பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!!

நீதி மன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் கோவில் தீர்த்தக் கேணியில் பௌத்த துறவியின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பிலும் நீதி மன்றத்தை அவமதித்த ஞானசாரதேரர் மற்றும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இல்லாவிட்டால் பயங்கரமான விளைவுகளை அரசு சந்திக்க வேண்டி வருகின்ற அதே நேரத்தில் சிங்கள தலைவர்களுடன் இந்த நாட்டில் சேர்ந்து வாழமுடியாது என்றும் இவர்கள் என்னமுகத்துடன் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வரப்போகின்றார்கள் என பாராளுமன்றத்தில் சம்பந்தன், சாள்ஸ், சாந்தி ஆகியோர் வீரஆவேசமாக பேசி இருந்தார்கள்.

அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் கீழ் இருக்கும் தொல்லியல் திணைக்களத்தின் உயர் சபையில் பௌத்த துறவியின் தலைமையில் முப்பத்து இரண்டு சிங்கள உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் வடக்கு மாகாணத்தில்  முன்னூற்றுஐம்பதுக்கும் மேற்பட்ட பௌத்தகோவில்கள் இருந்ததாக அடையாளப்படுத்தி வடக்கு கிழக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகளை புதிதாக அமைப்பதற்கு முன்மொழிவை முன்வைத்தனர்.

அதற்கமைவாக 2019ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அரசும் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது அதன் தொடர்சியே நீராவியடிப்பிள்ளையார், நாவற்குளி, வடக்கு-கிழக்கு இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் இருக்கும் புத்தகோவில்கள்,கன்னியா வென்னீருற்று போன்ற அனைத்து இடங்களிலும் தற்காலிகமாக இருக்கும் இவ் பௌத்த விகாரைகளை
நிரந்தரமாக அமைக்கும் பணிகளை சஜித் பிரேமதாசவின் அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.இதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய அரசியல் அமைப்பில் பௌத்தமத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது என்ற செய்தியை பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பெருமையாக எடுத்துவைத்தார் அதே போல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதை தமிழர்கள் எதிர்க்கவில்லை என்றும் உரையாற்றியுள்ளார்.
இவைகள் யாவும் ஊடகங்களிலும் பாராளுமன்ற ஹன்சாட்டிலும் ஆதாரமாக உள்ளது.

மேற் குறிப்பிட்ட விடயங்கள் இப்படி இருக்கையில் சஜித்பிரேமதாசாவின் அமைச்சின் கீழ் வருகின்ற தொல்லியல் திணைக்களத்தின் இவ்வாறான அத்துமீறிய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அந்த திணைக்களத்தின் உயர்சபையில் ஒரு தமிழரை கூட நியமிக்கமுடியாமல் நான்கரை வருடகாலம் அரசுக்கு முண்டுகொடுத்துவருவதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித்பிரேமதாச அவர்களை வேட்பாளராக நியமிக்கும் படியும் அவர் கடவுளுக்கு நிகரானவர் என்றும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றார்கள்.

மேற்குறிப்பிட்ட பௌத்த மயமாக்கலுக்கும் அரசுக்கும் முண்டு கொடுத்துக் கொண்டு மறுபக்கத்தில் பாராளுமன்றத்தில் வீர முழக்கம் இடுவதும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக முல்லைத்தீவில் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அதே மாவட்ட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவமோகன் பௌத்த துறவியைக் கொண்டு தனது வைத்தியசாலையை திறந்து வைத்துள்ள இவ் செயற்பாடுகளானது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலுக்கு ஒப்பானதாகும். இவ் வேலையை இவர்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு செய்யப்போகின்றார்கள் என்று தெரியவில்லை?