செயற்பட்டமை உள்ளிட்டவை இலங்கை அரசாங்கத்தின் மீதான தனது ‘பிடியை’ நீடிப்பதற்கு வழிசமைத்துள்ளது.
இத்தகைய பின்னணியில், இந்திய எதிர்ப்புவாதத்தையே தமது அரசியல் மூலதனங்க ளில் ஒன்றாகக் கொண்டிருந்த அநுர அரசாங்கம் தற்போது இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட ஏழு உடன்பாடுகளை பிரதமர் மோடியின் ஏப்ரல் மாத விஜயத்தின் போது மேற்கொள்ளுமளவுக்கு தன்னை மாற்றிக் கொண்டிருக்கின்றது.
பதிலுக்கு இந்தியாவும் மூன்றரை தசாப்தங் களாக வலியுறுத்தி வந்த இந்திய-இங்கை ஒப்பந்த அமுலாக்கம், மாகாண சபைகளுக்கான தேர்தல், உள்ளிட்ட விடயங்களை கைவிட்டுள்ளது. பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுர கூட்டறிக்கையில் குறித்த விடயம் காணப்படாமை அதற்கான மிகக் சிறந்த உதாரணமாகும்.
இதனைவிடவும், இந்தியா, ‘இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்து ழைப்பு’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழாக இராணு வம், பொலிஸ், கடற்படை, என்று பெரும் எண்ணிக்கையானவர்களை வருடாந்தம் இந்தியா
வின் பல பாகங்களுக்கும் அழைத்து வதிவிடப் பயிற்சி என்ற பெயரில் மகிழ்ச்சிப் படுத்துகிறது.
அதேபோன்று பௌத்த தேரர்களுக்கும் புத்தகாய உள்ளிட்ட பௌத்த மையங்களை நோக்கிய விஜயங்களுக்கு இலவசமான வாய்ப்புக் களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றது. பௌத்த தேரர்கள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தவல்லவர்கள் என்பதாலும் இந்தியாவுக்கு எதிரான நிலைமைகளை கொண்டிருப்பவர்கள் என்பதாலும் அவர்களை கையாள்வதற்கான வழி யாக அதனைக் கருதுகின்றது.
இவ்வாறான நிலையில் இந்தியாவுடன் இறுதியாக,
• இந்தியா – இலங்கைக்கு இடையிலான எரி சக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி புரிந்து ணர்வு உடன்படிக்கை,
• இந்தியா – இலங்கைக்கு இடையில் டிஜிட் டல் தொழில்நுட்பம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை,
• இந்தியா – இலங்கை – ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையில் திருகோணமலை எரிசக்தி தொடர்பான புரிந்து ணர்வு உடன்படிக்கை,
• இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுக ளுக்கு இடையிலான பாதுகாப்பு குறித்த புரிந்து
ணர்வு உடன்படிக்கை, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன் படிக்கை,
• இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடு களுக்கு இடையில் சுகாதாரம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை,
• இந்தியாவின் மருத்தக நிறுவனம் மற்றும் இலங்கை தேசிய மருந்தாக்கல் கூட்டு தாபனம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஆகியன கையொப்ப மிடப்பட்டுள்ளன.
ஆனால் இந்த ஒப்பந்தங்களை அநுரஅரசாங்கம் எவ்வளவு தூரம் ஈடுபாட்டையும், ஒத்துழைப்புக் களையும் கொண்டிருக்கின்றது என்பதை கவனத் தில் கொள்வது அதன் போக்கையும், இந்தியாவின் இராஜதந்திர ‘பிடி’ தளர்ந்து போவதற்கான ஏது நிலைகளையும் வெளிப்படுத்துகின்றது.
இந்தியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தங் கள் இதுவரையில் வெளிப்படுத்தப் படாத நிலையில் அவற்றுக்கான பாராளுமன்ற அனு மதி பெறப்படவில்லை. ஆகவே அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மிகக் கடுமையான சிக்கல்கள் உள்ளன.
அடுத்து, முன்னிலை சோஷலிசக் கட்சி, விமல்வீரவன்ச, உதயகம்மன்பில, சரத்வீரசேகர, திலித் ஜயவீர போன்ற சிங்கள தேசியவாத சக்திகள் சிங்கள தேசியவாதத்தையும் நாட்டின் இறைமையையும் மையப்படுத்திய பிரசாரங்களை ஆரம்பித்து விட்டன.
உதாரணமாக கூறுவதாக இருந்தால் திருகோணமலையை மையப்படுத்திய இந்திய பொருளாதார வலயத்துக்கான காணிகளை ஒதுக்குவதற்காக முத்துநகர் கப்பற்துறை உள்ளிட்ட காணிகளை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை துறைமுக அதிகாரசபை விடுத்துள்ள நிலையில் தீவிரமான எதிர்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
ஏற்கனவே, மன்னார், பூநகரியில் 484 மெகாவாற் காற்றாலை மின்னுற்பத்திக்கு சுற்றுச் சூழலில் கரிசனை கொண்ட அமைப்புக்கள் மற்றும் உள்ளுர் மக்களிடத்தில் காணப்பட்ட எதிர்ப்பினை இலாவகமாக பயன்படுத்தி அநுர அரசாங்கம் அந்த திட்டத்திலிருந்து அதானி குழுமத்தை வெளியேறுவதற்கு வழிவகுத்திருந்தது.
