பிரதிநிதித்துவ வீழ்ச்சி தொழிற்சங்கத்தில் எதிரொலிக்குமா? – துரைசாமி நடராஜா

இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தின் இருப்பு எந்தளவுக்கு உறுதிப்படுத்தப்படும் என்பது தொடர்பில் கருத்து வெளிப்பாடுகள் அதிகமாக இருந்து வருகின்றன. சிறுபான்மை பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகுமிடத்து அதன் தாக்க விளைவுகள் பல மட்டங்களிலும் எதிரொலிக்கும் என்பதையும் புத்திஜீவிகள்   சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக மலையக தமிழ் அரசியல் பிரதிநித்துவம்  இம்முறை சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் இதன் தாக்க விளைவுகள் அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் மட்டுமன்றி தொழிற்சங்க கலா சாரத்திலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்கள் இம்மாதம் 14 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பிரசார நடவடிக்கைகளை அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் முடுக்கிவிட் டுள்ளன. எனினும் இத்தேர்தல் பிரச்சாரங்கள் கடந்த காலங்களைப் போன்று தீவிரமாக முன்னெடுக்கப்படாத நிலையில் அமைதியா கவே முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வரு கின்றன. இந்நிலையில் இத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த புதன் (30), வெள்ளி(01)  மற்றும் திங்கட்கிழமை (04) ஆகிய தினங்களில் இடம்பெற்று முடிந்துள்ளது. இதனிடையே தமக்கு அமோக ஆதரவு  வழங்கி ஆட்சியில் அமர்த்துமாறு தேசிய மக்கள் சக்தி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன என்பன தாமே இத்தேர்தலில் அதிக பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற்று ஆட்சிபீடமேறவுள்ளதாக சூளுரைத்து வருகின்றன. அத்தோடு அண்மையில் நடந்து முடிந்த எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் ஜனாதிபதியைச் சார்ந்த தேசிய மக்கள் சக்தி கட்சியால் தனித்து நின்று ஆட்சிசெய்ய முடியாது என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

தொண்டமானின் வெற்றி 

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் சிறு பான்மை பிரதிநிதித்துவங்கள் உரியவாறு உறுதிப்படுத்தப்படுமா? என்றும் பலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது சாத்தியப்பட வில்லையாயின் அதனால் மேலெழும்பும் பாதக விளைவுகளையும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ள னர். இந்நிலையில் மலையக அரசியல் பிரதி நிதித்துவத்தின் அவசியப்பாடு குறித்தும் வலி யுறுத்தல்கள் பலவும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

1947 ம் ஆண்டுக்குப் பிறகு 1977 ம் ஆண்டு இடம்பெற்ற எட்டாவது பொதுத்தேர்தலில் மலையக தமிழர்களின் வாக்குகளின் மூலம் நேரடியாக ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய முடிந்தது. மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மூன்றாவது அங்கத்தவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் எஸ்.தொண்டமான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும்  நியமிக்கப்பட்டார். கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுப் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. தொண்டமான் இவ்வரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அமைச் சரவையில் மிகவும் வலுவான பேரம்பேசும் சக்தியைப் பெற்றிருந்ததாகவும் இது சாதக விளைவுகள் பலவற்றுக்கும் அடித்தளமாக அமைந்ததாகவும் கலாநிதி எஸ்.கருணாகரன் போன்றவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவரு டைய தலைமையின் கீழ் பெருந்தோட்ட மக்கள் வேதனம், குடியுரிமை, வீட்டுவசதி, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியினை எய்தியிருந்தமையும் நோக்கத் தக்கதாகும்.

இலங்கையின் எட்டாவது, ஒன்பதாவது பாராளுமன்ற காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல்களில் பிரதான கட்சி சில தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், வெற்றி பெற்று ஆட்சியமைத்ததன் பின்னர் தொடர்ந்து ஸ்திரத் தன்மையுடன் அவ்வரசாங்கத்தை கொண்டு நடாத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்கி இருந்தது. இந்நிலையில் பத்தாவது பாராளுமன்ற காலப்பகுதியில் தேர்தலின் பின் ஆட்சியதிகாரம் எந்தத் தரப்பிற்கு செல்லும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மலையக மக்கள் முன்னணி விளங்கியது. 1994 ம் ஆண்டு திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டமை மலையக வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும்.  இவ் வமைச்சின் அமைச்சராக சௌமியமூர்த்தி தொண்டமான் நியமனம் பெற்றார். 2000 – 2001 ஆண்டு பதினோராவது குறுகியகால பாராளு மன்ற காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் அரசாங்கத்தின் ஸ்திரமின்மை, பாராளுமன்றத் தின் குறுகிய ஆயுட்காலம் என்பவற்றின் காரணமாக மலையகத் தமிழ் கட்சிகளால் குறிப்பிடத்தக்க பாராளுமன்ற செயற்பாடுகள் எதனையும் ஆற்ற முடியவில்லை என்பதையும் கலாநிதி கருணாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுபான்மை நெருக்கீடு

