புத்தரின் போதனைகளை சிங்களவர்கள் பின்பற்றுவதில்லை – சம்பந்தன்

புத்த பெருமான் ஆதிக்கக் கொள்கையைப் போதிக்க அல்லது பிரயோக்கிவில்லை என்பது அவரின் பெயரால் தற்போது அதனைப் பின்பற்ற முனையும் சம்பந்தப்பட்ட அனைவரினாலும் நினைவில் கொள்ளப்படவேண்டும்.

அவரை பின்பற்றுவதாகக் கூறிக்கொள்பவர்களினால் அவரது போதனைகள் பின்பற்றப்பட்டால், இலங்கை அமைதியும் சமாதானமும் நிறைந்த ஒரு சொர்க்க பூமியாக திகழும் என கிழக்கு மகாணத்தில் தொல்பொருள் மரபுரிமையின் முகாமைத்துவத்திற்காக சிறீலங்கா அரச தலைவரினால் உருவக்கப்பட்ட செயலணி தொடர்பில் சிறீலங்கா அரச தலைவருக்கு எழுதிய கடித்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான திரு ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கடிதத்தில் பின்வரும் 5 கருத்துக்களையும் முன்வைத்துள்ளார்.

  1. இலங்கை ஒரு பல்லின, பன்மொழி, பல்மத, பல்கலாசார பன்மைத்துவ சமூகமாகும்.
  2. இலங்கை ஒன்பது (9) மாகாணங்களைக் கொண்டது; கிழக்கு மாகாணம் அவற்றுள் ஒன்றாகும்.
  3. கிழக்கு மாகாணம் எப்போதும் தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தபோதும் அது ஒரு பல் இன மாகாணமாகவே இருந்துவருகிறது.
  4. இச்செயலணி அதன் உறுப்பினர் ஆக்க அமமைவில்; முழுக்க சிங்கள மயமானதாக உள்ளது. அதன் உறுப்பினர் உள்ளடக்க விதமானது அது ஒரு சமூகத்தினதும் – சிங்கள சமூகம் – ஒரு மதத்தினதும் – பௌத்தம் – நலன்களுக்கு மாத்திரம் சேவையாற்றுவதற்கெனவே ஏற்படுத்தப்பட்டதென்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் நாட்டின் பெரும்பான்மையினர் என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
  5. ஏனைய மாகாணங்கள் இதில் சேர்க்கப்படாது விடுபட்டதேன், ஏனைய சமூகங்களும் ஏனைய மதங்களும் இதில் உள்ளடக்கப்படாது விடுபட்டதேன் என்ற கேள்வியை எழுப்புவது பொருத்தமானதாகவிருக்கும். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மட்டுமின்றி முழு நாட்டிலும் தமிழ் மக்கள் கொண்டுள்ள ஆழமான வேர் காரணமாக, ஓர் இலங்கையர் என்ற வகையிலும் ஒரு பக்திமிக்க இந்து என்ற வகையிலும் எனது கவலைகள் தூண்டப்படுகின்றன.