பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-01) – விதுரன் 

பூகோள அரசியலில் தாக்கம் செலுத்தவல்ல அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கு தரப்புக்களின் போட்டா போட்டி இலங்கைத் தீவில் மீண்டும் தீவிர மடைந்திரு க்கிறது.தாமும் ‘அணிசேராக்கொள்கையையே’ பின்பற்றப்போவதாக அறிவித்திருக்கும் அநுர அரசாங்கம் எந்தப்பக்கம் செல்வதென்று தெரி யாமல் தடம்புரள ஆரம்பித்திருக்கின்றது.
இந்நிலையில், அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பியத் தரப்புக்கள் தங்களுடைய ‘பிடி’யை தக்கவைத்துக்கொள்வதற்கான நகர்வு களை தீவிரப்படுத்தியுள்ளன.பொதுப்படையாக மேற்படி நாடுகள் பல்வேறு இராஜதந்திர உத்திகளை கையாண்டு வருகின்றமையானது வழக்கம். இது காலவரை யிலும், தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை விடயமும், பொறுப்புக் கூறலும் அந்நாடுகள் பயன்படுத்துகின்ற இராஜதந்திர ஆயுதங்க ளில் முக்கிய இடத்திலிருந்தன.
ஆனால் அண்மைய காலத்தில் அவ் வாறான போக்குகள் எல்லாம் மாற்றமடைய ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்கா, இந்தியா, மற்றும் ஐரோப்பா ஆகிய தரப்புக்கள் அநுர அரசாங்கத்தினை தமது கட்டுக்குள் வைத் திருப்பதற்காக கையாளுகின்ற முறைமைகள் வழக்குத்துக்கு மாறாக ‘தன்னலம்’ நிறைந்ததாகவே உள்ளது.
முதலில் அமெரிக்காவை எடுத்துக்கொண் டால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களை நிறுத்தியுள்ளார்.
இதனால், அமெரிக்கா ஊடகம், ஜனநாயகம், சமூகத்துடனான ஊடாட்டம் உள்ளிட்ட பல தலைப்புக்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அமெரிக்காவின் ‘பிடி’ சற்றே தளர்ந்துபோயுள்ளது.
அத்தோடு மட்டுமன்றி, 44சதவீதமான தீர்வை வரி இலங்கைக்கு விதிக்கப்பட்டு விடுக் கப்பட்ட அடுத்த அறிவிப்பும் பேரிடியாய் போனது. இந்த நிலைமையானது, அமெரிக்காவினால் இலங்கையினுள் காய்களை நகர்த்த முடியாத சூழலை உருவாக்கியது.
ஆட்சியில் உள்ள அரசாங்கமும் அமெரிக் காவை ‘ஏகாதிபத்தியவாதிகள்’ என்று விழித்து எதிர்த்த காலங்களும் உள்ள நிலையில் அவர்களும் அமெரிக்காவை சற்றே ஒதுக்கி வைப்பதற்கு சூழ் நிலைகள் கைகோர்த்திருக்கின்றன.
ஆனால் அமெரிக்கா அமைதியாக இருக்க வில்லை. ஏனென்றால் தனது பிடி சற்றேனும் தளர்ந்தால் தனது பூகோளப் போட்டியாளரான சீனாவின் பிரவேசம் அதியுச்ச வேகத்தில் இலங்கையில் நடைபெறும் என்பதை அறியாமலு மில்லை.  அத்தகைய சூழலில் தான் அமெரிக்கா தேசிய பாதுகாப்பு விடயத்தினை தனது கையில் எடுத்திருக்கின்றது. அதாவது, அமெரிக்காவின் ஆசீர்வாத்துடன் தான் இலங்கைக் கடற்படையில் மரைன் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது.
அந்தப் படைப்பிரிவுக்கான பயிற்சிகள் மற்றும் ஆயுத தளபாடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், அமெரிக்காவே வழங்கியது, வழங் கிக் கொண்டும் இருக்கின்றது. மரைன் படைப்பிரிவைப் பயிற்றுவிப்பதற் காக அமெரிக்க கடற்படையின் மரைன் படைப் பிரிவுகள், போர்க்கப்பல்கள் கொழும்பு, மன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் வந்து செல்கின்றன. கூட்டுப் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதுவொன்றும் புதிய விடயமல்ல. இலங்கை கடற்படையை, 2004ஆம் ஆண்டில் இருந்தே அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது. சமுத்ரா, விஜயபாகு, கஜபாகு உள்ளிட்ட பெயர்க ளில் இதுவரை மூன்று போர்க்கப்பல்களை வழங்கியுள்ளதோடு மற்றொரு போர்க்கப்பல் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என்று கடற்படைத் தகவல்கள் கூறுகின்றன.
அதுமட்டுமன்றி, இலங்கையை அண்மித்துள்ள ஆழ்கடல் கண்காணிப்பை வலுப்படுத்து வதற்காக பீச் கிராப்ட் விமானத்தையும் வழங்கியுள் ளது. இதனைவிடவும் இந்த ஆண்டின் முற்பகுதி யில் அமெரிக்காவின், தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாக பணியகம், ஐந்து இலட்சம் டொலர்கள் பெறுமதியான இரண்டு கதிரியக்க கருவிகளை வழங்கியுள்ளது.
அவ்வாறு வழங்கப்பட்டுள்ள கருவிகளில் ஒன்றான கதிர்வீச்சைக் கண்டறியும் கருவி கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவி ஆபத்தான கதிரியக்க பொருட் கள், கொழும்பு துறைமுகத்துக்கு நுழைவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். இரண்டாவது கருவி ஆபத்தான இரசா யன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறியும் அதிநவீன கருவி யாகும்.
