பாலஸ்தீன தேசிய போராட்டம் – ந.மாலதி

இன்றைய பாலஸ்தீனிய-இஸ்ரேலிய பிரச்சனையை இன்றைய உலக ஒழுங்கின் பின்னணியில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.ஆனாலும் இதன் ஆயிரமாண்டுகள் பின்னணியும் தெரிந்திருப்பது புரிதலை ஆழமாக்குவதற்கு உதவும். இதன் வரலாற்று பின்னணியில் கிறிஸ்தவ, இஸ்லாமிய பேரரசுகள் தாக்கம் செலுத்துகின்றன.

பழைய வரலாறு

10,000 ஆண்டுகளுக்கு முன் ஆறுகள் ஓடி செழுமையாக்கப்பட்ட நிலப்பரப்பான மத்திய கிழக்கில் விவசாயமும் அதனால் உருவான ஓரிடத்தில் வாழும் நாகரீகமும் ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. மத்திய கிழக்கின் ஒரு பகுதி நிலமே பாலஸ்தீன் என்று பழைய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. இங்கு வாழ்ந்த மக்களை இன்றைய காலத்தில் அரேபியர்கள் என்கிறோம். இந்த அரேபியர்கள் மத்தியில் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன் உருவானதுதான் யூத மதம். இவர்களின் கதையாடல்களில் இவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த போது மோசஸ் இவர்களை பாலஸ்தீனத்திற்கு நடத்தி சென்றார் என்பார்கள்.

2000 ஆண்டுகக்கு முன் ஆட்சி செய்த யூத அரசன் டேவிட் ஜெரூசலதத்தில் கட்டிய கோவில் யூதர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக தொடர்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன் எழும்பிய ரோமாபுரி அரசின் கிறிஸ்தவ சிலுவைப்போர் காலத்தில் இக்கோவில் அழிக்கப்பட்டது. யூதர்களும் தொடர்ச்சியாக ஐரோப்பா எங்கும் பரவினார்கள்.

இதற்கு பின்னர் இஸ்லாமிய மதத்தின் தோற்றத்தை தொடர்ந்து மத்திய கிழக்கு, தெற்கு ஐரோப்பா, வடக்கு ஆபிரிக்க பகுதிகளை ஏறக்குறைய 600 ஆண்டுகளாக 19ம் நூற்றாண்டு வரை ஆட்சிசெய்தது இஸ்லாமிய பேரரசான ஒட்டமான் பேரரசு. அப்பேரரசின் கீழ் கலைகள், அறிவியல் வளர்ச்சிகள் பற்றி ஆய்வாளர்கள் வியந்து பேசுவார்கள். ஒட்டமான் அரசின் கீழிருந்த ஐரோப்பிய பிரதேசங்கள் ஏற்கனவே கத்தோலிக்க மதத்தை பின்பற்றியவை. ஏறக்குறைய 500 ஆண்டுகளின் முன் இப்பிதேசங்களின் அரசர்கள் ஒட்டமான பேரரசுடன் தொடர்ந்து போர் செய்து போத்துக்கேய மற்றும் இஸ்பானிய பேரரசுகளை வளர்த்தார்கள். இக்காலத்திலேயே ஐரோப்பாவில் யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான இனவாத கருத்துக்கள் வளர்ந்தன.

தொடர்ந்து பிரித்தானிய பேரரசு உட்பட ஐரோப்பாவில் வளர்ந்த பேரரசுகள் தான் உலகெங்கும் காலனிகளை உருவாக்கினார்கள். இன்று நாம் காலனிய காலம் என்று அறிந்திருக்கும் காலத்தை இந்த ஐரோப்பிய பேரரசுகள் ஆரம்பித்து வைத்தன. இந்த காலனிய காலத்தின் இறுதியில், அடுத்தடுத்து 30 ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்கள்தான் இன்றைய ஐநாவையும் உலக ஒழுங்கையும் நிர்ணயித்தவை.

முதலாம் உலகப்போரும் சியோனிஸ்டுகள் குடியேற்றமும் பலநூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் அங்கு அவர்கள் மேல் காட்டப்பட்ட இனவாதத்தால் உலகளாவிய் சியோனிச இயக்கம் ஒன்றை உருவாக்கி தமது பூர்வ நிலமாக அவர்கள் கருதிய பாலஸ்தீனத்தை மீண்டும் கற்பனை செய்ய தொடங்கினார்கள்.

