பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடம் பெற்றுவரும் கலவரங்களில் இதுவரையில் 100 இற்கு மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளதுடன், 400 இற்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உடனடியாகவே தண்டனையை வழங்குவதன் மூலம் கலவரங்கள் தற்போது ஒரளவு தணிந்துள்ளது. ஆனால் சமூகலைத்தளங்களால் அவை மீண்டும் தூண்டப்படுவதை தான் தற்போதும் தடுக்க முடிய வில்லை என பிரித்தானியா காவல்த்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் சவுத்போர்ட் டில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள நகரங்களில் வன்முறை சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.தாக்குதல் நடத்தியவர் தொடர்பாக சமூகலைத்தளங்களால் தவறான தகவல்களால் அமைதியின்மை தூண்டப்பட்டது.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர் 17 வயதான அலக்ஸ் முகன்வா ருடகுபானா என்ற சிறுவன். வேல்ஸ் மாநிலத்தின் கார்டிப் நகரத்தில் பிறந்த அவரின் பூர்வீகம் றுவான்டாவாகும். அவர் கிறிஸ்த்தவ மதத்தைச் சேர்ந்தவர்.
இந்த தாக்குதல் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் எனவும் அது சட்டவிரோதமாக படகில் வந்த முஸ்லீம் குடியேற்றவாசி ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாகவும் தவறான செய்திகள் சமூகவலைத்தளங்களில் உடனடியாகவே பகிரப்பட்டிருந்தன.
இதுவரையில் 400 பேர் கைதுசெய்யப் பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. முஸ்லீம் மற்றும் ஆசிய இனத்தவர்கள் உட்பட சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பிரித்தானியாவை பூர்வீகமாகக் கொண்ட வலதுசாரிகள் குடியேற்றவாசிகள் தங்கியிருந்த இரண்டு கொலிடே இன் எனப்படும் ஆடம்பர விடுதி களையும் தாக்கியிருந்தனர்.