‘என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை’ வைத்தியர் விளக்கம்

‘என் மீது வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் ஊழியர்கள் சிலரினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது’ என மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் தெரிவித்துள்ளார்.

நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை நிறுவன மட்டத்தில்,திணைக்கள மட்டத்தில்,அமைச்சு மட்டத்தில் கொண்டுசெல்லப்பட்டு தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பினை நடாத்தி என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் கொண்டுசெல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பொலிஸ் நிலையத்திலும் உள்நோக்கோடு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதியான நியாயமான விசாரணையொன்று நடைபெற்று உண்மைகள் வெளிப்படுத்தப் படவேண்டும்.

இது தொடர்பில் அறியவிரும்புவோர் என்னுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொள்ளமுடியும். அல்லாதுவிட்டால் வைத்தியசாலையுடன் தொடர்கொள்ளமுடியும்.

இந்த வைத்தியசாலையில் அனைத்து இன ஊழியர்களும் கடமையாற்றுகின்றார்கள்.அனைவரும் சந்தோசமாக கடமையாற்றுகின்றனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர்.அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கிவிட்டு வைத்தியசாலையினைவிட்டு வெளியேறுவதற்கு நான் ஆயத்தமாகவுள்ளேன்.” என்றார்.

மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி, தங்கள் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொள்வதாக குறித்த வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்கள்  குற்றஞ்சாட்டி நேற்று ஊடக சந்திப்பை நடத்திப்பொன்றை நடத்தியிருந்த நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்து டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன்  தானும் ஊடக சந்திப்பை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.