நேற்று (26) மாலை சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சாவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குமிடையில் இடம்பெற்ற காணொளி மூலமான சந்திப்பின் போது 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சிறீலங்கா அரசு பேசுவதை தவிர்க்க முற்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், அவர்கள் சமமாகவும், நீதியுடனும் நடத்தப்பட வேண்டும் எனவும் மோடி தெரிவித்துள்ளார். மேலும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை சிறீலங்கா அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த விடயங்களை தனது அறிக்கையில் குறிப்பிடுவதை சிறீலங்கா அரசு தவிர்த்துவிட்டது.
இதனிடையே, சிறீலங்காவுக்கு 15 மில்லியன் டொலர்களை உதவியாகவும், 400 மில்லியன் டொலர்களை கடனாகவும் வழங்க இந்தியா முன்வந்துள்ளதுடன், சிறீலங்கா அரசு உதவியாக கேட்ட ஒரு பில்லியன் ரூபாய்கள் தொடர்பில் ஆய்வு செய்வதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
சிறீலங்காவுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை மேற்கொண்டுவருவது இந்தியா மீது தமிழ் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.