பலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேலினால் இழைக்கப்படும் அநியாயங்களை விளங்கிக் கொள்வதற்கு இந்த மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற ஜெனின் அகதி முகாம் மீதான கொடூர தாக்குதலே போதுமானது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18) இடம்பெற்ற பலஸ்தீன் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பலஸ்தீனின் ஜெனின் முகாம் மீது இஸ்ரேலிய படையினர் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் முன்னெடுத்த பலத்த தாக்குதல்களில் 12 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான ஆக்கிரமிப்புகளில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் சுமார் 100 பேர் காயமடைந்த்துடன் 4000 இற்கும் அதிகமானோர் தமது வீடுகளை விட்டும் வெளியேறியிருக்கின்றனர்.
1000 இஸ்ரேலிய படையினர் இத் தாக்குதலில் பங்கெடுத்ததாகவும் இதன்போது தாக்குதல் ஹெலிகொப்டர்கள், ட்ரோன்கள், தாக்குதல் விமானங்கள் மற்றும் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 20 தடவைகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் மேற்குக் கரையில் கடந்த 20 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று என மிடில் ஈஸ்ட் மொனிடர் எனும் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இத் தாக்குதல்களை பலஸ்தீன அதிகார சபை உட்பட சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
அதுமாத்திரமன்றி, இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்தே தினமும் ஒரு பலஸ்தீனராவது இஸ்ரேலிய படைகளாலும் சட்டவிரோத குடியேற்றவாசிகளாலும் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுமே வருகின்றனர். இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 26 சிறுவர்கள் உள்ளிட்ட 170 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் அறிக்கைகளுக்கமைய இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் இஸ்ரேலிய குடியேறிகள், மாதாந்தம் தலா 95 தாக்குதல்களை பலஸ்தீனர்கள் மீது நடத்தியுள்ளனர். இதற்கமைய மொத்தமாக 570 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 160 தாக்குதல்களில் பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.
இது இஸ்ரேலிய இராணுவத்தினர் மாத்திரமன்றி சட்டவிரோத யூத குடியேற்றவாசிகளும் அப்பாவி பலஸ்தீனர்கள் மீது எந்தளவு தூரம் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுகின்றனர் என்பதைத் தெளிவுபடுத்துவதாகவுள்ளது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக இன்று வரை நூற்றுக் கணக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவற்றில் ஒன்றேனும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே கவலையான செய்தியாகும்.
சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இந்த வன்முறைகளை சகித்துக் கொண்டு அதனுடன் தொடர்ச்சியாக தேனிலவு கொண்டாடி வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும். தீவிரவாத இயக்கங்களை தடை செய்து அவற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது போன்று மனித குலத்துக்கு எதிரான தீவிரவாதத்தில் கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் என்றார்.