2001 – 2004 வரையான இலங்கையின் 12 ஆவது பாராளுமன்ற காலப்பகுதியில் ஒன்பது மலையக பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஆறுமுகன் தொண்டமான், பெ.சந்திரசேகரன் ஆகியோர் அமைச்சு பதவிகளில் உள்ளீர்க்கப்பட்டனர். 2004 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் 10 அங்கத்தவர்கள் மலையகத் தமிழ் மக்கள் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருந்தனர். 1977 ம் ஆண்டு பதவிக்கு வந்த ஐ.தே.க.அரசாங்கமானது ஸ்திரமான நிலையில் இருந்தும்கூட பாராளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனத்தைக் கொண்டிருந்த இ.தொ.கா. வை பல்வேறு உள்நாட்டு, சர்வதேச ரீதியான காரணங்களின் நிமித்தம் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டமையானது, இலங்கையின் அன்றைய அரசியல் சூழ்நிலையில் முக்கியத்து வம் வாய்ந்த ஒரு சக்தியாக இ.தொ.கா.வும், அதன் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானும் விளங்கியமையே பிரதான காரணமாகும் என்பதையும் புத்திஜீவிகள் அடையாளப்படுத்துகின்றனர். மலையக அரசி யல் வரலாற்றில் இ.தொ.கா, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் மலையக மக்களின் அபிவிருத்தி கருதி நன்மைகள் பலவற்றையும் பெற்றுக் கொடுத்துள்ளமை இங்கு குறிப் பிடத்தக்கதாகும். இவற்றிற்கெல்லாம் ஆதாரமாக மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் காரணமாக அமைந்தது என்பதையும் மறுப் பதற்கில்லை.

இந்நிலையில் இம்முறை பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயேச்சை குழுக்களின் அதிகரிப்பு, சிறுபான்மை கட்சிகளிடையே காணப்படும் பிணக்குகள், பிளவுகள் போன்ற பலவும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை கேள்விக்குறியாக்கி விடுமோ! என்ற இயல்பான அச்சம் மேலோங்கி வருகின்றது. இதேவேளை தேர்தல் காலங்களில் மாத்திரம் நுவரெலியா மாவட்டத்துக்கு வரு

கின்ற பரசூட் வேட்பாளர்களை நம்ப வேண்டா மென்றும் வாக்குகளை சிதறடித்து தமிழ் பிரதி நிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு வந்துள்ள சில சுயேச்சைக் குழுக்கள் தொடர்பிலும் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்றும் இ.தொ.கா.வின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் குறிப்பிடுகின்றார்.

திகாம்பரத்தின் நிலைப்பாடு 

இதேவேளை மலையக மக்கள் செறிந்து வாழுகின்ற நுவரெலியா மாவட்டத்துக்கு பாராளுமன்ற தேர்தல் மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. எனவே இங்கு தமிழ் பிரதிநிதித்து வத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பதுளை மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்காளர்கள் சுமார் ஆறு இலட்சம் பேர் காணப்படும் நிலையில் சிறுபான்மை வாக்காளர்களாக சுமார் ஒரு இலட்சம் பேரேயுள்ளனர். ஆகவே இந்த ஒரு இலட்சம் வாக்காளர்களே மேற்படி ஆறு இலட்சம் சிங்கள வாக்காளர்களுடன் முட்டிமோதி போட்டியிட வேண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ் பிரதிநிதித்துவத்துக்கு கேள்வி எழுந்திருப்பதுடன் ஒரு விதமான அச்சமும் தோன்றியுள்ளது. இந்நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமானால் மக்கள் தீர்க்கமாக சிந்தித்து தமது வாக்குகளை மிகச் சரியான முறையில் பிரயோகிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் பதுளை மாவட்ட முதன்மை வேட்பாளர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்திலும் இம்முறை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. சாதக விளைவுகள் ஏற்படுமா என்பதனை பொறுத் திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

  இதேவேளை பெருந்தோட்ட மக்கள் அரசியலில் நேரடியாக பங்குபற்ற முடியாத நிலைமை காணப்படுகின்றது. எந்தப் பிரச்சி னைகளுக்கும் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகளை நாடும் நிலையே காணப்படுகின்றது. இந்நிலை மாற்றம் பெறவேண்டும். சுதந்திரமாக தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்ய வேண் டும். பெருந்தோட்ட மக்கள் நேரடியாக அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வதையே எதிர்பார்த்துள்ளோம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அண்மையில் தெரிவித்துள்ளமையானது மலையக பிரதிநிதிகள் குறித்து தேசிய மக்கள் சக்தி கொண்டுள்ள நம்பகத்தன்மையற்ற நிலையை புலப்படுத்துவ தாக உள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப் பிடுகின்றனர். எனவே  பிரதமர் மலையக மக்களை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு மறைமுகமாக கேட்டுக் கொண்டுள்ளதாகவே கருதமுடிகின்றது.

