புதிய அரசியல் யாப்பு மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருமா? – துரைசாமி நடராஜா

புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் முயற்சி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. சமகால அரசியல் யாப்பின் அதிருப்திகள் இதற்கு வலுசேர்த்து வருகின்றன. இந்நிலையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமிடத்து மலையக மக்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் பலவற்றுக்கும் அந்த யாப்பு தீர்வாக அமைய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தி இருக்கின்றார்.

ஒரு நாட்டின் அரசியல் யாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக விளங்கு கின்றது. ஆட்சிபற்றிய விதிகளை வரையறுத்துக் கூறும் அரசியல் யாப்பானது ஓர் அரசாங்கத்தின் அமைப்பு அதனுடைய அதிகாரம், கடமை, மக்களின் அடிப்படை உரிமைகள், அரசியல் யாப்பினை மாற்றும் அல்லது திருத்தும் வழிமுறைகள், ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்புகள், சமஷ்டி ஆட்சி முறை

யாயின் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பங்கீடு போன்ற பலவற்றையும் வலியுறுத்துவதாக அமைந்திருக் கும். இந்நிலையில் ‘அரசாங்கத்தின் அமைப் பையும், அதன் உறுப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வையும் அமுல் படுத்த தேவையான பொதுக் கொள்கைகளையும் நிர்ணயிக்கக்கூடிய எழுதப்பட்ட, எழுதப்படாத சட்டங்களின் தொகுப்பே அரசியல் யாப்பாகும்’ என்று அறிஞர் கில்கிறைஸ்ட் குறிப்பிடுகின்றார். இதேவேளை ‘அரசாங்கத்தின் அமைப்பையும், தொழிற்பாடுகளையும் கடமைகளையும் பற்றி கூறும் விதிகளின் தொகுப்பே அரசியல் யாப்பா கும்’ என்பது அறிஞர் ஹென்றி மெயினின் கருத் தாகவுள்ளது.

இன்று பெரும்பாலான நாடுகளில் ஜன நாயக ஆட்சிமுறை நிலவுகின்றது. இந்த ஜனநாயக ஆட்சி முறையினை வலுப்படுத்துவதற்கும், நிலைப்பேற்றிற்கும் உறுதியான அரசியல் யாப்பு உந்துசக்தியாக அமைகின்றது. அரசியல் யாப்பானது ஆட்சியாளர்களின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு முறையான பாதையில் அவர்களை பயணிக்க வைக்கின்றது. இந் நிலையில் சர்வாதிகாரப் போக்கினை தடை செய்யவும், அதனூடாக ஜனநாயகம் சிறப்பாக பேணப்படுவதற்கும் யாப்பு உச்சகட்ட பங்களிப்பினை வழங்குகின்றது. நாடுகளின் தலையெழுத்தினை அரசியல் யாப்பே தீர்மானிக் கின்றது.

அழிவுக்கு அடித்தளம்

இந்த வகையில் இலங்கையின் கடந்தகால மற்றும் சமகால அரசியல் யாப்புகள் குறித்து நோக்குகின்றபோது, இந்த அரசியல் யாப்புகள் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுத்தனவா? நாட்டின் அபிவிருத்திக்கு உரியவாறு தோள் கொடுத்துள்ளனவா? ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு உந்துசக்தியாக இருந்துள் ளனவா? என்றெல்லாம் பன்முகப் பார்வையை செலுத்துமிடத்து விடை திருப்திகரமானதாக இல்லை. மாறாக நாட்டின் ஐக்கியத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகத்தை ஏற்படுத்தி நாட்டை அழிவும் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு கடந்தகால மற்றும் சமகால அரசியல் யாப்புகள் வலு சேர்த்துள்ளதாக விமர்சனங்கள் பலவும் இருந்து வருகின்றன.

பல்லின மக்கள் இலங்கையில் வாழுகி ன்ற நிலையில் சகல இன மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஆற்றல் மிக்கதாக அரசியல் யாப்பு காணப்படுதல் வேண்டும். எனினும் இதன் சாதக விளைவுகள் இலங்கையின் அரசியல் யாப்பில் குறைவாகவே காணப்பட்டன. அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அனைத்து இன,மத குழுமங்களையும் உள்ளடக்கி பொதுவான அரசியல் யாப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எந்தவொரு இனத்திற்கும்,மதத்திற்கும் அந்நாடுகளின் அரசியல் யாப்புகள் வரையறுக்கப் படவில்லை.  ‘இந்தியா ஒரு இறைமையுள்ள, சமதர்ம, மதச்சார்பற்ற சனநாயகக் குடியரசாகும். இது நாட்டின் சகல பிரசைகளின் நீதியையும், சுதந்திரத்தையும், சமத்துவம் மற்றும் தோழமையையும் பாதுகாக்கும்’ என்று இந்திய அரசியல் யாப்பு வலியுறுத்துகின்றது. இந்த இலட்சியபூர்வ சிந்தனைகள் அடிப்படை கட்டமைப்பை பிரதிபலிப்பதுடன், இவை திருத்தத்திற்கு உட்பட முடியாத அல்லது மாற்ற முடியாத ஒன்றாகவும் காணப்படுகின்றன. சமஷ்டிக் கோட்பாடும் இத்தகைய இலட் சிய பூர்வமான சிந்தனைகளின் ஒரு வெளிப் பாடாகவே உள்ளது.

