Home செய்திகள் பிரச்சனைக்கு தற்கொலை தானா தீர்வு?-பாலநாதன் சதீஸ் 

பிரச்சனைக்கு தற்கொலை தானா தீர்வு?-பாலநாதன் சதீஸ் 

248 Views

தற்கொலை செய்யுமளவிற்கு  துணிவு இருந்தால் வாழ்ந்து பாருங்கள் வாழ்கையின் சுவாரஷ்யத்தினை புரிந்து கொள்வீர்கள்.

கணவனுடன் சண்டையாம், கள்ளத் தொடர்பாம், காதலில் தோல்வியாம், போதை பழக்கமாம், அம்மாவுடனும் சண்டையாம், எதிர்பார்ப்பு ஏமாற்றமாம், உறவினர்கள் புறக்கணிப்பாம், கடன்  தொல்லையாம், குடும்பத்தில் பிணக்காம் இதனால் மன அழுத்தமாம், தற்கொலையாம்……….

இப்படி பல காரணம் கூறி வாழத் தைரியம் இல்லாமல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முனையும்  கோழைகள் தானா ? தற்கொலை செய்பவர்கள். ஆம் என்னை பொறுத்தவரை கோழைகள் தான்.  இவர்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத ,சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாத, வாழ வழியில்லா முடவர்கள் தான்.

இன்று டிஜிற்றல் உலகில் தொல்லை தரும் தொலைபேசியிலும், அறிவு திறனை மழுங்கடிக்கும் மடிகணணிக்குள்ளும் மூழ்கி கொண்டிருக்கின்றது நம் சமூகம். இணையத்தில் மூழ்கியிருக்கும் எம் சமூகத்தின் மூளை சிதறடிக்கப்பட்டு குறுகிய தன்மையானதாக சிந்தித்து முடிவெடுக்க தெரியாத ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இதனாலேயே இன்று பிரச்சினைகளை எதிர்கொண்டு சமார்தியமாக தப்பிக்க முடியாமல் தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

2017 ம் ஆண்டு தற்கொலை செய்யும் நாடுகளில் இலங்கையே முதலிடம் வகித்துள்ளது. இந்நிலை படிப்படியே அதிகரித்து இன்று உலகளாவிய ரீதியில் முதல் இருபது நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்குகின்றது. இலங்கையில் நாளொன்றுக்கு 11 தற்கொலைகளும், வருடமொன்றிற்கு அண்ணளவாக  4000 தற்கொலையும் இடம்பெறுகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்கொலை முட்டாள் தனமான முடிவாக இருந்தாலும் ஏன் இவ் எண்ணம் வருகின்றது? ஒருவர் தற்கொலைக்கு எண்ணுவதற்கு காரணம் யார்?  என பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றே! பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு தற்கொலையை தேர்ந்தெடுக்கின்ற  சமூகம் ஒன்று இன்று உருவாகியுள்ளது. இதற்கு யார் காரணம்?  சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றே!    தற்கொலை செய்வதற்கு உயிரியல், உளவியல், சமூக காரணிகள் என பல இருந்தாலும் என்னை பொறுத்தவரை  ஒருவனை தற்கொலைக்கு தூண்டும் காரணியாக நிச்சயம் அவன் வாழுகின்ற சமூகமும், குடும்பமும் தான் முதற் காரணமாக அமைகின்றது.

