புதிய அரசியல் சிந்தனைகளை நாம் எமது மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் – தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம்

புதிதாக பதவியில் அமரும் சிறீலங்கா அரச தலைவருக்கு முன்னுள்ள சவல்களை ஆய்வுசெய்து, அதற்கு ஏற்ப, அவருக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்வதன் மூலமே ஒரு அழுத்தத்தை சிறீலங்காவின் புதிய அரசின் மீது ஏற்படுத்த முடியும். அதற்குரிய புதிய அரசியல் சிந்தனைகளை நாம் எமது மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்பதுடன், செயற் திட்டங்களையும் தற்போதே வகுத்துக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

சிறீலங்காவில் இடம்பெற்ற எட்டாவது அரச தலைவர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வெற்றியீட்டியுள்ளார். சிங்கள மக்களின் அதிகமான வாக்குகளை அவர் பெற்றுள்ளதானது, சிறீலங்கா என்ற தேசத்தில் தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், ஏனைய இனங்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்கவும் என்னவிலை கொடுக்கவும் சிங்கள இனம் தயராகிவிட்டது என்பதையே கட்டியம் கூறி நிற்கின்றது.

கோத்தபாயாவின் வெற்றி என்பது அனைத்துலக சமூகத்தில் இருந்து சிறீலங்காவை அன்னியப்படுத்தும், சிறீலங்கா பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்ற அச்சங்கள் தென்னிலய்கையில் விதைக்கப்பட்டாலும், சிங்கள இனம் அதனைக் கண்டு அஞ்சவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அமெரிக்காவில் போடப்பட்ட வழக்குகளும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியன முன்னர் வெளியிட்ட அறிககைகளும் கூட தென்னில்கையில் எதிர்மறையான விளைவுகளைத் தான் ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்தலில் சிங்கள இனம் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. அதாவது சஜித் வென்றாலும், கோத்தபாயா வெற்றி ஈட்டினாலும் சிங்கள இனம் தனக்கான எதிர்காலத்தை செழுமைப்படுத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் தமிழினம் தனக்கு கிடைத்த மேலும் ஒரு சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளது. இது ஒரு சிங்கள இனத்தின் தலைவருக்கான தேர்தல், அங்கு ஆட்சியில் அமர்ந்த எந்த ஒரு தலைவரும் தமிழ் இன அழிப்பை மேற்கொள்வதில் முனைப்பாக செயற்பட்ட வரலாறுகளே உண்டு. எனவே தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் அல்லது தமிழர் ஒருவருக்கு எமது வாக்குக்களை அளிப்பதன் மூலம் நாம் ஒரு தனித்துவமான இனமாக சிறீலங்காவில் எமக்கான பதையை அமைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் ஒன்று எமக்கு கிட்டியிருந்தது.

அதற்கான ஆரம்ப நகர்வை தமிழ் மக்களும், சில அமைப்புக்களும் முன்வைத்தபோதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வரட்டுத் தன்மை அதனை மழுங்கடித்திருந்ததுடன், அந்த எண்ணக்கருவை முன்வைத்த அமைப்புக்களும் அதனை வலுவாக தகுந்த விளக்கங்களுடன் மக்களிடம் கொண்டுசெல்லவில்லை என்பதே எமது தற்போதைய தோல்விக்கான காரணம்.

இதனை நாம் தமிழ் மக்களின் தோல்வியாக பார்க்காது, தமிழ் மக்களை வழிநடத்தியவர்களின் தோல்வியாகவே பார்க்க முடியும். மேற்குலகத்தைப் பொறுத்தவரையில் கோத்தபாயாவை அரவணைக்க அல்லது மிரட்டிப் பணிய வைக்க பல வியூகங்களை வகுத்துள்ளன.

போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் படுகொலைகள் என்ற அஸ்திரம் அவர்களின் கைகளில் உள்ளபோதும், அதனை விடுத்து முதலில் அரவணைக்கும் முயற்சிகளையே அவர்கள் முன்வைக்கவுள்ளதாக தெரிகின்றது. அதன் முதலாவது நகர்வாகவே சிறீலங்கா இராணுவத்தை ஐக்கிய நாடுகள் சபையானது மீண்டும் அமைதிப் பணியில் இணைத்துக் கொண்டுள்ளது.

போர்க்குற்றவாளி என கூறப்பட்ட சவீந்திர சில்வாவை ஏற்றுக்கொண்டுள்ள ஐ.நா கோத்தபாயாவை ஏற்றுக்கொள்வதற்கு அதிக காலம் எடுக்கப்போவதில்லை. அதாவது அரசியலிலும், இராஜதந்திர வழிகளிலும் தனக்கு முன் உள்ள தடைகளை சிறீலங்கா அரசு மிகவும் தந்திரமாக வென்றுள்ளது.

அதற்கான காரணம் சிறீலங்காவில் சிங்கள இனத்திற்கு எதிராக அரசியலிலும், இராஜதந்திரத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் வலுவாக நிற்கக்கூடிய இனமாக தமிழ் இனம் தன்னை காண்பிக்கவில்லை என்பதேயாகும்.

அதாவது நாம் சிறீலங்கா அரசின் அரசியல் சிந்தனைக்குள் வீழ்ந்து, சிறீலங்காவின் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும் ஒருவருக்காக பணியாற்றும் போது என்றுமே தனித்துவமாக தெரியப்போவதில்லை. தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழர் தேசம் சார்ந்த அரசியலை நாம் முன்நகர்த்த முடியும் என்பதே தற்போது எம்மிடம் உள்ள அரசியல் உத்தி. அதனை பரீட்சிக்கும் முயற்சியில் நாம் பின்தள்ளப்பட்டுள்ளோம்.

அதற்கான பொறுப்பை சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வாக்களிக்குமாறு கோரியவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏனெனில் சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் கொண்டு சிறீலங்காவின் அரச தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற வலுவான கருத்தை இந்த தேர்தல் தமிழர் தரப்புக்கு மட்டுமல்லாது, அனைத்துலக சமூகத்திற்கும் கூறியுள்ளது. அதாவது தமிழ் இனம் மீண்டும் தனது கேந்திர பூகோள முக்கியத்துவத்தை இழந்துள்ளது.

எனவே புதிதாக பதவியில் அமரும் சிறீலங்கா அரச தலைவருக்கு முன்னுள்ள சவல்களை ஆய்வுசெய்து, அதற்கு ஏற்ப, அவருக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்வதன் மூலமே ஒரு அழுத்தத்தை சிறீலங்காவின் புதிய அரசின் மீது ஏற்படுத்த முடியும். அதற்குரிய புதிய அரசியல் சிந்தனைகளை நாம் எமது மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்பதுடன், செயற் திட்டங்களையும் தற்போதே வகுத்துக்கொள்ள வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.