இலங்கையின் கடந்தகால மற்றும் சமகால அரசியல் யாப்புகளின் அதிருப்தியான வெளிப்பாடுகளை கருத்தில் கொண்டு ஏற்கனவே பல தடவைகள் புதிய அரசியல் யாப்பினை முன்வைக்கும் நடவடிக்கைகள் ஆட்சியாளர்களால் முடுக்கிவிடப்பட்டன. எனினும் அரசியல் இழுபறி நிலைமைகள் மற்றும் இனவாதிகளின் கொக்கரிப்புக்கள் என்பவற்றுக்கு மத்தியில் இவையனைத்தும் சாத்தியப்படாமல் போனது.   இதனிடையே சமகால தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி கோலோச்சும் நிலையில் அரசியல் யாப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்களில் மாற்றங்களைக் கொண்டு வர உத்தேசித்துள்ளது.

புதிய அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தம் இரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருந்தார். இதனி டையே விரைவில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை 13 ஆவது திருத்தச் சட்டமும், மாகாண சபை முறைமையும் தொடருமெனவும், அதற்கமைய எதிர்வரும் 2025 ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி புதிய அரசியல் யாப்பிலேயே தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை உள்வாங்க முடியும். புதிய அரசியல் யாப்பானது பிரிவினைக்கானதாகவன்றி, இலங்கை எனும் ஒருமித்த நாட்டை இலக்காகக் கொண்டதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மலையக சமூக அபிவிருத்தி 

அரசாங்கம் புதிய அரசியல் யாப்பினை முன்வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் மலையக மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பலவற்றுக்கும் புதிய யாப்பினூடாக உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை பாராளு மன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளமை நோக்கத்தக்கதாகும். மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதும் அம்மக்களின் அடிப்படை பிரச்சினைகள் கூட இதுவரை தீர்த்து வைக்கப்படாத ஒரு நிலையே காணப்படுகின்றது. அரசியல், பொருளாதாரம், தொழில்வாய்ப்பு, சுகாதாரம்,மருத்துவம் என்று இன்னோரன்ன துறைகளிலும் இம்மக்களை அபிவிருத்தி காணச் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் புதிய அரசியல் யாப்பு இவ்விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமேயாகும்.

இதேவேளை கடந்த காலத்தில் புதிய அரசியல் யாப்பினை முன்வைக்கும் நோக்கில் பொதுமக்கள் கருத்தறியும் குழு ஏற்படுத்தப்பட்டு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பொதுமக்களின் இன்னோரன்ன கருத்துக்கள் பலவும் உள்வாங்கப்பட்டன. இதன்போது புதிய அரசியல் யாப்பில் மலையக சமூக அபிவிருத்தி தொடர்பில் உள்ள உள்ளீர்க்க வேண்டிய பல் வேறு விடயங்களை மலையக நலன் சார்ந்த அமைப்புக்களும், தனிநபர்களும் கருத்தறியும் குழுவிடம் முன்வைத்திருந்தனர். இவை குறித்து நாம் நோக்குதல் பொருத்தமாகும். குறிப்பாக சமுதாய சபை என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டு மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். சமுதாய சபை என்பது ஒரு வெளிநாட்டுத் தழுவலாகும். பெல்ஜியம், சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளில் சமுதாய சபை நடைமுறையில் உள்ளது. இதனை ஒத்த வேறு பல சபைகளும் காணப்படுகின்றன. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடமும் சமுதாய சபை தொடர்பான முன்வைப்புக்கள் ஏற்கனவே இடம் பெற்றிருந்தன. சமுதாய சபை ஏற்படுத்தப்பட்டு பிரதிநிதிகளின் ஊடாக நடவடிக்கைகளின் கையாளுகை இடம்பெறுதல் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையின் 9 மாகாணங்களில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு இரண்டு மாகாணங்கள் உள்ளன. சிங்கள மக்களுக்கு பல மாகாணங்கள் உள்ளன. ஆனால் மலையக மக்களுக்கென்று தனியாக எந்தவொரு மாகாணமும் கிடையாது. எனவே நிர்வாக ரீதியான பிரிவுகளை எதிர்காலத்தில் மலையக மக்களுக்கும் ஏற்படுத்த புதிய யாப்பு இடமளிக்க வேண்டும். இதுபோன்றே இலங்கையில் வாழும் சுமார் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மக்களுக்கு இலங்கையின் மாவட்டங்களில் ஒரு மாவட்டமும் கிடையாது. எனவ மலையக மக்களுக்கென்று ஒரு நிர்வாக மாவட்டமாவது இருக்க வேண்டும். அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு என்பது முக்கிய விடயமாக இருக்கும். இலங்கையில் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்கள் என்று மூன்று விதமான ஆட்சி முறைகள் காணப்படுகின்றன.

