Tamil News
Home செய்திகள் பிரச்சினைகளைக் கையாள துறைசார் நிபுணர் குழு – இந்தியா கூட்டமைப்புக்கு ஆலோசனை

பிரச்சினைகளைக் கையாள துறைசார் நிபுணர் குழு – இந்தியா கூட்டமைப்புக்கு ஆலோசனை

தமிழ் மக்களின் பிரச்னைகளை விடயங்கள் சார்ந்து ஒன்றன் பின் ஒன்றாகக் கையாள துறைசார் நிபுணர் குழுவை நியமிக்குமாறு இந்திய இராஜதந்திர தரப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.

தொல்பொருள், பண்பாட்டு, கலாசார ரீதியாக ஆக்கிரமிக்கப்படும் செயல்பாடுகள் அல்லது திட்டமிட்டு மாற்றியமைக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுடனான பல்வேறு தொடர்பாடல்கள் மற்றும் சந்திப்புக்களின் போது இராஜதந்திர தரப்புக்களிடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்தே தமது தரப்புக்களுடன் இணைந்து செயல்பட கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கு அப்பால் துறைசார் குழு ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் இராஜதந்திர தரப்புக்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் விரைவில் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. இந்தக் குழு, மக்கள் பிரச்னைகளை முக்கியத்துவ அடிப்படையில் உரிய தரவுகளுடன் கிரமமாக ஆவணப்படுத்தவுள்ளது.

இதில் மாகாண சபை முறைமையிலுள்ள குறைபாடுகள் மற்றும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தல், இனப்பிரச்னைக்கான தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களும் இடம்பெறவுள்ளன.

இதனைத்தொடர்ந்து இராஜதந்திர தரப்புக்களின் மூலம் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகள் முன்னெடுப்பதை இலக்காகக்கொண்டு இந்த நிபுணர் குழு செயல்படவுள்ளது.

எனினும், தற்போது வரையில் இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பினுள் பரஸ்பர கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் விரைவில் இவ்விடயம் சம்பந்தமாக கூட்டமைப்பு கூடிப் பேசவுள்ளது எனக் கூறப்படுகின்றது.

Exit mobile version