செல்வந்தர்களான யூதர்கள், வரலாற்று பாலஸ்தீனம் என்று இன்று அழைக்கப்படும் பாலஸ்தீனத்தில் நிலங்கள் வாங்கி அங்கு யூதர்களை குடியேற்னார்கள். படத்தில் வெள்ளை நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் பகுதிகளே இவ்வாறு யூதர்கள் குடியேறிய பகுதிகள். முதலாம் உலக போரின் போது உலகிலேயே பலம் மிக்க பேரரசாக இருந்த பிரித்தானிய பேரசு இந்த சியோனிச கனவுக்கு ஆதரவு வழங்கி பாலஸ்தீனிய பிரச்சனைக்கு வித்திட்டது என்று சொல்வதும் பிழையாகாது. முதலாம் உலக போரின் இறுதியில், 1917இல், பிரித்தானியா ஒட்டமான் பேரசின் கீழிருந்த பாலஸ்தீன நிலத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இக்காலத்திலேயே பிரித்தானியா சியோனிச கனவுக்கு ஆதரவு வழங்கும் “பல்ஃவோர்” (Balfour) பிரகடனத்தை செய்தது.

nnn பாலஸ்தீன தேசிய போராட்டம் - ந.மாலதி

பிரித்தானியா பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த குறுகிய காலத்தில், அதன் சியோனிச திட்டத்தை எதிர்த்து பாலஸ்தீனத்தில் இருந்த அரேபியர்களின் ஆயதப்போராட்டத்தை சிறுக சிறுக ஆரம்பித்தார்கள். அரேபிய போராட்டக்காரர்களுக்கு எதிராக யூதர்களுக்கு ஆதரவாக பிரித்தானியா தனது இராணுவத்தை இயக்கியது. அரேபியர்களின் எதிர்ப்பை அழித்தொழித்தது பிரித்தானியா. யூதர்கள் பெரும்தொகையாக குடியேறுவதை முதலில் ஆதரித்த பிரித்தானியா இப்போது அரேபியர்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக யூதர்களின் பாலஸ்தீனத்திற்கு வரும் தொகையை கட்டுப்படுத்த முயன்றது. இப்போது சியோனிச சக்திகள் பிரித்தானியவை வெளியேற்றும் எண்ணத்துடன் அதன் மேலும் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனர்களை அவர்களின் நிலத்தில் இருந்து வெளியேற்றும் திட்டங்களையும் சியோசிஸ்டுகள் தொடர்ந்து அமுல்படுத்தினார்கள்.

இரண்டாம் உலக போரும் சியோனிச ஆதரவு சூழலும்

இரண்டாம் உலக போர்ச்சூழலில் ஐரோப்பாவில், முக்கியமாக ஜெர்மனியில், யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பால் யூதர்களுக்கு ஆதரவான சூழல் ஒன்று உலகில் உருவானது. யூதர்களுக்கு ஆதராவாக உருவான சூழலில் வரலாற்று பாலஸ்தீனத்தை யூதர்கள் இடங்கள், அரேபியர்கள் இடங்கள் என்று படத்தில் காட்டப்பட்டது போல் பங்கு போட்டு ஐநாவின் ஊடாக ஒரு தீர்மானத்தையும் 1947 இல் நிறைவேற்றியது பிரித்தானியா. தொடர்ந்து 1948 இல் பிரித்தானியா அங்கிருந்து வெளியேறியது. சர்ச்சைக்குரிய ஜெரூசலம் ஐநாவில் நிர்வகிக்கப்படும் என்றும் இத்தீர்மானம் சொல்லியது.

அக்காலத்தில் பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் 30 வீதம். இவர்களில் பெரும்பான்மையோர் சில வருடங்களுக்கு முன்னர்தான் ஐரோப்பாவில் இருந்து அங்கு குடியேறிவர்கள். இருந்தும் இவர்களுக்கு 55 வீதம் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டது. அரேபிய நாடுகளை தவிர்த்த ஏனைய நாடுகள் இதனை ஆதரித்தன. பேரளவில் அரேபிய மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதாற்கான கட்டமைப்புக்களை உருவாக்கி விட்டு பிரித்தானியா வெளியேறினாலும், யூதர்கள் அடுத்தடுத்து இவற்றை நீக்கினார்கள். இப்போது தங்களுக்கு ஆதரவாக செல்வாக்கு நிறைந்த யூதர்கள் வாழும் ஐ-அமெரிக்காவை தங்களுடன் இணைத்து கொண்டார்கள்.