மாகாண சபைகளில் மலையக மக்களுக்கென்று எந்தவிதமான அதிகாரமும் இல்லை. இலங்கை என்பது பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுப்புக்களை மேற்கொண்டார்கள் இது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதேவேளை கீழ்மட்டக் குடியரசு என்று சொல்லப்படுகின்ற உள்ளூராட்சி விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். கிராம இராச்சியங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலமான சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும். மலையக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் புதிய பிரதேச சபைகள் ஏற் படுத்தப்பட வேண்டும்.

செனட் சபை பாதுகாப்பு

இலங்கையின் பல்லின சமூக அமைப்பில் மலையக மக்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள். எனவே அவர்களுக்கென்று அதிகாரப் பகிர்வு அலகு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். புதிய யாப்பின் ஊடாக அது ஏற்றுக் கொள்ளப்படுதலும் வேண்டும். மலையக மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா போன்ற பகுதிகளில் இம்மக்களுக்கான பிராந்தியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதனடிப்படையில் அதிகாரப்பகிர்வு இடம்பெறுதல் வேண்டும். செறிந்து வாழுகின்ற மக்களுக்கு மட்டுமல்லாது ஆங்காங்கே பரந்து வாழுகின்ற மக்களுக்கும் அதிகாரப் பகிர்வு அலகுகள் உலக நாடுகளில் வழங்கப்பட்டுள்ளன. நிலத் தொடர்புடைய அதிகாரப் பகிர்வு, நிலத் தொடர்பற்ற அதிகாரப் பகிர்வு என்று வெவ்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. இவ்விடயமும் கருத்தில் கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

இந்நாட்டில் ஜனாதிபதி முறைமை இல்லா தொழிக்கப்பட்டாலும் மூன்று சிறுபான்மை இனங்களையும் சார்ந்தவாறு பிரதி ஜனாதிபதிகள் மூவருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி ஜனாதிபதிகள் இருப்பது ஒரு சிறப் பம்சமாகும். மேலும் மக்கள் பிரதிநிதிகள் சபை, செனட் சபை என்பன ஏற்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும். செனட் சபையில் மலையக பிரதிநிதிகளுக்கும் இடமளிக்க முடியும். மக்கள் பிரதிநிதிகள் சபையைக் காட்டிலும் செனட் சபையானது சிறுபான்மை மக்களுக்கு மிகுந்த பாதுகாப்பினை அளிப்பதாக இருக்கும் என்று திடமாக நம்ப முடியும்.

மலையக மக்களின் பௌதீக மற் றும் பொருளாதார அபிவிருத்தி குறித்து அரசியல் யாப்பு உறுதிப்படுத்த வேண்டும். தொழில் வாய்ப்புகளில் மலையக மக்களின் விகிதாசாரத் துக்கேற்ப சலுகைகள் வழங்கப்பட‌ வேண்டும். கல்வி, சுகாதார மேம்பாடு கருதிய விசேட முன்வைப்புக்களும் மலையக மக்களை பொறுத் தவரையில் மிகவும் அவசியமாகும். புதிய அரசியல் யாப்பினூடாக மலையக மக்களை ஒரு தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு சாதக விளைவுகள் ஏற்படும். மலையக மக்கள் சகல துறைகளிலும் குறிப்பிட்ட அபிவிருத்தி இலக்கினை இன்னும் எட்டாதுள்ளனர். அதாவது குறை அபிவிருத்தி நிலை இவர்களிடம் காணப்படுகின்றது. எனவே இம்மக்களின் நலன் கருதி விசேட ஏற்பாடுகள் உள்ளீர்க்கப்பட வேண்டும். இம்மக்கள் அபிவி ருத்தி இலக்குகளை எட்டும் வரை சலுகைக் காலத்தின் அடிப்படையில் விசேட உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தினரின் நலன்கருதி விசேட ஏற்பாடுகள் பலவுள்ளன. பல்கலைக்கழக அனுமதி, தொழில் வாய்ப்பு, கல்வி மேம்பாடு என்று பின்தங்கியவர்களுக்கு  பல ஒதுக்கீடுகள் உள்ளன. இந்த நிலை இலங்கையின் புதிய அரசியல் யாப்பிலும் இடம்பெறுவது மிகவும் அவசியமாகும். மலையகத்துக்கென தனியான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் போன்ற கருத்துக்கள் மலையகத்தைச் சேர்ந்த பலராலும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பினை முன் வைக்குமிடத்து மேற்கண்ட விடயங்களை கருத்தில் கொண்டு மலையக மக்களின் நல்வாழ்வுக்கு வித்திட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.