‘புலிகள் காலத்தில் மலையக மக்கள் சமத்துவமாக நடத்தப்பட்டனர்’ – மனோ கணேசன்

193 Views

“புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வன்னியிலே வாழ்ந்த மலையக வம்சாவளி தமிழ் மக்கள் சமத்துவமாக தமிழினத்துக்குள்ளே உள்வாங்கப்பட்டார்கள். பாரபட்சம் இருக்கவில்லை” என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று புலிகளின் பெயரை சொல்லி வாக்கு வாங்கி அரசியல் செய்யும் சில அரசியலர்கள் கூட வடக்கில் வாழும் மலையக வம்சாவளி தமிழர்களின் அரசியல், கல்வி, காணி, சமூக உரிமைகளை மறுப்பதை நானறிவேன். இவர்களுடன் சேர்ந்து சில தமிழ் அதிகாரிகளும் வடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்களை புறந்தள்ளுவதும் எனக்கு தெரியும்.

இவர்களை திருத்த விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டுமா? இந்த இலட்சணத்தில் தமிழின ஒற்றுமை எங்கே அய்யா உருவாகப்போகிறது?

தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். அதற்கு தமிழினத்துக்குள் இருக்கின்ற உள்ளக சமத்துவத்தை மறுக்கும் ஜாதிய, பிரதேச, மத வேறுபாட்டு காரணிகளை அடையாளம் கண்டு தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உள்ளக சமத்துவம் வராது. உள்ளக சமத்துவம் இல்லாவிட்டால் தமிழின ஐக்கியம் வராது.

அதுமட்டுமல்ல, நமக்குள் ஓரிரு பிரிவினரை ஒதுக்கி வைத்துக்கொண்டால், பேரினவாதிகள் எம்மை ஒடுக்குகிறார்கள் என ஓலமிடும் தார்மீக உரிமையும் எமக்கு இல்லை.

வெறுமனே நாம் எல்லோரும் தமிழர்தான் என சினிமா “வசனம்” பேசிக்கொண்டு இருந்தால் காரியம் நடக்காது. எனது இந்த நோக்கத்தை புரிந்துக் கொள்ளுங்கள். நான் அன்றும் இதைதான் சொன்னேன். இன்றைய அரசியல் பரப்பில் இருக்கும்வரையும் இதைதான் சொல்வேன். நாளையும் சொல்வேன். நான் சொல்வதை இன்று புரிந்துக்கொள்ள முடியாவிட்டால், நாளை நான் இங்கிருந்து போனபின் புரிந்துக்கொள்வீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply