ரஸ்யாவில் ஒரு இராணுவப் புரட்சியில் ஈடுபட்டு உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பிய வக்னர் குழு என்ற தனியார் படையின் தலைவர் எவ்ஜெனி பிறிகோசன், பிரதம கட்டளை அதிகாரியான டிமிற்றி உற்கின் உட்பட 10 பேர் கடந்த புதன்கிழமை (23) மாலை ரஸ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Embraer 135BJ Legacy 600 என்ற விமானம் வக்னர் குழுவிற்கு சொந்தமான தனிப்பட்ட சொந்த விமானங்களில் ஒன்றாகும். இது மிகவும் ஆடம்பரமான விமானம். விபத்துக்களில் சிக்காத வரலாறு கொண்ட இந்த விமானத்தின் பாதுகாப்பு என்பது மிகவும் உயர்வானது.
ரஸ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து சென் பீற்றேஸ்பேக்கிற்கு சென்றுகொண்டிருந்த சமயம் ரிவர் என்ற பகுதியில் விமானம் வீழ்ந்துள்ளது. விமானம் வீழ்ந்தபோது வெடிப்பதிர்வை கேட்டதாகவும், விமானத்தை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டதாகவும் உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி மேற்குலக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ரஸ்யாவில் உள்ள விமான எதிர்ப்பு ஏவுகணையே விமானத்தை வீழ்த்தியதாக தாம் நம்புவதாக அமெரிக்க படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். வீழ்ந்த விமானத்தின் பாகங்களில் ஏவுகணை சிதறல்களின் அடையாளங்கள் உள்ளதாகவும் அவர்கள் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டிருந்தனர். ஆனால் பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமாக பென்ரகன் அதனை மறுத்துள்ளது. தம்மிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்துள்ளது.
எனினும் மேற்குலக நாடுகளின் கருத்தை ரஸ்யாவின் நாடளுமன்ற பேச்சாளர் டிமிற்ரி பெஸ்கோவ் மறுத்துள்ளதுடன், இது ரஸ்யாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் பாகங்கள் ஏறத்தாள 4 கி.மீ சுற்றுவட்டாரத்திற்குள் பரவிக்கிடக்கின்றன. விமானத்தின் இறங்கும் பகுதியும் (லான்டிங் கியர்) ஒரு இறக்கையும் விமானம் வீழ்ந்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் காணப்படுவதால் அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்திருக்கலாம் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன.
விபத்து நடந்த அன்று காலை அந்த விமானத்தை வாங்குவதற்காக சிலர் வந்து பார்வையிட்டு சென்றிருந்தனர். கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து விமானத்தை விற்பனை செய்வதற்கு வக்னர் குழுவினர் தீர்மானித்திருந்தனர். பார்வையிட வந்தவர்களை துணை விமானி விமானத்திற்குள் அழைத்துச் சென்று காண்பித்ததாக ரஸ்யாவில் இருந்து வெளிவரும் Moskovsky Komsomolets என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் துணை விமானியும் விபத்தில் கொல்லப்பட்டுவிட்டார். விமானத்தை பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதேசமயம், இந்த விமானம் சில தினங்களுக்கு முன்னர் திருத்தப் பணிகளுக்காக விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விமானத்தில் வழமைக்கு மாறாக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுவதை தான் பார்த்ததாக விமானத்தில் பயணம் செய்து மரணமடைந்த விமானப் பணிப்பெண் கிறிஸ்ரீனா ரஸ்போபோவா தனது பயணத்திற்கு முன்னர் தெரிவித்ததாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த விமானத்தின் திருத்தப்பணிகளில் ஈடுபட்ட அனைவரும் விசாரணை செய்யப்படுவார்கள் என ரஸ்ய தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் திருத்தப்பணிகளுக்காக சென்றவர்கள் மூலம் வெளியார் யாராவது குண்டை பொருத்தியிருந்தால் அது ரஸ்யாவின் பாதுகாப்பில் உள்ள மிகப்பெரும் தவறாகவே கருதப்படுவதுடன், எதிர்காலத்தில் பல முக்கிய இலக்குகளை அவர்கள் நெருங்கலாம் என்ற அச்சங்களும் எழுந்துள்ளன.
