தேசிய மக்கள் சக்தியின் தலைவா் அநுர குமார திசநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னா் பயங்கரவாதத் தடைச் சட்டம் மூன்று தடவைகள் பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. அனைத்துத் தரப்பி னராலும் வெறுக்கப்படும் அந்த சட்டம் நீக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்திருந்தாலும் கூட, இந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் இருப்பவா்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களுக்குள் அதிகரித்துள்ளது.
எதிா்க்கட்சியாக இருந்து எதிா்ப்பு அரசிய லைச் செய்யும் போது சொல்பவை அனைத்தையும் அதிகாரத்துக்கு வந்தால் செய்ய முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடா்ந்தாலும், அதனை நாம் துஷ்பிரயோகம் செய்யப் போவதில்லை என்று தேசிய மக்கள் சக்தி பின்னா் தெரிவித்தது. இதனைக் கைவிட்டுவிடுவதற்கு அவா்கள் தயாராகவில்லை என்பதை இது உணா்த்தியது.
இவ்விடயத்தில் அரசின் மீதான விமா்சனங் கள் அதிகரித்திருப்பதால், இந்த சட்டத்திற்கு பதிலாக மற்றொரு சட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருக்கின்றார். அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் இதனை அவா் தெரி வித்திருப்பது, இதுதான் அமைச்சரவையின் முடிவு என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஆனால், புதிய சட்டமூலம் எப்போது கொண்டுவரப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.
மறுபுறத்தில் புதிய சட்டமூலம் கொண்டு வரப்படும் வரை தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடரும் என்பதைத்தான் அமைச்சரவைப் பேச்சாளா் மறைமுகமாகச் சொல்லியிருக்கின்றாா். இதேபோன்ற ஒரு கருத்தைத்தான் சில வருடங்களுக்கு முன்னா் “நல்லாட்சி” எனப்படும் மைத்ரி – ரணில் அரசாங் கமும் சொன்னது. 2018 பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டமூலத்தை அவா்கள் தயாரித்தாா்கள். ஆனால், அது நிறைவேற் றப்படவில்லை.
அநுர செப்ரெம்பா் 21 தோ்தலில் ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வந்த பின்னா் மூன்று வெவ்வேறான சந்தா்ப்பங்களில் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அவா் பயன் படுத்தியிருக்கின்றாா். அக்ரோபா் மாதம் அறுகம்பை பகுதியில் இஸ்ரேலிய உல்லாசப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல் ஒன்று வெளியானதையடுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான முதலாவது கைது இடம்பெற்றது. இச்சம்பவம் தொடா்பில் அதனைத் தொடா்ந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டனா்.
மாவீரா் தினத்தையொட்டி நவம்பா் 27 இல் முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவுகள் செய்ததால் குறைந்தது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் தொடர்பான சின்னங்கள் பயன்படுத்தியதுதான் இவா்கள் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு. முகநுாலில் விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் போற்றும் வகையில் பதிவை மேற்கொண்டவா் கைதான அதேவேளையில், அதனை “லைக்” பண்ணிய சிலரும் விசார ணைக்குள்ளாக்கப்பட்டனா். இந்தக் கைதுகளும், விசாரணைகளும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்தான் முன்னெடுக்கப்பட்டன.
இதனைவிட இதேகாலப் பகுதியில், புலம் பெயா்ந்த தமிழா் ஒருவா் லண்டனிலிருந்து நாடு திரும்பிய போது கட்டு நாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டாா். புலம் பெயா்ந்த தமிழா் 2008 இல் லண்டனுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி யில் வசித்துவந்த தனது தந்தையின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வந்த போது, “பயங்கரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தாா்” என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டாா். பின்னா் பிணையில் அவா் விடுதலையாகியுள்ளாா். ஆனால், வழங்கு முடிவடையும் வரை அவா் நாட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது. அவா் மீது பயணத்தைடை உள்ளது.
