புலனாய்வுப் பிரிவு அதிகாரி மரணத்தில் சந்தேகம் ; சடலம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைப்பு

கல்முனையில் உள்ள அரச புலனாய்வுப் பிரிவின்( State Intelligence Service )(SIS) அலுவலகத்தில் நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உறுப்பினரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த 21 வயதுடைய கமல்ராஜ் என்பவர், கல்முனை உள்ள அரச புலனாய்வுச் சேவையின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்தார் என முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், இவரது மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உயிரிழந்த அரச புலனாய்வுச் சேவை அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.