பிறந்தநாளை கொண்டாட சட்டவிரோதமாக கூடினார்கள் ; சுன்னாகத்தில் கைதான 24 இளைஞர்கள் விளக்கமறியலில்

இருவரின் பிறந்த நாளைக் கொண்டாடச் சுன்னாகத்தில் ஆள்களற்ற வீட்டில் சட்டவிரோதமாக கூடினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 26 இளைஞர்களில் 24 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது;

கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் என்பதால் அவர்களை மட்டும் பிணையில் செல்வதற்கு நீதிவான் ஏ.பீற்றர் போல் அனுமதித்தார். கைது செய்யப்பட்ட அனைவரையும் நேற்று மாலை நீதிமன்றில் முற்படுத்திய மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பிரான்ஸிஸ், இவர்கள் அனைவருமே ‘ஆவா‘ எனப்படும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

இவர்களுக்குப் பிணை வழங்கப்படுவதற்கும் அவர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இவர்கள் அனைவரும் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக மட்டுமல்லாமல் பெரியளவிலான குற்றச் செயல் ஒன்றைத் திட்டமிடுவதற்காகவும் தமது குழுவை மீள ஒருங்கிணைப்பதற்காகவும் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருந்தனர் என்று தமக்கு உளவுத் தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையிலேயே இவர்களைத் தாம் கைது செய்தனர் என்று தெரிவித்த பிரான்ஸிஸ், எனவே இவர்களில் யாரையும் பிணையில் விடுவிக்க வேண்டாம் என்று நீதிபதியிடம் கோரினார்.

கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கும் எதிராக வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் வழக்குகள், முறைப்பாடுகள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் வகையில் அவர்களின் விவரங்கள் வடமாகாண காவல் நிலையங்கள் அனைத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன. அது தொடர்பான அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதால் இவர்களைப் பிணையில் விடுவிப்பது ஏற்புடையதல்ல, அந்த விவரங்கள் கிடைக்கும் வரையில், கால அவகாசம் வழங்கி இவர்களை விளக்க மறியலில் வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இளைஞர்கள் அனைவரும் தமது நண்பர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே ஒன்று கூடியிருந்தபோது பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர். அவர்களுக்கும் வன்முறைக்கும் தொடர்பு ஏதுமில்லை, எனவே அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும் என்று சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முற்பட்டிருந்த சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

வாதங்களைக் கேட்ட நீதிவான், சிறுவர்கள் இருவரையும் மட்டும் பிணையில் செல்ல அனுமதித்தார். அவர்களது பெற்றோரை அழைத்துக் கடுமையாக எச்சரிக்கை செய்த பின்னர் ஒரு லட்சம் ரூபா ஆள் பிணையில் செல்ல அனுமதித்தார். ஏனைய 24 பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சுன்னாகம் நகரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்காகக் கூடியிருந்தபோது இவர்கள் 26 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் இருந்தவர்களான ரணா பிரசாத் (வயது 24) மற்றும் நெல்லியடியைச் சேர்ந்த நெல்லையா நேமிநாதன் (வயது 20) ஆகிய இருவரதும் பிறந்த நாளுக்காகவே இவர்கள் அனைவரும் ஒன்றுகூடியிருந்தனர். மோட்டார் சைக்கிள்களில் இரு கேக்குகள் வைக்கப்பட்டு வெட்டுவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட சமயம் இவர்களைச் சுற்றி வளைத்த பொலிஸார் கைது செய்தனர்.