nab பாலஸ்தீன தேசிய போராட்டம் - ந.மாலதி

ஐநா தீர்மானம் நிறைவேற்றி ஆறு மாதங்களுக்குள் இஸ்ரேயில் தனிநாட்டு பிரகடனம் செய்தது. அரேபிய நாடுகளுக்கும் இஸ்ரேயிலுக்கும் இடையில் தொடர்ந்து நடந்த போரில் அரேபிய நாடுகள் தோல்வியை தழுவின. அரேபிய பாலஸ்தீனர்கள் பாலஸ்தீனத்திலிருந்து அகதிகளாக வெளியேறினார்கள். அரேபியர்களுக்கு என்று பிரிக்கப்பட்ட பிரதேசங்கள் பல இஸ்ரேயிலின் கட்டுப்பாட்டில் போனது. ஜோர்டன் நாடு West Bank மற்றும் கிழக்கு ஜெரூசலத்தையும், எகிப்து Gaza Strip ஐயும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 750,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் இடங்களைவிட்டு வெளியேறிய இந்நிகழ்வையே ‘அல் நக்பா’ (The Catastrophe) என்று நினைவுகூருகிறார்கள்.

தொடர்ந்த இஸ்ரேயில் அரேபிய போர்கள்

ஆறு நாட்கள் போர் என்று குறிப்பிடப்படும் போர் இஸ்ரேயிலுக்கும் அரேபிய நாடுகளுக்கும் இடையில் 1967 இல் நடந்தது. அதிலும் இஸ்ரேயில் வெற்றி பெற்றது. எகிப்தின் கையில் இருந்த Gaza Strip, ஜோர்டனிடமிருந்த West Bank மற்றும் கிழக்கு ஜெரூசலம், யாவும் இஸ்ரேயிலின் கைகளுக்கு மாறியது. கைப்பற்றிய பிரதேசங்களில் இருந்து இஸ்ரேயில் வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை ஐநா பாதுகாப்புச்சபை நிறைவேற்றியது. ஆனால் இஸ்ரேயில் வெளியேறவில்லை.

1973ம் ஆண்டு எகிப்தும் சிரியாவும் இஸ்ரேயிலுடன் போரிட்டன. ஐநாவால் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் உருவானது. ஐநா சமாதான படைகள் அங்கு நிறுத்தப்பட்டன. எகிப்தும் இஸ்ரேயிலும் 1979 இல் ஒப்பந்தம் செய்த பின்னர் ஐநா படைகள் அங்கிருந்து வெளியேறின. கோலன் மலையில் ஐநா படைகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டன. இதனோடு ஏனைய அரேபிய நாடுகள் பாலஸ்தீன விடுதலைக்காக நேரடியாக போரிடுவதும் நின்று போயிற்று. ஏராளமான அரேபிய நாடுகளின் மத்தியில் இருந்தும் பாலஸ்தீன மக்கள் தனித்து விடப்பட்டார்கள்.

பாலஸ்தீன் விடுதலை இயக்கம்

அரேபிய நாடுகளான சிரியா, லெபனன், ஜோர்டன் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளில் வாழ்ந்த புலம்பெயர் பாலஸ்தீனிய மக்களிடையே ஃபாற்றா (Fatah) என்ற அமைப்பு 1959 இல் தோற்றம் பெற்றது. உலகெங்கும் வாழும் பாலஸ்தீனிய மக்களை ஒன்று சேர்த்து பாலஸ்தீன் விடுதலைக்காக போரை முன்னெடுப்பது அப்போது அதன் நோக்கமாக இருந்தது. பிற்காலத்தில் இதுவே PLO அமைப்பின் முதன்மை பங்காளியானது. PLO எனப்படும் பாலஸ்தீன் விடுதலை இயக்கம் 1964 இல் நிறுவப்பட்டது. 1967 ஆறு நாட்கள் போரை தொடர்ந்து இது பலமாக இயங்க ஆரம்பித்தது. யசார் அரபத் 1969 இலிருந்து 2004 இல் அவர் இறக்கும் வரை அதன் தலைவாராக தொடர்ந்தார். வெவ்வேறு கொள்கைகளை கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்கள் எல்லோரும் இன்றும் பாலஸ்தீன விடுதலை போராட்டத்தின் குறியீடாக யசார் அரபத்தை போற்றுகிறார்கள்.

rrr பாலஸ்தீன தேசிய போராட்டம் - ந.மாலதி

PLO-Fatah இஸ்ரேயிலின் மீது பல தாக்குதல்களை நடத்தியது. 1974 இல் அரேபிய நாடுகளின் கூட்டணி PLO வை பாலஸ்தீன மக்களின் ஏகபிரதிநிதியாக ஏற்றுக்கொண்டது. இதை தொடர்ந்து ஐநா பொதுச்சபையில் பேசும் முதலாவது நாடற்ற மக்களின் தலைவராக 1982 இல் யசார் அரபத் ஐநாவில் பேசினார்.

அரேபிய வழக்கில் இன்ரஃபாடா (Intifada) என்பது அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் தலைமைத்துவம் இல்லாமல் கிளர்ந்தெழுந்து போராடுவதை குறிக்கும். இஸ்ரேயில் அடக்குமுறைகளுக்கு எதிராக பாலஸ்தீனியர்களின் முதலாவது இன்ரஃபாடா 1987 இலிருந்து 1993 வரையான காலப்பகுதி வரை தொடர்ந்தது.
பல வன்முறை போராட்டங்களை தொடர்ந்து, 1991 இல் யசார் அரபாத்தும் இஸ்ரேயிலின் பிரதமர் யிட்சக் ரபீனும் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள். இதற்காக இருவருக்கும் 1994 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசும் கிடைத்தது.

Gaza வினதும் West Bank இனதும் சில பகுதிகளை நிர்வாகிக்க ஒஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீன் தேசிய சபையை (PA) உருவாக்கியது. அது முதலில் PLO வின் ஒரு அமைப்பாக இயங்கியது. காலப்போக்கில் வேறு கட்சிகளும் தேசிய சபை தேர்தலில் இறங்கிய போது பாலஸ்தீன் தேசிய சபை தனித்து இயங்க, PLO ஃபாற்றா என்ற அதன் முந்தைய பெயரை எடுத்துக்கொண்டது.

ஒஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீனத்தின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேயில் வெளியேறவும் ஒரு கால அட்டவணையை ஏற்றுக்கொண்டது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் பல காலம் நீடிக்கவில்லை. இஸ்ரேயிலின் தொடரும் அடக்குமுறைகளை ஏற்றுக்கொள்ளாத பாலஸ்தீன மக்கள் மீண்டும் போராடினார்கள். அதுவே இரண்டாவது இன்ரஃபாடா என்று அன்று அழைக்கப்படுகிறது. 2000 ஆண்டிலிருந்து 2005 வரை அது நீடித்தது. அதை தொடர்ந்து இஸ்ரேயில் Gaza விலிருந்து வெளியேறியது.

ஹமாஸ்

Gaza வில் ஃபாற்றாவுக்கு போட்டியாக ஹமாஸ் என்ற பாலஸ்தீன ஆயுத அமைப்பு இப்போது பலம் பெற்றது. 2006 பாலஸ்தீன் தேசிய சபை தேர்தலில் ஹமாஸ் பெரு வெற்றி அடைந்தது சர்தேசத்திற்கு அதிர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து 2007-2017 வரையான காலப்பகுதியில் இந்த இரு பாலஸ்தீன அமைப்புக்களான ஃபாற்றாவும் ஹமாஸூம் கடுமையாக மோதிக்கொண்டன. 2017இல் இரு அமைப்புக்களும் ஒன்றாக செயற்படுதவற்கான ஒப்பந்தம் செய்து பாலஸ்தீன தேசிய சபையில் சேர்ந்து இயங்குகின்றன. Gaza வில் ஹமாஸூம் West Bank இல் ஃபாற்றாவும் பலமாக இயங்குகின்றது

hh பாலஸ்தீன தேசிய போராட்டம் - ந.மாலதி

ஐநா

இன்று 6 மில்லியன் பாலஸ்தீனியர்கள் உலகின் பல பாகங்களிலும், 4 மில்லியன் பாலஸ்தீனியர்கள் பாலஸ்தீனத்திலும் வாழ்கிறார்கள். அதே நேரம், இன்று உலகின் யூத மக்கள் தொகை ஏறக்குறைய 20 மில்லியன். இவர்களில் 6 மில்லியன் யூதர்கள் இஸ்ரேயிலில் வாழ்கிறார்கள். 12 மில்லியன் யூதர்கள் ஐ-அமெரிக்காவில் வாழ்கிறார்கள்.

