புலம்பெயர் ஈழத்தமிழர்களின் புலம்பல்களை “தமிழ் ஈழக் காற்றே“ என்ற பாடலாக வெளியிட்டுள்ள கவிஞர் வைரமுத்து


புலம்பெயர் மக்களின் புலம்பலாக தமிழ் ஈழக் காற்றே என்ற பாடலை கவிபேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். அத்துடன் இந்த பாடலை ஒளிநாடாவாக தயாரித்தும்  வெளியிட்டுள்ளார். இப்பாடலுக்கு இசையரசன் இசையமைத்துள்ளார். பாடலில் ஈழத்தில் தமிழ் இனத்திற்கு நடந்த அநீதி குறித்து நெஞ்சை நெருடும் சொற்களால் சுட்டிக் காட்டியுள்ளார்.  வெளியிடப்படும் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.

ஈழத்தின் வன்னிக் காடுகளையும், வல்வெட்டித்துறையையும், முல்லைத்தீவையும் நந்திக் கடலையும், நல்லூர் முருகனையும் குறிப்பிட்டு  பாடல் வரிகள் அமைந்துள்ளன.  இப் பாடல் ஒளிநாடா, வெளிநாட்டு வாழ் ஈழத் தமிழர்களின் வலியை அப்படியே வெளிப்படுத்துவது போல் உள்ளது.

பாடல் வரிகளாக

தமிழ் ஈழக் காற்றே! தமிழ் ஈழக் காற்றே!

விண்ணின் வழிவந்து வீசு

எங்கள் மண்ணின் சுகம்கண்டு பேசு

உயிரைக் கொடுத்த அன்னை கயிறாய்க் கிடப்பாளோ?

எலும்பைக் கொடுத்த தந்தை நரம்பாய்க் கிடப்பாரோ?

நல்லூர் முருகன் கோயில் மணியில் நல்லசேதி வருமோ?

உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள் உயிரும் உடலும் நலமோ?

ஓடிய வீதிகள் சுகமா – எங்கள் ஒருதலைக் காதலி சுகமா? பாடிய பள்ளிகள் சுகமா? – உடன் படித்த அணில்கள் சுகமா?

ஒருமுறை வந்து சொல்லிப்போ – எங்கள் உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ

முல்லைத்தீவின் கதறல் மூச்சில் வலிக்கிறதே!

நந்திக் கடலின் ஓலம் நரம்பை அறுக்கிறதே!

பிள்ளைக் கறிகள் சமைத்து முடித்த தீயும் மிச்சம் உள்ளதோ?

எங்கள் ஊரை எரித்து மீந்த சாம்பல் சாட்சி உள்ளதோ?

வன்னிக் காடுகள் சுகமா?

எங்கள் வல்வெட்டித்துறையும் சுகமா?

காய்ந்த கண்ணீர் சுகமா?

இன்னும் காயாத குருதியும் சுகமா?

ஒருமுறை வந்து சொல்லிப்போ

எங்கள் உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ

இவ்வாறு பாடல் வரிகள் அமைந்துள்ளது.