Home ஆய்வுகள் பலரை ஆட்டிப்படைக்கும் ‘கட்டுக்கடங்கா நினைவு நடத்தை’-ர.தினேஸ் (யாழ்.பல்கலை உளவியல்துறை மாணவன்)

பலரை ஆட்டிப்படைக்கும் ‘கட்டுக்கடங்கா நினைவு நடத்தை’-ர.தினேஸ் (யாழ்.பல்கலை உளவியல்துறை மாணவன்)

உளப் பிரச்சினைகளில் பதகளிப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பதகளிப்பின் வகைகளில் பலரைப் பாதிக்கும் கட்டுக்கடங்கா நினைவு நடத்தையை (Obsessive Compulsive Disorder-OCD)ஒருசிலர் மட்டும் அறிந்திருப்பர்.கட்டுக்கடங்கா நினைவு நடத்தையினால்  நடத்தையினால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணங்கள், செயல்பாடுகளின் தன்மையானது சாதாரணமாக மனிதர்களை அலைக்கழிக்கும் எண்ணங்களிலிருந்து மாறுபட்டது.

இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையற்றதும்,காரணமே இல்லாத வேதனைப்படுத்துவதுமான ஆட்டிப்படைக்கும் எண்ணங்கள் மற்றும் பிம்பங்கள்  திரும்பத் திரும்ப அவர்களின் கட்டுப்பாடின்றி வந்துகொண்டே இருக்கும். இந்த எண்ணங்கள் அல்லது பிம்பங்கள் அவர்களுக்கு பாரியளவில் பதற்றத்தையோ, பயத்தினையோ ஏற்படுத்தக் கூடியது. தீங்கு, ஆபத்து, அசுத்தம் சம்பந்தப்பட்ட தவறான அல்லது எதிர்மறையான பதற்றத்தை விளைவிக்கும் எண்ணங்கள் ஏற்படுகின்றது.

Obsessive Co பலரை ஆட்டிப்படைக்கும் 'கட்டுக்கடங்கா நினைவு நடத்தை'-ர.தினேஸ் (யாழ்.பல்கலை உளவியல்துறை மாணவன்)

இந்த எண்ணங்கள் குறித்த அறிவு பெரும்பாலும் இந் நோய் பீடிக்கப்பட்டவர்களிடம்  இருப்பதில்லை. ஏன் இத்தகைய எண்ணங்கள் வருகின்றன?எல்லோருக்கும் இவ்வாறான எண்ணங்கள் தான் இருக்குமா? என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.இவ்விதமாக எழும் எண்ணங்களிலிருந்து மீள்வதற்கு எவ்வளவோ முயற்சி செய்தாலும் எளிதில் அதைவிட்டு மீள முடியாது.

இவ்வகை எண்ணங்கள் ஏற்படுத்தும் பதற்றம், இவர்களைக் கட்டாயமாக சில அவசர நடவடிக்கைகளில் (Compulsions) ஈடுபடத் தூண்டும்.இதன்மூலம்,தொடர் எண்ணங்களிலிருந்து விடுபடலாம் என எண்ணி இவர்கள் அர்த்தமற்ற செயல்பாடுகள் எனத் தெரிந்தும்,அதில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள்.உதாரணமாக கையைக் கழுவுவது,அடிக்கடி  குளிப்பது,திரும்பத் திரும்ப சவர்க்காரம் இடுவது,ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்ப செய்வது,இதன் மூலம் தாம் தீங்கு நடப்பதை கட்டுப்படுத்தி விட்டதாகவும்,தம்மைச் சுற்றி அனைத்தும் சரியாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதாகவும் உணர்வார்கள்.

இவ்வாறு செயற்படும் போது எண்ணங்கள் தரும் பதற்றத்திலிருந்து சற்றே விடுதலை கிடைத்தது போல உணர்வார்கள். ஆனால் அது தற்காலிகமான ஒன்றாகவே காணப்படும்.மறுபடியும் அவ்வாறான அலைக்கழிக்கும் பதற்றம் நிறைந்த எண்ணங்கள் அவர்களைத் தாக்கும்.அதனால் திரும்பத் திரும்ப,கட்டாயத்தின் பெயரில் சில செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இவ்வகை எண்ணங்களையும் அல்லது  செயல்பாடுகளையும் நிறுத்த நினைத்தாலும் ஏதோ கெட்டது நடந்து விடக்கூடும் என்ற பீதி அல்லது பதற்றத்தினால் அதிலேயே ஆழ்ந்திருப்பார்கள்.கட்டுக்கடங்கா நினைவு நடத்தை உள்ள நபர்கள் எப்போதுமே விழிப்புநிலையில் இருப்பது போன்று இருக்கும்.இவர்களால் தளர்வாகவோ, ஓய்வாகவோ இருப்பதாக உணரமுடியாது. இது தீவிரமாகும் போது தினசரி வாழ்க்கையையும்,நேரத்தையும்,மகிழ்ச்சியையும் வெகுவாக பாதிக்கிறது.