கலங்கரை விளக்கம் 

இந்நிலையில் மலையக அரசியல் பிரதி நிதித்துவம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்த லில் வீழ்ச்சியுறுமிடத்து அது தொழிற்சங்க கலாசாரத்திலும் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடுமென்று நம்பப்படுகின்றது. மலையக மக்களுக்கும் தொழிற்சங்கத்துக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் நெருக் கமானதாகும். தொழிலாளர்களின் இன்ப துன்பங்களில் தொழிற்சங்கங்கள் பங்கெடுப்ப தோடு அவர்களது வாழ்க்கைக்கு பல வழிகளிலும் வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக இருந்து வருகின்றன. எவ்வாறெனினும் தொழிற்சங்கங்கள் தோட்டத்துக்குள் நுழைவ தென்பது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

1930 ம் ஆண்டளவில் இந்தியத் தொழி லாளர்கள் இந்நாட்டில் நிரந்தரமாக வேரூன்றிய போதிலும் நகர்ப்புறத்தில் வளர்ச்சியுற்ற தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அவர்களை அந்நியர்களாகவே கருதினர். கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றபோது தோட்ட உரிமையாளர்கள் தமது தொழிலாளர்கள் நகரங்களுடன் தொடர்பு கொள்ளாதவாறு தடை செய்தனர். அவ்வேலை நிறுத்தங்கள் தோட்டங்களுக்கு பரவுவதை தவிர்க்கவே அவ்வாறு செய்தனர். தொழிற்சங்க இயக்கத்தினர் தோட்டங்களுக்கு சென்று பணியாற்ற முடியாதபடி 1917 ம் ஆண்டின் 38 ம் இலக்கச் சட்டமும் தடை விதித்திருந்தமை தெரிந்ததாகும். அதனை மீறி தோட்டங்களுக்குச் சென்று பணியாற்ற முயன்றவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிரேஸ்கேடில் என்ற அவுஸ்திரேலியர் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய போக்குகளுக்கு மத்தியில் கடும் முயற்சிக்கு பின்னால் தொழிற்சங்கங்கள் தோட்டங்களில் உள்நுழைந்தன.

அதீத ஈடுபாடு 

தொழிற்சங்கங்கள் மலையக மக்களுக்கு தோள் கொடுத்த நிலையில் தொழிற்சங்கங்களை மையப்படுத்தி தொழிற்சங்கவாதிகள் அரசியல் களம் புகுந்தனர்.  அத்தோடு அவர்களின் அரசியல் ஆதிக்கமானது பல சந்தர்ப்பங்களில் அவர் சார்ந்த தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்கும் உந்துசக்தியாக அமைந்தது. மலையகத்தின் சில அரசியல்வாதிகள் தமது தொழிற்சங்க மேம்பாடு கருதி தனது தொழிற்சங்கங்களை சார்ந்தவர்களுக்கு அதீத ஈடுபாடு காட்டுவதாகவும், ஏனைய தொழிற்சங்கங்களை புறக்கணித்து செயற்படுவதாகவும் தொழிலா ளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் குற்றச் சாட்டுக்களை முன்வைத்திருந்தமையும் உங்க ளுக்கு நினைவிருக்கலாம்.

இதில் உண்மை இல்லாமலும் இல்லை. இந்நிலையில் மலையக அரசியல் பிரதிநிதித்துவம் வீழ்ச்சி காணும் நிலையில் அதன் தாக்கம் தொழிற்சங்க கலாசாரத் திலும் எதிரொலிக்கும். இதேவேளை தொழி லாளர்களின் பொருளாதார அபிவிருத்தி கருதி வெளியார் உற்பத்தி முறை தொடர்பாகவும் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாகவும் தொழிற்சங்கங்களின் எதிர்கா லம் கேள்விக்குறியாகும் அபாயநிலை காணப் படுகின்றது. எனவே இத்தகைய நிலைமைகளால் தொழிற்சங்க கலாசாரம் வலுவிழக்கின்றபோது அது தொழிலாளர் உரிமைகளை மழுங்கடிப்பிற்கு உள்ளாக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.