இக்கருவியானது இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்கள், ஆயுதங்கள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகி றது. இந்த இரண்டு கருவிகளும் உண்மையில் இலங்கைக்கு அவசியமானவை அல்ல. ஆனால், இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தானத்தில் இலங்கை இருப்பதால் இக்கருவி இலங்கைக்கு அவசியமானது என்று அமெரிக்கா கருதுகின்றது.
ஏனென்றால், அமெரிக்காவைப் பொறுத்தவரை யில் இலங்கையை மையப்படுத்திய இந்தோ-பசுபிக் கடற்பரப்பில் சீனா, ரஷ்ய கப்பல்கள் உட்பட தமக்கு வேண்டாத தரப்பினரின் பிரசன்னம் இருப்பதை விரும்பவில்லை.
குறிப்பாக, சீனா, ரஷ்யா உட்பட எதிர் காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள் கூட அணுசக்தி, மின்னனு கதிரியக்கப் பொருட்களுடன் இந்தோ-பசுபிக் சமுத்திர பரப்பில் நடமாடுவதை அமெரிக்கா எள்ளளவும் விரும்பவில்லை. ஆனால், அதனை பகிரங்கமாக எதிர்த்து நிற்க முடியாத நிலைமையே உள்ளது. ஆகவே தான், இலங்கை போன்ற தீவு நாடுகளில் இத்தகையை கருவிளைப் பொருத்துவதன் ஊடாக சமுத்திர கடற்போக்குவரத்தினை கண்காணிப்பதற்கு முயல்கின்றது.
அந்தவகையில், தான் மேற்படி கருவிகள் பொருத்துவதற்கு இலங்கையை அமெரிக்கா பயன்
படுத்தியிருக்கிறது. இலங்கையை மையப்படுத்திய கடற்பரப்புக்குள் இரசாயன, கதிரியக்க பொருட்களுடன் பிரவேசிக்கும் கடற்கலங்களை அடையாளப்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு இந்தக் கருவிகள் பெரும் உதவியாக இருக்கப் போகின்றன.
குறித்த கருவிகள் இலங்கையில் பொருத்தப் பட்டு இருந்தாலும், அவற்றின் சமிக்ஞைகள் இலங்கை கடற்படைக்கு சென்றாலும் ஏக நேரத்தில் அதே சமிக்ஞைகளை அமெரிக்காவும் பெற்றுக்கொள்ளும். அது வெளிவராத யதார்த்தம்.  அந்த வகையில் அமெரிக்கா தான் குறித்த கருவிக ளின் பயன்பாட்டு பயனை அடைகின்ற தரப்பாக இருக்கப்போகின்றது.
இதுமட்டுமன்றி, திருகோணமலையில் அமெரிக்காவுடன் நெருக்கமான கூட்டாண் மையைக் கொண்டிருக்கின்ற ஜப்பான் ‘நீர்கீழ் ராடர்’ ஒன்றை கடந்த ஆண்டு அன்பளிப்பாக வழங்கியிருக்கின்றது.
திருகோணமலை துறைமுகத்தில் ராடரைப் பொருத்துவதால் யப்பான் அடையப்போ கும் நன்மைகள் எதுவுமில்லை. ஆனால் அமெரிக்காவுக்கு தான் வரலாற்றுக்காலம் முதல் திருகோணமலை மீதான ‘கழுகுப்பார்வை’ காணப் படுகிறது. ஆகவே அந்த ராடரின் திரைமறைவில் இருக்கும் சக்தி எதுவென்பதை இலகுவதாக அடை யாளம் காண முடிகிறது.
அமெரிக்கா, ஜெனரல் சவேந்திரசில்வா உள்ளிட்டவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து பயணத்தடைகளை விதித்துள்ளது. பொறுப்புக்கூறல்பற்றியும் பேசியது.ஆனால் மறுபக்கத்தில் இலங்கை கடற்படையுடன் அதிகளவில் ஊடாடி, கடந்த ஆண்டு பெப்ரவரியில் அமெரிக்காவின் எரிசக்தி திணைக்களத்தின் அங்கமான, தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாக பணியகத்துக்கும், இலங்கை கடற்படைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன் பாடு கையெழுத்திடுவதற்கு இணக்கத்தைப் பெற்று அதனை செயற்படுத்தியும் இருந்தது.
இந்தப்புரிந்துணர்வு பற்றி யாரும் பெரிதாக கவனம் செலுத்தியிருக்கவில்லை. ஆனால் அந்த புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழாகவே தற்போது குறித்த கருவிகள் பொறுத்தப்பட்டிருக்கின்றன.ஆகவே, அமெரிக்காவைப் பொறுத்தவரை யில், தன்னுடைய தொடர்பாடல், போக்குவரத்து, உட்பட தேசிய பாதுகாப்பில் அதீதமான கரி சனைகளைக் கொண்டிருக்கின்றது. அதற்காகவே வருமுன்காப்போம் என்ற மூலோபாயத்தினைப் பயன்படுத்தி காய்களை நகர்த்தியுள்ளது.
அந்தவகையில் தற்போது இலங்கையை மையப்படுத்திய இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா கோலோச்சிவிட்டது. தன்னுடைய இலக்கை அடைந்துவிட்டது. அந்த வகையில் இனி, அமெரிக்கா இலங்கையின் ‘பாதுகாப்பான பாதுகாப்பு நண்பன்’.
அமெரிக்காவின் நகர்வுகள் இப்படி யிருக்கையில், இந்தியா, சீனா, ஐரோப்பாவின் நகர்வுகளை அடுத்தவாரம் பார்க்கலாம்.
தொடரும்…..