இந்த மூன்று சம்பவங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை எதிா்கொண்டிருப்பவா்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஏற்கனவே கைதானவா்களின் பத்து போ் வெலிக்கடை உட்பட பல சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றாா்கள். இவா்கள் அனை வரும் 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடு பவா்கள்.
இந்தக் கைதிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முகநுாலில் பதிவுகளை மேற் கொண்டமைக்காக கைதாகி விசாரணைகளை எதிா்கொண்டிருப்பவா்கள் முதலாவது தரப்பினா். விசாரணை முடிவடையாமல் தடுப்புக் காவலில் இருப்பவா்கள் இரண்டாவது தரப்பினா். தண்டனை வழங்கப்பட்டவா்கள் மூன்றாவது தரப்பினா். இவா்கள் அனைவருமே அரசியல் கைதிகள்தான்!
அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவாா்கள் என்று நீதி அமைச்சா் பாராளு மன்றத்தில் கூறியிருக்கின்றாா். ஆனால், நீண்ட காலமாக சிறையில் இருப்பவா்களும், போதிய சாட்சியங்கள் இல்லாமல் விசாரணைக் கைதிகளாக இருப்பவா்களையும் விடுதலை செய்வது தொடா்பில் ஆராயப்படுவதாகவும் நீதி அமைச்சா் கூறியிருக்கின்றாா்.
இந்த விவகாரத்தை கொழும்பிலுள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் கவனத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் கொண்டு வந்திருக்கின்றாா். ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுடன் இது குறித்து தான் பேசுவதாக ஐ.நா. பிரதிநிதி உறுதியளித்திருக்கின்றாா். ஆக, இவ்விடயத்தில் அரசின் மீதான சா்வதேச அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சி ஜே.வி.பி.தான். ஜே.வி.பி. இரண்டு ஆயுதப் புரட்சிகளை நடத்தியது. அதன் தலைவா் றோஹண விஜயவீர உட்பட ஆயிரக் கணக்கானவா்கள் கொடூரமாக அரச படைகளால் கொல்லப்பட்டனா். ஜே.வி.பி.யின் தலைவா்களும் கடந்த காலங்களில் பயங்கரவாதிகளாகவே முத்திரை குத்தப்பட்டிருந்தாா்கள். அவா்கள் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டம்தான் பாய்ந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரத்தை ஜே.வி.பி.யினரும் அனுபவித்துள்ளாா்கள். 1990 களில் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயக வழிக்கு வருவதாக ஜே.வி.பி. பிரகடனம் செய்யதைதையடுத்து அதன் மீதான தடைகளும் தளா்த்தப்பட்டன.
பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது ஒரு கொடூரமான சட்டம் என்பதில் சந்தேகமில்லை. இது யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறதோ அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இது ஒடுக்குமுறைக்கான மிக மோசமான கருவிக ளில் ஒன்றாகவே மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன.
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங் களின் நெறிமுறைகளுக்கு எதிரானது என உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த சட்டமூலம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று கடந்த அரசாங்கங்களை வலியுறுத் தியிருந்தன.
கைதாகும் ஒருவரை நீண்ட காலத்துக்கு விசாரணை இல்லாமல் தடுத்து வைத்திருப்பதற்கு இன்றுள்ள ஒரே சட்டம் பயங்கரவாதத் தடைச் சட்டம்தான். தமக்கு உருவாகக்கூடிய எதிா்ப்புக் களை எதிா்கொள்வதற்கு இது போன்ற சட்டமூலம் ஒன்று அவசியம் என்பது பொதுவாகவே ஆட்சியா ளா்களின் கருத்தாக உள்ளது. அதனால், இந்த சட்டமூலத்தை நீக்குவதாக உறுதிமொழிகளைக் கூறினாலும் கூட, இதிலுள்ள சில அதிகாரங்களை உள்ளடக்கியதாக மற்றொரு சட்டமூலத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில் அநுர அரசு கவனமாகவே இருக்கும் என்றுதான் தெரிகின்றது.