இதனிடையே, வீழ்ந்த விமானத்தில் பிறிகோசன் பயணம் செய்ததற்கு ஆதராமாக பயணிகளின் பெயர் பட்டியலில் அவரின் பெயர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றபோதும் இந்த பத்தி எழுதப்படும்வரை அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஏனெனில் கண்டெடுக்கப்பட்ட 8 சடலங்களும் மிகவும் உருக்குலைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. அவற்றை அடையாளம் காண்பது கடினம். ஆனால் அதனை டி.என்.ஏ பரிசோதனை செய்யுமாறு ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் பணித்துள்ளார்.
இரண்டு தினங்கள் கழித்து விபத்தில் இறந்தவர்களுக்கு தனது அஞ்சலியை செலுத்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிறிகோசன் மிகவும் சிறந்த வர்த்தகர், எனக்கு அவரை 1990 களில் இருந்து தெரியும். ஆனால் அண்மையில் அவர் மிகப்பெரிய தவறை மேற்கொண்டிருந்தார் என பூட்டின் தெரிவித்த கருத்து மேற்குலக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்த விமான விபத்தின் விசாரணை மிகவும் அனுபவம் வாய்ந்த விசாரணையாளரான ஐவான் சிபுலாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் 2014 ஆம் ஆண்டு மொஸ்கோவின் வுகோவோ விமானநிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட ரோட்டல் எரிபொருள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
ரஸ்யாவுக்கும் பிரான்ஸிற்கும் இடையிலான எரிபொருள் வர்த்தகத்தை முன்னெடுக்க சென்றவர் விபத்தில் கொல்லப்பட்டதும் ஒரு சதி என்றே அன்று பேசப்பட்டது.
இதனிடையே, பிறிகோசனின் தனிப்பட்ட விமானி விபத்தில் சிக்கிய விமானத்தை அன்று செலுத்தவில்லை என்பதுடன், அவர் தலைமறைவாகியுள்ளதும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. எனவே விமானம் நடுவானில் குண்டு வெடிப்பின் மூலம் சிதறடிக்கப்பட்டுள்ளது என்ற கருதையும் மறுக்க முடியாது.
தான் ஆபிரிக்கா நாடுகள் மீதான நடவடிக்கையில் கவனம் செலுத்தப்போவதாக விபத்துக்கு முன்னர் கருத்து தெரிவித்த பிறிகோசன் தெரிவித்திருந்தார். எட்டுக்கு மேற்பட்ட ஆபிரிக்க நாடுகளில் வக்னர் குழு செயற்பட்டுவருகின்றது. அண்மையில் நைகர் பகுதியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னனியிலும் வக்னர் குழுவே இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மீது 2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையை தொடர்ந்தே வக்னர் குழு இரகசியமாக உருவாக்கப்பட்டது. அதனுடனான தனக்குள்ள தொடர்பை கடந்த வருடமே பிறிகோசன் உறுதிப்படுத்தியிருந்தார். சிரியாவில் இடம்பெற்ற சமர்களில் .2018 ஆம் ஆண்டு இந்த குழுவினர் அமெரிக்க படையினருடன் நேரடி மோதல்களிலும் ஈடுபட்டிருந்தனர்.
பக்முட் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட இந்த குழுவினர் ரஸ்யாவின் ஊழல்மிக்க படை அதிகாரிகளுக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாக கடந்த ஜூன் மாதம் தெரிவித்து புரட்சி ஒன்றை மேற்கொள்ள முற்பட்டபோது, அதனை தனது முதுகில் குத்தியதாகவே பூட்டீன் விமர்சித்திருந்தார்.
இந்த ஆயுத நடவடிக்கைக்கு பின்னர் இரண்டு மாதங்கள் அமைதியாக இருந்த பிறிகோசன் இந்த வாரம் ஆபிரிக்க நாடு ஒன்றில் இருந்து காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அங்கு படையினரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் செவ்வாய்கிழமை (22) ரஸ்யா திரும்பிய அவர் புதன்கிழமை மரணடைந்துள்ளார்.
இதனிடையே, வக்னர் குழுவுக்கு சொந்தமான மற்றுமொரு விமானம் கடந்த வெள்ளிக்கிழமை (25) மொஸ்கோவில் இருந்து புறப்பட்டு சென்று ஆர்ஜாபைஜானில் தரையிறங்கியுள்ளது. அதில் பயணம் செய்தவர்கள் யார் என்பது குறித்து எந்த தகவல்களும் இல்லை.
அதாவது உக்ரைன் மீதான சிறப்பு படை நடைவடிக்கை என்பது பல திருப்பங்களை கொண்டதாக அடிக்கடி உலகின் கவனத்தை ஈர்த்துவரும்போதும், அதனால் உலக நாடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது.