பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாக பாவிக்க வேண்டாம் -ஹக்கீம் கோரிக்கை

185 Views

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தவறாகப் பாவித்து  மக்களை  ” வேட்டையாடும்” ஆபத்தை நிறுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம் , பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை வேண்டிக் கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

”சபாநாயகர் அவர்களே,  அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இங்கு குறிப்பிட்ட ஒரு விடயத்தையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். உண்மையில், சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறுகின்ற பாதிப்புக்கள் ஒரு புறமிருக்க, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவித்து, அநேகமான முறைகேடுகள் நடைபெறுகின்றன .ஒரு பக்கத்தில் அரசியல்வாதிகள் வேட்டையாடப்படுகின்றனர், மறுபக்கத்தில் அவரது( கௌரவ நாமல் ராஜபக்ஷ) கல்லூரியிலேயே கற்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களுக்கு நீண்டகாலமாக, பிணை வழங்கப்படாமல், இப்பொழுது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சாட்சிகள் சோடிக்கப்பட்டுள்ளன. அது பற்றிக் காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன இவ்வாறிருக்க, நேற்று ஜெனீவாவில் மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பாவிப்பதைப்பற்றி பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். அதனால் எங்களுக்கு ஜீஎஸ்பீ நிவாரண உதவியும் கிடைக்காமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அது பற்றியும் கவனஞ் செலுத்துவதோடு, சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறுபவை நீதிமன்றங்களுக்குச் சென்ற வழக்குகள் பற்றியவையாகும்.

நீதி மன்றத்திற்குச் செல்லாமல், நிர்வாக ரீதியாக பொலிஸ் திணைக்களத்தின் கீழும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழும், பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீழும் இவ்வாறாக கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அநேக அநீதிகள் நடக்கின்றன.

இங்கே (நீதி)அமைச்சரும் அமர்ந்திருக்கின்றார். ஷானி அபேசேகர அவர்களின் பிணை மனு வழக்குத் தீர்ப்பைப் பார்க்கும்போது, அவருக்குச் செய்த அநியாயத்திற்கு மேன் முறையீட்டு நீதி மன்றம்  அரசாங்கத்தின் காதுகளில் ஓங்கி அறைந்திருக்கின்றது.

சாட்சிகளை புனைந்து , அவருக்குச்  செய்த நாசகாரியத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அவ்வாறாக அரசாங்கத்தின் காதுகளில் பலமாக அறைந்திருக்கிறது.

இவற்றை கவனத்தில் எடுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை முறைகேடாகப் பாவித்து இவ்வாறு வேட்டையாடுவதால் ஏற்பட்டுள்ள வில்லங்கத்தையிட்டு மக்களை இனி வரப்போகும் ஆபத்துகளில் இருந்து விடுவிக்குமாறு அரசாங்கத்தை வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.

Leave a Reply