எமக்குள்,  எம் உறவுகளுக்குள், எம்  சமூகத்துக்குள் பேசி தீர்க்கப்பட வேண்டிய பிர்சினைகள் பல இருக்கும், நிச்சயம் அது பகிரப்பட்டால் ஒரு தீர்வு கிட்டும் ஆனால்  அப் பிரச்சினைகள்  பகிரப்படாமல்  அதுவே மன அழுத்தமாக உருவாகி அது தற்கொலையாக இன்று உருவெடுத்துள்ளது.  இதனை யாரும் புரிந்துகொள்வதில்லை மாறாக  இதற்கு அனைவரும் கூறுவது மன அழுத்தமாம்  அதனால் தற்கொலையாம். இது ஒரு காரணமல்ல,  மன அழுத்தத்தின் இறுதி நிலையில் தான் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். ஆனால்  இதற்கு அடிப்படை காரணங்களாக அமைவது வேறு. அதாவது  ஒருவர் மீது  கொண்டுள்ள அதீத பிரியம், காதல் தோல்வி, குடும்ப பிணக்கு, தகாத உறவு, புரிந்துணர்வின்மை, கடன் தொல்லை, போதைப்பழக்கம்… இவ்வாறு சின்ன சின்ன காரணங்கள் தான்  ஆனால் நம் இளம் சமூகம் தமக்குள்ளேயே போட்டு புதைத்துவிட்டு தம் பிரச்சினக்கு தற்கொலைதான் தீர்வாக இருக்கும் என முட்டாள் தனமான முடிவினை எடுத்திருக்கின்றது. அது தவறு அதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சினையிலிருந்து மீண்டுவிடலாம் என  முட்டாள்தனமாக தற்கொலையை தேர்ந்தெடுக்கின்ற நம்  இளம் சமூகத்திற்கு தெரியவில்லை தம் உயிரின் மதிப்பு. மனிதன் சுகந்திரமாக பிறந்தாலும் அவனுக்கே அவனது உயிரை எடுக்க உரிமையில்லை அப்படியிருக்க பிரச்சினையை தீர்க்க தற்கொலை தான் முடிவு எனும் விபரித முடிவால் உங்கள் உயிர் இழக்கப்படும் இதனால் உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடாது. உங்கள் மீது மீண்டும் களங்கம் வருமே தவிர உங்கள் பிரச்சினை தீர்க்கப்படாது.  இதனை நாம் சிந்திக்க வேண்டும் இழந்த  எதையும் மீளப்பெறலாம் ஆனால் இழந்த  உயிர்களை மீளவும் ஈடுசெய்யமுடியாது.  தற்கொலை செய்யுமளவிற்கு உங்களுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பாருங்கள் வாழ்கையின் சுவாரஷ்யத்தினை புரிந்து கொள்வீர்கள்.

தற்கொலை என்பது பிரச்சினைகளை எதிர்கொண்டும், அதிலிருந்து விடுபடுவதற்குமான காத்திரமான வழியல்ல, அது வாழ்வில் ஏற்படக்கூடிய நெருக்குதல்களை சமாளிக்க உதவும் சாதகமான வழியும் அல்ல. அதை புரிந்து கொள்ளுங்கள். தற்கொலை செய்பவர்கள் எதிர்காலம் குறித்த பின்விளைவுகளை சிந்திக்காமல் எடுக்கும் அவசர முடிவால் தன் எதிர்கால கனவுகளை, வாழ்கையை இழந்துவிடுகிறார்கள். அது மட்டுமல்ல அவரது குடும்பம், உறவினர்கள் தான் பெரும் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகின்றார்கள் இதனால் குடும்பத்தில் நின்மதியிழந்து அவர்களின் மீதி வாழ்வும் நிலைகுலைந்து போய்விடுகின்றது. எனவே உங்களை மட்டும் பார்க்காமல் உம் உறவுகளின் பின் நிலையையும் கொஞ்சம் சிந்தியுங்கள்.  இளம் சமுகத்தினரான நீங்கள் தற்கொலையை பிரச்சினைகளுக்கு தீர்வாக எடுத்தால் எதிர்காலத்தில்  எம் நாட்டில் இளம் சமுதாயம் இல்லாமலும்,  பிணங்கள் கூட  புதைக்க இடமில்லாமலும் தான் போகும். தற்கொலையை தகர்த்தறிந்து  வாழ்வில் சாதித்து காட்டுங்கள் உங்களால் நிச்சயம் முடியும்.

தற்கொலையை தடுக்க உங்களாலும் முடியும். தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் செய்யும் ஒரு உதவி நிச்சயம் யாரோ ஒருவருக்கு பயன்படக்கூடும்.

