பறிபோகும் கிழக்கு – மட்டு.நகரான்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி மக்கள் இயக்கம் மீள கட்டியெழுப்பி போராட முன்வர வேண்டும்.

P2P பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி மக்கள் இயக்கம் அனைவராலும் கடந்த மாதங்களாக உச்சரிக்கப்பட்ட வசனம். தமிழர்கள் மத்தியில் ஓரு பேரெழுச்சியை ஏற்படுத்திய இயக்கம். தமிழர்களுக்கு இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதியை ஓங்கி ஒலிக்கச்செய்த குரல். இன்று அதன் தேவை மிக அதிகமாக உணரப்பட்டு வருகின்றது.

சிவில் சமூக அமைப்புகளினை ஒன்றிணைத்து தமிழ் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் என்ற காரணத்தினால் அந்த போராட்டம் மக்கள் மத்தியில் மட்டுமன்றி இலங்கையையும் சர்வதேசத்தையும் ஒரு கணம் ஆட்டம்காண வைத்தது.

வடகிழக்கு தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவதம் வாய்ந்ததும், இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாகவும் இந்த பொத்துவில் தொடக்கம் வரையான பேரெழுச்சி மக்கள் இயக்கம் கருதப்படுகின்றது.

அன்று சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் ஓங்கியொலிக்கச்செய்த இந்த குரலானது, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாங்கள் வாழவேண்டியுள்ளது.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள போட்டி மற்றும் தலைமைத்துவ பிரச்சினைகள் காரணமாக அவர்களின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மீதான நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் பார்க்க தமது கட்சிசார்ந்த நலன்களிலேயே அதிக அக்கறை காட்டும் நிலையிருந்து வருகின்றது.

தமிழ் தேசிய கட்சிகளுக்கு சரியான மூக்கணாங்கயிறு இல்லாத காரணத்தினால், அவர்களின் செயற்பாடுகள் வடகிழக்கு மக்களுக்கு எந்தவித சாதக நிலையினையும் ஏற்படுத்தாத வகையிலேயே முன்நகர்த்தப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளையும் ஒன்றிணைத்து முன்கொண்டுசென்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர வேண்டிய பாரிய கடமை இன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி மக்கள் இயக்கத்தின் கைகளில் உள்ளது.

குறிப்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகளானது, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்துடன் முடிவடைந்து விட்டதாக இல்லாமல், அதனை ஒரு சிவில் சமூக அமைப்பாக கட்டியெழுப்பவேண்டிய பாரிய பொறுப்பு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி மக்கள் இயக்கத்தின் வடக்கு இணைப்பாளர் வேலன் சுவாமி, கிழக்கு இணைப்பாளர் சிவயோகநாதன் ஆகியோரின் தலைகளில் சுமத்தப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி மக்கள் இயக்கம் ஒரு புலிகள் சார்பு அமைப்பாகவும், வெளிநாட்டு புலம்பெயர் சக்திகளின் ரிமோட்டாகவும் இலங்கை அரசாங்கம் பார்த்தாலும் இன்று சர்வதேச சமூகம் அதனை ஒர் மக்கள் அமைப்பாகவே பார்க்கின்றது என்பதை இங்குள்ள இராஜதந்திரிகளின் கள விஜயங்கள் மூலம் வெளிப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேவையாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகள் தேவையாகவுள்ளது. அரசியலுக்கு அப்பால் கிழக்கில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் கிழக்கு தமிழ் மக்கள் இருக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகள் உட்பட பல்வேறு சம்பவங்கள் இந்த மாவட்டத்தின் நிலைமையினை மிகவும் கவலைகொள்ளும் அளவுக்குக் கொண்டு செல்கின்றன.

நாங்கள் எதைக்கூறினாவும் இந்த நாட்டுக்கு எதிரானவர்களாக காட்டும் இந்த அரசாங்கம், தமிழர்களுக்கு செய்யும் அநீதிகளை வெளிப்படுத்துவோரை பல்வேறு வகையிலும் அச்சுறுத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான நிலையில் ஒரு சிவில் சமூக அமைப்பாக அதனை ஓரு பலமாக அமைப்பாக உருவாக்கி முன்கொண்டு செல்லும். அதன்மீது எந்தவித அச்சுறுத்தலையும் இலங்கை அரசாங்கம் விடுக்காத நிலையேற்படும்.

இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிவரும் பாரியளவிலான நில ஆக்கிரமிப்பு மற்றும் திட்டமிட்ட குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு வடகிழக்கு இணைந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் மிகவும் அவசியமாக கருதப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பாரியளவில் இனப் பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாட்டினை தடுத்து நிறுத்துவதற்கான அல்லது அதனை எதிர்ப்பதற்கான கட்டமைப்பு ஒன்று அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானதோ அல்லது சிங்கள மக்களுக்கு எதிரானதோ அல்ல. மாறாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தங்கள் காணிகளை வளங்களை பாதுகாப்பதற்கான உரிமையாகவே கொள்ளப்படவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டமானது 93வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியாக காணப்படுகின்றது. சுமார் ஆறு வீதத்திற்கு அதிகமான சிங்கள மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் இங்கு குடியேற்றப்பட்ட மக்களாகவே உள்ளனர். இவ்வாறான நிலையில் இந்த சிங்கள மக்களின் வீதத்தினை அதிகரிக்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் முன்நகர்த்தி வருகின்றது.

குறிப்பாக மயிலத்தமடு, மாவதனை மேய்ச்சல்தரை பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்து அதனை தடுக்க நீதிமன்றத்தினை நாடிய நிலையில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் முந்திரிகை நடல் என்னும் திட்டத்தின் பேரில் மேய்ச்சல் தரை காணிகள் அபகரிக்கப்படுகின்றன.

IMG 0104 பறிபோகும் கிழக்கு - மட்டு.நகரான்

இதேபோன்று வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் வளங்கள் கொண்ட உன்னிச்சைக் குளத்தினை அண்டிய காலபோட்டமடு பகுதியில் மேய்ச்சல் தரைக்காணி அபகரிக்கப்படுகின்றது. இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட அலியாரோடை பகுதியில் கவர்மலை,டோராபோரா ஆகிய மலைச்சாரலை அண்டிய பகுதியில் சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் பௌத்த மத்திஸ்தானம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியானது மயிலத்தமடு, மாவதனை மேய்ச்சல்தரை பகுதிக்கு அண்மைய பகுதியாகவும் குடும்பிமலை காட்டுப்பகுதியை சார்ந்ததாகவும் உள்ளது. மிகவும் இயற்கை வனப்புமிக்க பகுதியான இப்பகுதி போராட்ட காலம் தொடக்கம் தமிழர்களினால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்துவருகின்றது.

மிகவும் திட்டமிட்ட வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையின் எல்லைப்பகுதியில் திட்டமிட்ட வகையிலான குடியேற்றங்கள் முன்னெடுக்கப் படுகின்றன. மிகவும் வெளிப்படையாகவே இந்த திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு எதிராக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளினால் குரல் எழுப்பப்படுகின்ற போதிலும், அவை வழமையான அரசியல் குரலாகவே நோக்கப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அல்லது அவற்றினை வெளிப்படுத்துவதற்கு சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றுபட்ட செயற்பாடு தற்போதைய காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.

இந்த செயற்பாட்டினையும் சிங்கள அரசாங்கத்தின் வழமையான செயற்பாடு என நாங்கள் பார்த்துக்கொண்டு வெறும் அறிக்கையினை வெளியிட்டுவிட்டு இருப்போமானால், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பு என்பது பாரிய நெருக்கடிக்குள் செல்லவேண்டிய நிலையேற்படும்.

ஓருபுறம் முஸ்லிம் சமூகத்தவர்களினாலும் மறுபுறம் சிங்கள பேரினவாதத்தினாலும் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியாக திட்டமிட்ட செயற்பாடுகள் காரணமாக தமிழர்களின் பாரம்பரிய பகுதிகள் அழிந்து எதிர்கால சமூகத்திற்கு அவை இல்லாமல் சென்றுவிடும் என்பதுடன், தமிழர்களின் விகிதாசாரத்திலும் பாரிய தாக்கத்தினை செலுத்தும்.

இன்று கிழக்கு மாகாணசபை உட்பட பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளில் தமிழர்கள் சார்ந்த செயற்பாடுகள் அதிகளவில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே உள்ளது. இதிலும் மாகாணசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டமே கிழக்கு மாகாண தமிழர்களின் இருப்பினை இன்று ஓரளவு உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறான நிலையினை இல்லாமல் செய்து கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் வடகிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகம் என்பதை கோரமுடியாத நிலைக்கு கொண்டுசெல்லும் நிலையினை ஏற்படுத்துவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மிகவும் திட்டமிட்டு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவற்றினையெல்லாம் கருத்தில்கொண்டு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி மக்கள் இயக்கம் புத்துயிரளிக்கப்பட்டு, அது பலப்படுத்தப்பட்டு, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிரான முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த தமிழ் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து போராட முன்வரவேண்டும். இதனை நாங்கள் இன்று செய்ய தவறுவோமானால், எதிர்கால சந்ததிக்கு கிழக்கினை நாங்கள் விட்டுச்செல்ல எதுவும் இருக்காது. இதனை உணர்ந்து விரைவாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.