உலக சுகாதார அமைப்பு  கட்டுக்கடங்கா நினைவு நடத்தையில் மிக முக்கியமான அம்சமாகக் காணப்படுவது மீண்டும் மீண்டும் ஒன்றை செய்வதற்கதான மிகைவிருப்ப எண்ணங்கள் அல்லது அலைக்கழிக்கும் செயல்கள் தோன்றுவது என்கிறது.

மிகைவிருப்ப எண்ணங்களாக, நோயாளியின் மனதில் மீண்டும் மீண்டும் நுழையும் கருத்துக்கள்,படங்கள், அல்லது தூண்டல் போன்றவை காணப்படுகின்றன. இவை அவர்களை தவறாது தொடர்ந்து அலைக்கழிக்கின்றன. அத்துடன் நோயாளி அடிக்கடி அவற்றை எதிர்த்து நிற்க முயற்சித்து தோல்வியடைகிறார்.

ஆனாலும் இது அவர்களின் சுய எண்ணமாகவே கருதப்படுகின்றது. ஆயினும் இது அவர்கள் மத்தியில் தானாக நிகழக்கூடியதாகவும் அடிக்கடி முரண்படக்கூடியதாகவும் அமைகின்றது. தற்போது பதகளிப்பு எல்லா சந்தர்ப்பங்களிலும் காணப்படுவதால் கட்டுக்கடங்காத செயற்பாடுகளை தடுக்காதுவிடின் பதகளிப்பு மோசமாகும்.

கட்டுக்கடங்கா நினைவு நடத்தை வேறுபட்ட தன்மைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சுத்தம் மற்றும் அழுக்குகள் தொடர்பானது, கட்டுப்பாட்டை இழத்தல், தீங்கை ஏற்படுத்தல், தேவையற்ற பாலியல் சார்ந்த எண்ணங்கள், மதம் சார்பான செயல்கள் மற்றும் கருத்துக்கள், சலவை மற்றும் சுத்தம் தொடர்பான விடயங்கள், தாம் செய்யும் செயல்களை சோதனை செய்தல், திரும்ப திரும்ப செய்யும் செயற்பாடுகள், மனம் சார்ந்தது என தாக்குகிறது.

இன்று பல்வேறுபட்ட காரணிகளால் கட்டுக்கடங்கா நினைவு நடத்தை எனும் பாரிய உள நோய் பலரைத் தாக்குகின்றது.பொதுவாக நம் மூளையின் முன்பகுதி மற்றும் மூளையின் ஆழமான கட்டமைப்புக்கும் இடையே தொடர்பு காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இங்கு செரரோனின் நரம்புக்கடத்தியின் குன்றியதன்மை மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இப்பகுதி பாதிப்படைந்து இந்நோய் ஏற்படுகின்றது.பரம்பரை ரீதியாகவும் கடத்தப்படக்கூடிய இந் நோய் ஏற்படுவதாக உள மருத்துவர்கள் கூறுகின்றனர்.மனஅழுத்தம் கட்டுக்கடங்கா நினைவு நடத்தைக்கான காரணியில்லாவிடினும் மனஅழுத்த நிகழ்வுகள் அதாவது ஒரு விபத்துடன் சம்பந்தப்பட்டோ அல்லது அவ் விபத்துக்கான சாட்சியாகவோ காணப்படல்,போன்றவையும் நோய் ஏற்படக் காரணமாக இருக்கக்கூடும்.

மன அழுத்தம் மற்றும் பதகளிப்பு நோய்களுக்கு நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்படாது இருந்தல், வாழ்க்கையில் கட்டுக்கடங்கா நினைவு நடத்தைக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்.பிள்ளைப்பருவ கசப்பான சம்பவங்கள், பெற்றோரின் தண்டணைகள், பாடசாலை அல்லது வேலை தொடர்பான பிரச்சினைகள், பல்கலைக்கழக பரீட்சை நெருக்கடிகள், மற்றும் அன்றாட வாழ்க்கையில் உறவுகளுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகள் என்பனவும் கட்டுக்கடங்கா நினைவு நடத்தையின் தீவிரத் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றது.