தற்கொலை ஏதாவது ஒரு காரணத்தினால் நிகழ்வது  போல் தோன்றினாலும் அது உண்மை அல்ல,  ஒவ்வொரு தற்கொலை முயற்சியிலும் பல்வேறு உயிரியல், உளவியல்,  மற்றும் சமூகக்காரணிகள் என ஏதோ ஒன்று கட்டாயம் பின்புலத்தில் இருக்கும். இக்காரணிகள் ஒன்றோடு ஒன்று இணையும் போதுதான் தற்கொலைக்கு முயற்சிப்பார்கள். ஆகவே  தற்கொலை  எதிர்பாராமல் முன்னறிவித்தலின்றி நடப்பது முன்னரே தெரிந்திருந்தால் நான் காப்பாற்றியிருப்பேன் என நடந்து முடிந்த பின்னர் யோசிக்காதீர்கள். சற்று முன்னெச்சரிக்கையுடனே செயற்படுங்கள்.  நிச்சயம் தற்கொலைக்கு முயற்சிப்பவர்  ஒருவர் தன் நண்பர்களுக்காே, தெரிந்தவர்களுக்கோ அல்லது தனது முகப்புத்தகம், தொலைபேசி உரையாடல் என எதிலாவது தன்  உணர்வுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பகிர்ந்திருப்பார். அதாவது “எனக்கு வாழவே பிடிக்கவில்லை”, “நான் எல்லோருக்கும் பாரமாகிவிட்டேன் இப்படி ஏதாவது  வெளிப்படுத்தியிருப்பார்கள்.  இப்படி யாராவது மன சோர்வுக்கு உட்பட்டு இருக்கின்றார்கள் என நீங்கள்  உணர்ந்தால் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் வகையில் பேசுங்கள் அதுதான் அவர்களிற்கான சிகிச்சை. மனம் திறந்து பேசுங்கள் இதனால் அவர்களது எண்ணமும் மாற்றமடையும்.

உங்கள் உறவினர்களோ, நண்பர்களோ, உம் அருகிலிருப்பவர்களோ முன்புபோல் இல்லை, வாழ்க்கையில் நம்பிக்கையற்று இருக்கிறார்கள் என நீங்கள் உணர்ந்தால்  தயவுசெய்து அவர்களை விட்டு விலகாதீர்கள், முடிந்தளவு அவர்களுக்கு தனிமைக்கு இடம்  கொடுக்காதீர்கள். அவர்களிடம் கனிவாக பேசி எதிர்மறையான எண்ணங்களை கண்டறிந்து நம்பிக்கையூட்டும் வகையில் பேசுங்கள்  ஏனெில் என்ன செய்வதென தெரியாமல் தவறான முடிவை எடுக்கும் பலருக்கு உங்களின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை கலந்த உணர்வினை கொடுக்கும். இதனால் அவர்கள்  தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட நிச்சயம் உதவும்.

இன்று இளைஞர்கள் அதிகம் தற்கொலைக்கு முயற்சிப்பதற்கு பெற்றோர்கள் தான் காரணம்.  ஏனெனில் தன் குழந்தைகளுக்கு இல்லை என்ற சொல்லே இருக்கக்கூடாது என சிறுவயதிலிருந்தே பார்த்து பார்த்து வளர்க்கும் பெற்றோர்கள் எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவத்தையும், நம்பிக்கையையும், மனத் தைரியத்தையும்  சற்று சிறுயதிலிருந்தே உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்காெடுங்கள். இதனால் எதிர்காலத்தில் தற்கொலைகள் சற்று  குறைக்கப்படலாம்.

நவீன உலகிலே  சிக்கிதவிக்கும் எம் சமூகம் தம் வாழ்க்கை மாறிவிடும் என்ற புரிதலோடு செயற்பட்டால் மட்டுமே நம் சமூகத்தில் தற்கொலை எனும் தாகத்தினை எம்மால் தணிக்கமுடியும். எனவே தற்கொலை பற்றிய விழிப்புணர்வு சமுகத்தில் மேற்காெள்ளப்பட வேண்டியதும் அவசியமானதாகும்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version