பருவநிலை மாற்றம் கொரோனாவைவிட பெரிய அச்சுறுத்தல் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

கொரோனாவைவிட பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம். இதற்குத் தடுப்பூசிகள் கிடையாது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவாவைச் சேர்ந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஜெபக் சாப்பகெய்ன் இன்று செய்தியாளர்கள் பங்குபற்றிய மெய்நிகர் கருத்தரங்கு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ”1960களில் இருந்து உலகம் நூற்றுக்கும் மேற்பட்ட பேரிடர்களை சந்தித்து விட்டது. இதில் பெரும்பாலானவை பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டவையே. இதனால் 5கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இப்போது கோவிட் – 19 வைரஸ் இருப்பது உண்மை தான். அது நம் குடும்பத்தை, உறவினர்களை, நண்பர்களைப் பாதிக்கிறது. இதனால் உலகம் தற்போது கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. இதனால் 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

இருந்தும் தடுப்பூசி வந்த பின்னர் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் பருவநிலை மாற்றம் அப்படிப்பட்டதல்ல. துரதிஸ்டவசமாக இதற்கு தடுப்பூசி இல்லை.

தொடர்ச்சியான வானிலை மற்றும் பருவநிலை தொடர்பான நிகழ்வுகளின் தீவிரம், சமீபகாலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2019இல் மட்டும் உலகத்தில் 308 இயற்கையான பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 77 சதவீதம் வானிலை அல்லது பருவநிலை சம்பந்தப்பட்டவை. இதனால் 24,400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விகிதம் 1990இல் இருந்ததைவிட தற்போது 35 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று ஜெகன் சாப்பகெய்ன் தெரிவித்தார்.