கட்டுக்கடங்கா நினைவு நடத்தையுடையவர்கள் அழுக்கு அல்லது கிருமி பற்றிய பயம்,பிறருக்கு தீங்கு விளைவித்து விடுவோமோ என்கிற பயம்,  ஏதேனும் தவறு செய்து விடுவோமோ என்கிற பயம், சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயத்தில் ஈடுபட்டு தர்மசங்கடம் ஆகிவிடுமோ என்ற பயம்,தாங்கள் அசுத்தமாக அல்லது அழுக்காகிவிடுவோமோ என்ற பயம்,எல்லாம் தன்னைச் சுற்றி மிகச் சரியாக இருக்க வேண்டுமென்ற தேவை,கடவுள் அல்லது மதம் குறித்த தொடர் எண்ணவோட்டங்கள்,வியர்வை,மலம்,சிறுநீர் பற்றிய சிந்தனை, அதிஸ்ட்ட மற்றும் துரதிஸ்ட்ட எண்கள் பற்றிய சிந்தனை,பாலியல் வன்முறை  அல்லது வக்கிர எண்ணங்களை நினைத்து பயம், தங்களுக்கோ அல்லது உறவினர்களுக்கு தீங்கு வந்துவிடுமோ என்கிற பயம் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பர்.

பொதுவான செயற்பாட்டு அறிகுறிகளாக கை கழுவுவது,குளிப்பது,பல் துலக்குவது போன்ற தினசரிச் செயல்பாடுகளை செய்யும்போது சில முறைகளை வரிசையாக கடைப்பிடித்தல்.உதாரணமாக திரும்பத் திரும்ப கையைக் கழுவுவது,குளிக்கும் போது சில விடயங்களை வரிசைப்படுத்திச் செய்வது,குளியலறையைச் சுத்தப்படுத்தி பிறகே குளிக்க ஆரம்பித்தல்,வீட்டுப் பாடம் செய்யும் போது திரும்பத் திரும்ப எழுதி அழித்து, திரும்ப எழுதுவது படிக்கும் போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடிக்கோடிடுவது.

வீட்டுப்பாடம் சரியாக செய்துவிட்டோமா என திரும்பத் திரும்ப சரிபார்ப்பது, கதவை சரியாக மூடிவிட்டோமா என திரும்பத் திரும்ப சோதித்துப் பார்ப்பது. தூங்கும் முன்னர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டில்,பக்கத்தில் இருக்கும் பொருள் போன்றவற்றைத் தொட்டுப் பார்ப்பது.பொருட்களைக் குறிப்பிட்ட விதத்தில் சீராக வரிசைப்படுத்துதல், சத்தமாகவோ அல்லது  மனதுக்குள்ளோ எண்ணுவது.

உதாரணமாக சாலையில் வாகனங்களைப் பார்த்தால், அதிலுள்ள எண்களை கட்டாயமாக கூட்டிப் பார்ப்பர். குறிப்பிட்ட வார்த்தைகள்,சொற்றொடர்கள் அல்லது பிரார்த்தனையைத் திரும்பத் திரும்ப சொல்வர்.தொற்றுநோய்களுக்குப் பயந்து கை குலுக்க மறுப்பது மற்றும் கதவுக் கைப்பிடியைத் தொடாமலிருப்பது,தேவையில்லாத பல பொருட்களை திறக்க மனம் இன்றி சேமித்து வைப்பது உதாரணமாக பழையப் பொருட்கள்,பத்திரிகை,பழைய ஆபரணங்கள்.திரும்பத் திரும்ப வரும் சில எண்ணங்கள்,வார்த்தைகள் அல்லது பிம்பங்கள் பற்றி கட்டாய சிந்தனையால் தூங்க முடியாமலிருப்பர்.

பாரிய உளநோயாக கட்டுக்கடங்கா நினைவு நடத்தை ஏற்படுகின்ற போதும் உள நல மருத்துவரிடம் ஆரம்பத்திலேயே மருத்துவ சிகிச்சை எடுப்பதாலும், உளக்கல்வியூட்டல், அறிகை நடத்தை மாற்றுச் சிகிச்சை வழங்கல், தள்வுப்பயிற்சி, பகுத்தறிவற்ற சிந்தனா நடத்தை சிகிச்சை வழங்கல், சாந்தவழிப் பயிற்சி, குடும்ப உளவளத்துணை, சமூக ஆதரவை பெற்றுக்கொடுத்தல் மூலம் கட்டுக்கடங்காத நினைவு நடத்தை கட்டுப்படுத்தப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version