பரிந்துரைகளை அமுலாக்கத் தவறின் மாற்று நடவடிக்கை – அமெரிக்கா எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில், ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து மனித உரிமைகள் ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தயார் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையால் பகிரங்கப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஐ.நாவின் அறிக்கையை மேற்கோள்காட்டி வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் குழு உத்தியோகபூர்வடுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாக அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.