1977 இலிருந்து ஐநாவின் பொதுச்சபை பாலஸ்தீன பிரதேசங்களை 1948 இல் பிரகடனப்படுத்திய நவம்பர் 29ம் திகதியை பாலஸ்தீன மக்களுக்கான கூட்டொருமை நாளாக பிரகடனப்படுத்தி அந்நாளை பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை பிரபலமாக்கும் நாளாக அவதானித்து வருகிறது. தனது அங்கத்துவ நாடுகளையும் பாலஸ்தீன மக்களின் கூட்டொருமை நாளாக இந்நாளை அவதானிக்க கேட்டு வருகிறது. இவ்வளவு உலக ஆதரவு இருந்தும் ஐ-அமெரிக்க, ஐரோப்பிய எதிர்ப்பு இவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தடுத்தே வருகிறது.

ScreenShot2015 05 15at4.55.52PM பாலஸ்தீன தேசிய போராட்டம் - ந.மாலதி

2011 இல் ஐநாவின் முழு உறுப்பினராவதற்கு பாலஸ்தீன் தேசிய சபை விண்ணப்பித்தது. ஆனால் பாலஸ்தீன் தேசிய சபையை பார்வையாளராகவே ஐநா பொதுச்சபை ஏற்று வாக்களித்தது. தற்போது இத்தேசிய சபையின் தலைவராக உள்ள முகமத் அபாஸ் வன்முறைகளை எதிர்க்கிறார். சர்வதேச மட்டத்தில் பாலஸ்தீன தனிநாட்டிற்கான அங்கீகாரம் பெறுவதற்காகவே இவர் உழைக்கிறார். பயங்கரவாத அமைப்பாக ஐ-அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட ஹமாஸ் கூட இஸ்ரேயில்-பாலஸ்தீன் என்ற இருநாட்டு தீர்வை ஏற்கிறது. இந்தியா மற்றும் சிறிலங்கா உட்பட, உலகின் 140 க்கும் அதிகமான நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டை அங்கீகரித்து தூதரகங்களையும் வைத்திருக்கின்றன. இஸ்ரேயிலும் ஐ-அமெரிக்காவும் தான் தொடர்ந்து இத்தீர்வை எதிர்க்கின்றன. உலகில் இன்று நிலவும் அநீதிக்கு அடிப்படை காரணம் எதுவென்று இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

எமக்கான பாடங்கள்

பாலஸ்தீன தேசிய பிரச்சனையை புரிந்து கொள்வது இன்றைய உலக ஒழுங்கை புரிந்து கொள்வதற்கு மிகவும் உதவும். பாலஸ்தீன தேசிய பிரச்சனையின் செயற்பாட்டாளர்களில் முதன்மையானதாக ஐ-அமெரிக்காதான் இயங்குகிறது. உண்மையில் உலகம் பாலஸ்தீனியர்களின் பக்கமும் மேற்குலகம் ஐ-அமெரிக்க-இஸ்ரேயில் கூட்டணிக்கு பின்னாலும் நின்றுதான் இயங்குகின்றன. இவ்விரு பிரிவுகளின் இடையில் இயங்கும் ஐநாவின் பலவீனத்தை பற்றியும் நாம் புரிந்து கொள்ளலாம். சர்வதேச சட்டங்கள் என்று சொல்லப்படுபவை எல்லாம் இங்கு பலமிழந்து போகின்றன. இருந்தும் இதே ஐநாவும் மேற்குலகமும் மனித உரிமைகள் பற்றி பேசுவது எத்துணை நகைமுரணானது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலக ஒழுங்கை மாற்றினால்தான் ஐ-அமெரிக்காவுக்கு இடையூறாக உள்ள தேசிய போராட்டங்களுக்கு நீதி கிடைக்கும். இதை மாற்றுவதற்கு சீனா போன்ற வேறொரு வல்லரசுதான் தேவையா? அல்லது சமூக நீதியை முன்னிறுத்தும் அமைப்புக்களும் போராட்டங்களும் சிந்தனைகளும் உலக மக்களிடையே வளருவதுதான் தேவையா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.