அவ்வாறு தான், பொருளாதார வல யத்தை ஸ்தாபிப்பதை இழுத்தடிப்பதற்கு தற் போதைய எதிர்ப்புக்களை அநுர அரசாங்கம் நிச்சயமாக பயன்படுத்தும். ஏனென்றால் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, ரொஷான் அக்மீம போன்றவர்கள் கப்பற்துறை, முத்துநகர் மக்களின் காணி உரித்தை மையப்படுத்தி எதிர்ப்பு அரசியல் செய்தே ஆட்சிக்கு வந்திருக் கின்றார்கள்.
ஆகவே, ‘இந்திய பொருளாதார வலயம்’ முன்னெடுப்பதற்கு இடமளிப்பார்களா என்பது பெருங்கேள்விக்குரிய விடயமாகும். இந்தியா கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்தால் மட்டுமே ‘கடந்த ஆட்சியில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம்’ என்று கூறி ஒதுங்கி நிற்பதற்கு வாய்ப்புக் கள் உள்ளன.
இதேநேரம், அண்மையில் இந்தியாவின் சுரங்கத்துறை அமைச்சின் ஏற்பாட்டில், இந்திய முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் குழுவொன்று, இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருந்தது.
அக்குழுவினரின் பயணம் இலங்கையில் உள்ள கனிம வளங்களை இலக்கு வைத்திருந்தது. அதனடிப்படையில், புல்மோட்டையில், 7.5மில்லி யன் மெற்றிக் தொன் இல்மனைட், ரூட்டைல், சிர்கான் போன்ற கனிமங்கள் இருக் கின்றன.
புத்தளத்தில், 45,000 மெற்றிக் தொன் கிராபைட் மற்றும் 60 மில்லியன் மெற்றிக் தொன் அபாடைட் கனிமங்கள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது. ஏற்கனவே மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான முயற்சிகள் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘அவுஸ்ரேலியன் சாண்ட் மைன்ஸ்’ என்ற நிறுவத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த நிறுவனம் கனிய மணல் அகழ்வுக்கு இன்றளவும் கூட வெவ்வேறு நுட்பங்களை பயன்படுத்தி முயற்சித்துக்கொண்டிருக்கின்றது . மக்கள் அதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதேநேரம், புல்மோட்டைக்கு வடக்காக, முல்லைத்தீவுக்கு தெற்காக தெற்காக உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, முகத்துவாரம், செம்மலை ஆகியபிரதேசங்களில் மணல் அகழ் விற்கான ஆரம்பகட்ட பணிகளை 2006ஆம் ஆண்டு முதல் கனிய வள கூட்டுத்தாபனம் முன்னெடுத் திருந்தது.
இந்த முயற்சிகள் மக்கள் போராட்டங்களால் தடுக்கப்பட்ட நிலையில் தான் இந்தப் பகுதிகளை தற்போது இந்தியா குறிவைத்து நகருகின்றது. இந்த நகர்வின் அங்கமாகத் தான் கடந்தவாரம் வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங் கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தார்.
அங்கு சென்ற அவர், சந்திரன் நகர் மாதிரி வீட்டுத்திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தமையும், கடற்றொழிலாளர்களுக்கான உறைகுளிரூட்டிகளை வழங்கியமையும் இங்கே மீள நினைவுகூருகின்றபோது ‘மக்களுடன் மக்கள்’ இராஜதந்திரத்தின் ஊடாக கனிய வளத்தைப் பெறுவதற்க இந்தியா முயற்சிப்பதை உணர முடிகின்றது.
மேலும் அண்மைக்கால இந்தியாவின் இராஜதந்திரச் செயற்பாடுகள், இலங்கையில் எந்த அரசாங்கம் இருந்தாலும் அந்த அரசாங்கம் முழுமை யாக சீனா பக்கம் சார்ந்துவிடாது கூட்டாண்மையை தொடர்வதும், இலங்கையின் வளங்கள் மற்றும் வருமானங்கள் உள்ளிட்ட தங்களின் நலன்களில் உறுதியாக இருப்பதும் மிகத் தெளிவாகின்றது.
அதுமட்டுமன்றி மேற்படி விடயங்களை முன்னகர்த்துவதாக இருந்தால் தேசிய இனப் பிரச்சினை, இந்திய-இலங்கை ஒப்பந்தம், 13ஆம் திருத்தம் போன்ற ‘இலங்கை அரசுகளுக்கு ஒவ்வாத விடயங்களை’ கைவிடவும் புதுடில்லி தயங்கவில்லை.
அதனை பிரதமர் மோடியின் இலங்கைக்கான இறுதி விஜயத்தின் போது பார்த்துவிட்டோ மல்லவா…..! சீனா, ஐரோப்பாவின் நகர்வுகளை அடுத்தவாரம் பார்க்கலாம்
தொடரும்…..