Home செய்திகள் பயணத்தடையில் பட்டிணியால் தவிக்கும் வவுனியா கற்குளம் மக்கள்

பயணத்தடையில் பட்டிணியால் தவிக்கும் வவுனியா கற்குளம் மக்கள்

கொரோனா வைரஸ்தாக்கத்தை தணிக்கும் முகமாக இலங்கை அரசினால் பயணத்தடை முடக்கநிலை அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா பல கிராமப்புறங்களில் வாழும் தினக்கூலி மக்கள் தொழில்வாய்ப்பின்றி குடும்பத்துடன் பட்டிணியால் வாடிவருகின்றனர்.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவுற்குட்பட்ட சிதம்பரபுரம் கற்குளம் படிவம் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் விறகுவெட்டுதல், மேசன்வேலை, கூலிவேலைகளுக்கு சென்று அதன்மூலம் பெறப்படுகின்ற வருமானத்தில் குடும்பச் செலவை நகர்த்திச் செல்லும் மக்கள் தற்போதைய பயணத்தடை காரணமாக உணவின்றி பட்டிணியால் பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் ஒருபகுதியினர் கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி போன்ற மலையகப் பகுதியில் இருந்து வவுனியாவுக்கு தஞ்சம்புகுந்து குடியேறியுள்ளனர்.

DSC05704 பயணத்தடையில் பட்டிணியால் தவிக்கும் வவுனியா கற்குளம் மக்கள்

இங்கு குடியேறி ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும்  எந்தவிதமான அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தாம் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மின்சாரவசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கைக்குழந்தைகள் முதியவர்களுடன் குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பயணத்தடை இவர்கள் வாழ்வில் பட்டிணியை உருவாக்கியுள்ளது.

அத்தோடு போக்குவரத்துக்காக பஸ்சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதிலும் பல சிரமங்களை இவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

Exit mobile version